புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2013


நாங்கள் ஈழத்தமிழர்களா பிறந்தது எங்கள் குற்றமா? - குழந்தைகளோடு கண்ணீருடன் ஜெயநந்தினி
 நக்கீரன் 
"ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ஜெ. அரசு, இலங்கை அகதிகளை சிறப்பு முகாம்களில் வைத்தும் இரண்டு ஈழக் குழந்தைகளை புழல் சிறையில் அடைத்தும் சித்ரவதை பண்ணிக் கொண்டிருக்கிறது'' என ஆவேசமாய் கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவு மாணவர்கள்.
இவர்களை இப்படி கொதிக்க வைத்திருப்பது ஜெயநந்தினி விவகாரம். யார் இந்த ஜெயநந்தினி?
ஈழத் தமிழ்ப் பெண். ஏழே வயதான சிறுவன் பரிதிக்கும் நான்கே வயதான சிறுமி பிருந்தாவுக்கும் தாய். இவரது கணவர் சந்திரகுமார். ஈழத்தின் கடைசி யுத்தத்தின் போது தமிழகம் வந்து, இப்போது பூந்தமல்லி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஜெயநந்தினி கைதாகும் அளவிற்கு என்ன செய்தார்? தன் கணவரை தானும் தன் குழந்தைகளும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆவலோடு பூந்தமல்லி முகாமுக்கு 24ம் திகதி வந்தார். முகாமின் ஆர்.ஐ.யோ இவர் கொடுத்த மனுவை நிராகரித்து "அவரைப் பார்க்க அனுமதி இல்லை' என்றார்.
"ஒரே ஒருமுறை அவர் முகத்தைப் பார்த்துவிட்டுக் கிளம்பி விடுகிறேன்'' என அவர் கெஞ்சிப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. உடனே முகாம் வாசலிலே தர்ணா செய்தபடி குழந்தைகளோடு உட்கார்ந்தார். அப்போதும் முகாம் அதிகாரிகளிடம் மாற்றம் இல்லை.
இதைத் தொடர்ந்து அப்படியே குழந்தைகளுடன் உண்ணாவிரதம் இருந்தார். அவரும் அவரது இரண்டு குழந்தைகளும் சோர்ந்து போனார்கள். அப்போது போலீஸார் வந்தனர். தற்கொலைக்கு முயன்றதாக வழக்கைப் போட்டு ஜெயநந்தினியையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கைது செய்து புழல் சிறையில் கொண்டு போய் அடைத்துவிட்டனர்.
சிறைக்கு தன் குழந்தைகளோடு கிளம்பிய ஜெய நந்தினி ""என் கணவரை மூணு வருஷமா இங்க அடைச்சி வச்சிருக்காங்க. 2010-ல் தான் அவர் தமிழகத்துக்கே வந்தார். அப்படிப்பட்டவரை 2008-ல் புலிகளுக்கு ஆயுதமும் மருந்துகளும் கடத்தியதா பொய்வழக்கை ஜோடிச்சிருக்காங்க. அவரைப் பார்க்கணும்னு பிள்ளைகள் தவிச்சதால் இங்க அழைச்சிக்கிட்டு வந்தேன். ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட ரத்த உறவுகளை சந்திக்க அனுமதி கொடுக்கப்படுது. ஆனா, எந்தத் தப்பும் செய்யாத என் கணவரை பார்க்கவே அனுமதிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
ஈழத்தமிழ் மக்கள் மேல் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கிட்டு சட்டமன்றத்தில் தீர்மானமெல்லாம் போடும் அந்தம்மா, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் முகாமில், ஈழ அகதிகளை கொடுமைப்படுத்தலாமா? இலங்கை அரசும் ராஜபக்சேவும் தமிழ்க் குழந்தைகளைக் கொன்றது போல் எங்க குழந்தைகளை இப்ப சிறைக்கு அனுப்பி ஜெயா போலீஸ் கொஞ்சம் கொஞ்சமா கொல்லப் போகுது. நாங்க ஈழத்தமிழர்களா பொறந்தது எங்கக் குற்றமா?'' என்றார் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே. சிங்கள குண்டுவீச்சில் இடது கையின் இரண்டு விரல்களை இழந்தவர் இவர்.
