புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

ஒபாமாவின் நியமனங்கள் இலங்கைக்குத் தலைவலி!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள சில மாற்றங்கள் இலங்கையின் மீது தாக்கங்களைச் செலுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் அதிகாரக் கட்டமைப்பில் இடம்பெறும் மாற்றங்கள் இலங்கையின் மீது தாக்கத்தைச் செலுத்துவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.
உலகமயமாதலின் விளைவாக இன்று ஒரு நாட்டில் இடம்பெறும் மாற்றங்கள் இன்னொரு நாட்டின் மீதோ, பல நாடுகளின் மீதோ தாக்கங்களை ஏற்படுத்துவது இயல்பானதாகிவிட்டது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் தற்போது அவ்வளவு நல்ல நிலையில் இருப்பதாக கூற முடியாவிட்டாலும் அமெரிக்க அதிகார மட்டத்தில் ஏற்படுகின்ற ஒவ்வொரு மாற்றங்களையும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.
ஏனென்றால் இந்த மாற்றங்கள் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலராக ஜோன் கெரி பதவியேற்ற பின்னர் ஒபாமா நிர்வாகத்தில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த முக்கியமான மாற்றங்களுடன் தொடர்புடைய மூவர் இலங்கைக்குப் பரிச்சயமானவர்கள்.
கடந்த காலங்களில் இலங்கை விவகாரத்தைக் கடும் போக்குடன் அமெரிக்கா அணுகுவதற்குக் காரணமானவர்கள்.
அதைவிட அமெரிக்க ஜனாதிபதி ஒபாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
ஒபாமாவின் முதலாவது பதவிக் காலத்தில் இராஜாங்கச் செயலராக இருந்து ஹிலாரி கிளின்டன் இலங்கை விவகாரத்தைக் கடும்போக்குடன் கையாள்வதற்குக் காரணமாக இருந்தவர் என்ற கருத்து பொதுவாகவே உள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல், நிலையான அமைதி, அரசியல் தீர்வு, நல்லிணக்கம் போன்றவற்றை ஹிலாரி கிளின்டனின் நிர்வாகம் கடுமையாக வலியுறுத்தி வந்தது. அவரது காலத்தில் தான் 2012 மார்ச்சில் இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஒபாமாவின் முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர் ஹிலாரி தொடர்ந்தும் அப்பதவியை வகிக்கப் போவதில்லை என்று அறிவித்த போது இலங்கை அரசாங்கம் ஒருவகையில் நிம்மதியடைந்தது.
அதுவும் ஜோன் கெரி பதவிக்கு வந்தால் கொழும்புக்குச் சாதகமான நிலை ஏற்படும் என்ற கருத்து வலுவாகவே இருந்தது. ஏனென்றால் இலங்கை தொடர்பான அணுகுமுறையை அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தொனிப்பட ஜோன் கெரி சமர்ப்பித்த அறிக்கை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால் தான் ஜோன் கெரியின் வருகை தம்மீதான அழுத்தங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பை கொழும்பிடம் ஏற்படுத்தியிருந்தது.
எனினும் ஜோன் கெரி பதவியேற்று ஐந்து மாதங்கள் முடிந்து போன போதும், அமெரிக்காவின் அணுகுமுறையில் எந்த மாற்றங்களையும் அவதானிக்க முடியவில்லை.
ஜோன் கெரி பதவிக்கு வந்த பின்னர் தான் இலங்கைக்கு எதிரான இரண்டாவது தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்திருந்தது.
இலங்கைக்கு சாதகமானவராக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோன் கெரி அவ்வாறு நடந்து கொள்ள முடியாததற்குக் காரணம் ஒபாமாவைச் சுற்றியுள்ளவர்களின் ஆதிக்கம் தான்.
ஹிலாரியின் காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டவர்களான சூசன் றைஸ் மற்றும் சமந்தா பவர் போன்றவர்களின் கை தொடர்ந்தும் இராஜாங்கத் திணைக்களத்தில் ஓங்கியே இருந்தது. அதைவிட தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான உதவிச் செயலராக இருக்கும் ரொபர்ட் ஓ பிளேக்கும் கூட இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைக்கும் எண்ணம் கொண்டவராக இருக்கவில்லை.
இது தான் ஜோன் கெரியின் நிர்வாகம் இலங்கை மீதான அழுத்தங்களை குறைத்துக் கொள்ளாததற்குக் காரணம்.
சூசன் றைஸ் ஐநாவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருப்பவர்.  இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானங்கள் இவரது கண்காணிப்பிலேயே கொண்டு வரப்பட்டன. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு இவர் முக்கியமான காரணி.
