புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2013


இரட்டைக் கொலை: ஸ்தம்பிதமடைந்த பாடசாலையை வழமைக்கு கொண்டு வரமுயற்சி!- கல்விப்பணிப்பாளர் பொதுமகன் மீது தாக்குதல்
செங்கலடியில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் செங்கலடி மத்திய கல்லூரியைச் சோந்த நான்கு மாணவர்கள் சம்பந்தப்பட்டார்கள் என்பதற்காக முழுப் பாடசாலையையும் குற்றம் சாட்ட முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதுலமைச்சரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
செங்கலடி மத்திய கல்லூரியின் நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்காக இன்று அக்கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 7ம் திகதி இடம் பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள். இதனால் பாடசாலை நிருவாகம் முற்றாக சீர்குலைந்திருந்தது.
கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவந்தன.
அதிபர் மற்றும் சில குறிப்பிட்ட ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஓர் சாராரும் அவ்வாறு இடம்பெறக்கூடாது என இன்னொருசாராரும் வாதப் பிரதிவாதங்களை செய்துகொண்டிருந்தார்கள். இதன் வெளிப்பாடாக ஒரு சிலதுண்டுப் பிரசுரங்களும் வெளிவந்தன.
மேற்குறித்த நிலைமைகளை ஆராய்ந்த முன்னாள் முதலமைச்சரும் சி. சந்திரகாந்தன், இன்று  கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மூன்றுகட்டங்களாக இக் கலந்தரையாடல் இடம்பெற்றது முதலாவது அதிபர், ஆசிரியர்களுக்கும்,  இரண்டாவது கூட்டம்; 10ம், 11ம், 12ம், 13ம் தரம் கற்கும் மாணவர்களுக்கும்,  மூன்றாவது கூட்டமாக பெற்றுறோர்களுக்கும் இடம்பெற்றது.
இவ் விசேட கூட்டத்திற்கு சுமார் 2000 பெற்றோர்கள் வருகை தந்நிருந்தார்கள்.
இங்கு தொடாந்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்,
உண்மையில் நடந்நிருக்கின்ற கொலைச்சம்பவமானது ஜீரணிக்கமுடியாத ஒன்று. அதேவேளை இதில் செங்கலடி மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் ஈடுபட்டிருப்பதென்பது மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது. அதேவேளை இவ்வாறான ஓர் சம்பவம் இடம் பெற்றிருக்கிறது என்பதற்காக முழுமையாக பாடசாலை நிருவாகத்தை குற்றம் கூறுவது சாத்தியமான ஓர் விடயம் அல்ல.
எனவே தவறு நடந்திருப்பது உண்மை. எனவே கல்குடா வலயத்திலேயே அதிகப்படியான பெறுபேறுகளை தந்திருக்கின்ற இப் பாடசாலைக்கு இப்படி யொருநிலமை ஏற்பட்டிருப்பது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும்.
எனவே தொடர்ந்து நாங்கள் கல்வியிலே வளர்ச்சி காணவேண்டும். அதற்கு இது போன்ற சம்பவம் ஓர் தடைக்கல்லாக அமைந்துவிடக்கூடாது. இன்றிலிருந்து நாம் அனைவரும் இப்பாடசாலையின் நற் பெயருக்கு கலங்கம் ஏற்படாத வண்ணம் செயற்படுவதற்கு திடசங்கர்ப்பம் பூணவேண்டும்.
அதேவேளை தொடர்ந்து வருகின்ற காலங்களில் இந்தப் பாடசாலை ஏனைய பாடசாலைகளுக்கு ஓர் முன்னுதாரணமான பாடசாலையாகவும் நல்ல பெறுபேறுகளை எங்களது மாவட்டத்திற்கு வழங்கி நற்பெயருடன் திகழ பெற்றோர்கள் ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலைமாணவர்கள், ஏனையோர்கள் அனைவரும் செயல்பட வேண்டும். அதற்கு எனது பூரண ஒத்துழைப்பு என்றும் உண்டு என்பதனைக் குறிப்பிட்டார்.
இதில் கல்குடாவலயக் கல்விப்பணிப்பாளர் சிறிகிருஸ்ணானந்தராஜா, அதிபர் மு.சிறிதரன் பாடசாலை அபிவிருத்திசங்க செயலாளர், ஏறாவூர் பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இன்றிலிலிருந்து இப்பாடசாலையை வழமை நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
செங்கலடியில் கல்விப்பணிப்பாளர் மீது தாக்குதல்!- கல்வியமைச்சை நேரடியாக தலையிடுமாறு வேண்டுகோள்!
செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் மீது பாடசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளியேறிய பொதுமகன் ஒருவர் சேட்டைப் பிடித்து தாக்கியுள்ளார்.
இன்று செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் திருப்தியடையாத பொதுமக்களில் ஒருவரே கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் சிறிகிருஸ்ணானந்தராஜா அவர்களை சேட்டில் பிடித்து தாக்குவதற்கு முற்பட்டதாகவும் அதனை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் செங்கலடியில் நடைபெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் மீது ஏற்பட்டுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக நடைபெற்ற விசேட பொதுக் கூட்டம் பெற்றோர்களினதும், செங்கலடி சிவில் சமூகத்தினதும் கருத்துக்களை உள்வாங்காமல் ஒரு கட்சித் தலைமையின் எதேட்சையதிகாரப் போக்குடன் கூடிய தன்னிச்சையான முடிவுகளை திணித்துள்ளதாகவும் இந்த விடயத்தில் கல்வியமைச்சு உடனடியாக தலையிட்டு பாடசாலைக்கு சிறந்த ஒழுக்காற்றுக் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கலடி மத்திய கல்லூரியின் பாடசாலை அதிபர் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்ற விசேட கூட்டத்திற்கு வருகைதந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சிலர் செங்கலடி பாடசாலை நிர்வாகத்தை காப்பாற்றும் வகையில் செயற்பட்டதாகவும், பாடசாலையில் நடந்த ஒழுக்ககேடான செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதை தவிர்த்து பாடசாலை நிர்வாகத்தை காப்பாற்றும் நோக்குடன் முன்னாள் மாகாணசபை முதலமைச்சர் செயற்பட்டதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தங்களது பிள்ளைகளின் மீது அக்கறை கொண்டு தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூட்டத்திற்கு இன்று ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தபோதும் பொது மக்களின் கருத்துக்களை கேட்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தனது கட்சிக்கூட்டத்தைப் போன்று பாடசாலைக் கூட்டத்தையும் நடத்தியதாக தெரிவிக்கின்றனர்.
முன்கூட்டியே காலை பத்துமணிக்கு பாடசாலை நிர்வாகத்துடன் கூடி பாடசாலையில் எந்த நிர்வாக மாற்றமும் மேற்கொள்ளப்படாது மாணவர்கள் கொலைசெய்தால் அதற்கு அதிபர், ஆசிரியர்கள் பொறுப்புக் கூற முடியாது அதை பெற்றோர்கள்தான் பார்க்க வேண்டும் என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் இந்த பாடசாலையில் எந்த நிர்வாக மாற்றத்தையும் மேற்கொள்ளுவதற்கு முயற்சிக்க வேண்டாமெனவும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் முன்னர் பாடசாலை நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்படும் எனக் கூறிய வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் பாடசாலை நிர்வாகத்தை பற்றியோ, இடமாற்றம் பற்றியோ வாய்திறக்கவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
கூட்டத்தில் பாடசாலையின் ஒழுக்கக் கேடுகள் சம்பந்தமாக பேசுவதற்கு எழுந்த ஆசிரியர் ஒருவரை முன்னாள் முதலமைச்சர் தடுத்து நிறுத்தி பாடசாலை நிர்வாகத்தை காப்பாற்றியதனால் கோபம்கொண்ட மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன் தாங்கள் கல்வியமைச்சில் நேரடியாக புகார் தெரிவிக்கப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பெற்றோர் ஒருவரே கூட்டம் முடிந்து வெளியேறிய கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஸ்ரீ கிருஸ்ணராஜா அவர்களை சேட்டில் பிடித்து தாக்குவதற்கு முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த பெற்றோர் ஒருவர், இந்தக் கூட்டம் பாடசாலை நிர்வாகத்தை காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்டதே தவிர இது பாடசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப்பற்றி சற்றும் கவனம் செலுத்தப்படவும் இல்லை அதுகுறித்து எங்களிடம் கேட்கவும் இல்லை நாங்கள் வந்து அமர்ந்து விட்டு எழும்பிச் செல்கின்றோம் எங்களை பேசவிடவில்லை என்றார்.
இது குறித்து கல்வியமைச்சு கவனம் செலுத்தி விசேட குழுவொன்றை படசாலைக்கு அனுப்பி பாடசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுக்க சீர்திருத்தங்கள், சட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பாடசாலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ad

ad