சிறைக்கு தன் அம்மாவுடன் புறப்பட்ட குழந்தைகள் ""அம்மா பசிக்குதும்மா. நம்பள எங்க கொண்டு போறாங்க?'' என பரிதாபமாகக் கேட்டன.
தன் மனைவியும் குழந்தைகளும் புழல் சிறைக்கு கொண்டு போகப்பட்டதை அறிந்த சந்திரகுமார் துடித்துப் போனார். தன்னிடமிருந்த தூக்க மாத்திரைகளை அள்ளி விழுங்கி மயங்கியவரை அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அட்மிட் செய்துள்ளனர். அவரை  சந்தித்தபோது...
 ""ஜெயலலிதா வெளியில் ஈழ மக்களுக்கு ஆதரவா காட்டிக்கிறாங்க. அது நாடகம். ஈழத் தமிழர்கள் மீது அவங்களுக்கு அக்கறை இருந்திருந்தா எங்களை முகாமில் மிருகங்களைப் போல் அடைச்சி வச்சிக் கொடுமைப்படுத்துவாங்களா? எங்க சொந்த பந்தங்களைக் கூட பார்க்கவிடாம எங்களை மனரீதியா சாகடிப்பாங்களா? ராஜபக்சேவின் முள்வேலி முகாமை விடவும் இந்த அகதிகள் முகாம் கொடுமையான மனவலியைக் கொடுக்குது.
எங்களுக்கு இவங்க விடுதலை கூட தரவேண்டாம் எங்க மனைவி மக்களை எங்களோடு இருக்க அனுமதிச்சாலே போதும். அவங்களுக்கு வெளியில் போக்கிடம் இல்லை'' என தழுதழுத்தார். ஈழ இறுதிப் போரில் குண்டு விழுந்ததில் இவரது வலது தோள்பட்டை முதல் மூட்டெலும்பு வரை நொருங்கிப் போய்விட்டது.
கியூ பிராஞ்ச் தரப்பில் விசாரித்த போது ""இந்த சந்திரகுமார் என்கிற மாஸ்டர் சிரஞ்சீவி, பொட்டு அம்மானைப் போல் முக்கியத் தளபதிகளில் ஒருத்தரா பிரபாகரனிடம் இருந்தவர். அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளைக் கடத்த முயன்றதா 2010-ல் இவரைத் தூத்துக்குடியில் கைது செஞ்சோம். போர்க்களத்தில் புலிகள் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற இவர் உறுதுணையா இருந்திருக்கிறார். இவரை இலங்கை ராணுவமே இவர் சிரஞ்சீவி மாஸ்டர் இல்லைன்னு விடுவிச்சிடிச்சி. இறுதிகட்டப் போரில் குண்டடிப்பட்டு வந்ததில் இருந்தே உடல்நலம் குன்றி இருக்கார். சிறப்பு முகாம் சட்டதிட்டங்கள் கொஞ்சம் கெடுபிடியாத்தான் இருக்கு. நாங்க என்ன பண்ணமுடியும். ஆட்சியில் உள்ளவங்க மனசு வச்சா இவங்களை ரிலாக்ஸா நடத்தலாம்'' என்றனர் கூலாய்.
ஜெயநந்தினியும் அவரது குழந்தைகளும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிறுத்தைகளின் மாணவர் அமைப்பு, பூந்தமல்லி சிறப்பு முகாமில் முற்றுகைப் போராட்டம் நடத்தியது. இதற்கு தலைமை தாங்கிய வன்னியரசு ""இந்த பூந்தமல்லி முகாமில் நான்கே நான்கு ஈழ அகதிகள் தான் இருக்காங்க. இவங்க பாதுகாப்புக்கு 139 போலீஸாரும் 10 சிறப்புப்படை போலீஸாரும் இருக்காங்க. அயலுறவுச் சட்டப்படி ரத்த உறவுகளை சந்திக்க இங்க இருப்பவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனா சட்டத்துக்குப் புறம்பா அவங்களை சந்திக்க அனுமதிக்க மாட்டேங்கறாங்க. காந்திய முறையில் போராடிய ஜெயநந்தினியை கைது செய்த போலீஸ்... அவங்க ஏழு வயது நான்கு வயது குழந்தைகளை எந்த சட்டத்தின் அடிப்படையில் கைது செய் தது?'' என்றார் காட்டமாய். ஜாமீனில் வெளியே வந்த ஜெயநந்தினி ""சிங்களர்கள் எங்களை நிம்மதியா வாழ விடலை. இறுதிக்கட்டப் போரில் தப்பித்து தாய் பூமியான தமிழகத்திற்கு ஓடி வந்தோம். இங்க அதைவிட கொடுமைகள் எங்களுக்கு இழைக்கப்படுது'' என கண் கலங்கினார்.
சிறப்பு முகாம்களில் அடை பட்டிருக்கும் ஈழ அகதிகளின் பொழுதுகள் விடியுமா?

ad

ad