புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

மேனன் - மஹிந்த சந்திப்பு! கூட்டமைப்பை தெரிவுக்குழுவில் பங்கேற்க வலியுறுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.
இந்தியா, இலங்கையின் 1987ம் ஆண்டு ஒப்பந்தப்படி, தமிழர்கள் வசிக்கும் மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
ஆனால், அதிகாரங்களை குறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சமீபத்தில் டெல்லி சென்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் ஆலோசனை நடத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் நேற்று கொழும்பு வந்துள்ளார்.
அவர் இன்று  ஜனாதிபதியை சந்தித்து 13வது திருத்தம் தொடர்பான இந்தியாவின் கருத்துக்களை தெரிவித்து ஆலோசிக்க உள்ளார்.
13வது திருத்தச் சட்ட மூலத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், மாகாண சபைத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று நேற்று (08) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தபோது மேனன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவுடனான இன்றைய சந்திப்பின்போதும் இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்படும் என மேனன் உறுதியளித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
2ம் இணைப்பு
தமிழ் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும்: சிவ்சங்கர் மேனனிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு
அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசுவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த பொறிமுறையாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுக்கும்  ஜனாதிபதிக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அலரிமாளிகையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார்.
13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அதிகாரங்களை ஏனைய மாகாணங்களுக்கும் வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
13வது திருத்தத்தை சகலரும் ஏற்றுக்கொள்வதென்றால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது முக்கியமானதாகும்.
அத்துடன், தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் இணைப்பு
13ஐத் தாண்டிய தீர்வுத் திட்டத்தை இலங்கை முன்னெடுக்க வேண்டும்! ஜனாதிபதியிடம் மேனன் எடுத்துரைப்பு
இலங்கை அரசியல் யாப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்ந்தளிப்பையும் தாண்டிய அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்படுவது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மதித்து நடத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
தவிர இலங்கையின் வட மாகாண சபைக்கு தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், நம்பத்தகுந்த விதத்திலும் நடத்தப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை தலைவர்களிடம் இவற்றைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து சமூகத்தவரும் சமத்துவமும், நீதியும், சுயமரியாதையும் பெற்று வாழ்வதை உறுதிசெய்யும் விதமான அரசியல் தீர்வையும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்ந்தளிப்பையும், தேசிய நல்லிணக்கத்தையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் சிவசங்கர் மேனன் இலங்கை தலைவர்களிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தனது பயணத்தின்போது இலங்கை ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பாதுகாப்புச் செயலர், எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழர் கட்சி பிரதிநிதிகள் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை சிவசங்கர் மேனன் சந்தித்திருந்ததாக அச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

ad

ad