ஒபாமாவின் நெருங்கிய நண்பரான இவர் தான் ஹிலாரிக்கு பின்னர் இராஜாங்கச் செயலராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்காசி விவகாரத்தில் இராஜாங்கத் திணைக்களத்தை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் இவர் அந்தப் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதனால் தான் ஜோன் கெரிக்கு யோகம் அடித்தது. இப்போது இவரை ஒபாமா வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளார்.
இது முக்கியமானதொரு மாற்றமாக கருதப்படுகிறது.
அடுத்தவர் சமந்தா பவர். ஊடகவியலாளராக பேராசிரியராக இருந்து ஒபாமாவின் ஆலோசகராக மாறியவர்.
ஐரிஷ் வம்சாவழிப் பெண்ணான சமந்தா பவர் ஒபாமாவின் நெருங்கிய நண்பர் என்பது மட்டுமன்றி அவரது கணவர் ஒபாமாவின் பல்கலைக்கழகத் தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒபாமாவின் வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பவராகக் கருதப்படும் சமந்தா பவர் 1990களில் பொஸ்னிய போரின் போது ஒரு ஊடகவியலாளராக பணியாற்றியவர். இவர் தனது பொஸ்னிய போர் அனுபவங்களை வைத்து எழுதிய நூலுக்கு புலிட்சர் விருதும் கிடைத்தது.
இந்த நூல் இனப்படுகொலைகளை அமெரிக்கா தடுக்க தவறிவிட்டதை கடுமையாகச் சாடும் வகையில் எழுதப்பட்டது.
ஜனாதிபதியாவதற்கு முன்னரே இவர் ஒபாமாவின் ஆலோசகராக இருந்து வந்தவர். இனப்படுகொலை விவகாரங்களைக் கையாளும் நிபுணராக மனித உரிமைகள் விவகாரத்தில் உறுதியான போக்கைக் கடைப்பிடிப்பவராக இருக்கும் சமந்தா பவர் இதுவரை ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்து வந்தவர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்களில் அமெரிக்கா கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒபாமாவுக்கு வலியுறுத்திய இவர் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பவர்.
சூசன் றைஸ் இராஜாங்கச் செயலராக நியமிக்கப்பட்டால் ஐநாவுக்கான தூதுவராக சமந்தா பவர் பொறுப்பேற்பார் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான்.ஆனால் இராஜாங்கச் செயலராக சூசன் றைஸ் பொறுப்பேற்க முடியாததால் சமந்தா பவர் ஐநா தூதுவர் பதவியைப் பெறுவது சில மாதங்கள் தள்ளிப் போயுள்ளது.
ஐநா தூதுவரான பின்னர் சமந்தா பவர் மனித உரிமை விவகாரங்களில் கூடுதலான அக்கறையைச் செலுத்துவார் என்று அமெரிக்க ஊடகங்கள் கணிக்கின்றன.
தற்போது அவர் முன்பாக முக்கிய பிரச்சினையாக சிரிய விவகாரம் இருந்தாலும், இலங்கை விவகாரத்திலும் அவர் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அடுத்து இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள மற்றொரு மாற்றம் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலராக உள்ள ரொபர்ட் ஓ பிளேக்கிற்குப் பதிலாக இந்திய வம்சாவழிப் பெண்ணான நிஷா தேசாய் பிஸ்வால் பொறுப்பேற்கவுள்ளதாகும்.
2009ல் இலங்கைத் தூதுவர் பதவியில் இருந்து சென்ற பின்னர் பிளேக் தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களைக் கையாண்டு வந்தார்.
அவரது கூடுதல் கவனம் இலங்கை மீது இருந்து வந்தது. ஆனால் புதிய உதவி இராஜாங்கச் செயலராகப் பொறுப்பேற்கவுள்ள நிஷா தேசாய் யூ. எஸ். எய்ட்டில் தான் பணியாற்றியவர். அவரது போக்கு எத்தகையதாக இருக்கும் என்று கணிக்க முடியாது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள இந்த மாற்றங்கள் இலங்கையில் தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் எப்போதுமில்லாதளவுக்கு இப்போது நெருக்கமடைந்துள்ளது.
இது அமெரிக்காவின் பார்வையில் அதன் நலனுக்கு எதிரானது.
இந்தியப் பெருங்கடலும் பசுபிக் பிராந்தியமும் அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கியமானவை.
இத்தகைய பின்னணியில் அமெரிக்காவுடனான உறவுகள் ஒரு பக்கத்தில் தேயந்து கொண்டிருக்க சீனாவுடன் இலங்கை நெருங்கிப் போவதை அமெரிக்கா விரும்பாது.
ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் றைஸ் பொறுப்பேற்கவுள்ள நிலையில் சீனாவுடன் பாதுகாப்பு ரீதியாக நெருங்கி வரும் இலங்கையை அவர் புறந்தள்ளிச் சிந்திக்க முடியாது.
அதேவேளை மனித உரிமைகள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்ற சமந்தா பவர் ஐநாவில் இலங்கை விவகாரத்தை இறுக்கிப் பிடிக்கின்ற ஒருவராக மாறலாம்.
சீனாவுடன் கொண்டுள்ள உறவை வைத்து இந்தியாவை மடக்கிப் போடுகின்ற உத்தியைக் கையாளும் கொழும்புக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஏற்படப் போகும் இந்த மாற்றங்கள் திண்டாட்டத்தையே ஏற்படுத்தக் கூடும்.
ஹரிகரன்

ad

ad