21 ஜூன், 2013

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புறக்கணிப்பதாக பாமக அறிவிப்பு 
 

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து 21.06.2013ல்சென்னையில் நடக்கும் கட்சியின்
செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்துஅறிவிக்கப்படும் என்று பாமக தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பதில்லை. மாநிலங்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக பாமக அறிவித்துள்ளது.

பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு, மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பாமக எம்எல்ஏக்கள் மா.கலையரசு, கணேஷ் குமார் உட்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 550 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மரக்காணம் கலவரத்திற்கு நீதிகேட்டு போராடிய ராமதாசை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவினர் மீது பொய் வழக்குப்போட்டு குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவதற்கும், சிறையில் இருக்கும் பாமக எம்எல்ஏ ஜெ.குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பதில்லை. தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.