புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2013



எங்கே விஜயகாந்த்? சீறிய கார் - குழம்பிய போலீஸ்! அர்த்தநாரீஸ்வரரை வேண்டிக்கொண்ட கட்சியினர்!
ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மாயமானார் விஜயகாந்த். அரசு அதிகாரிகளும், பாதுகாப்பு வந்த போலீசாரும் என்ன செய்வதன்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

தனது சட்டமன்ற தொகுதியான ரிஷிவந்தியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை (11.07.2013) காலை சென்றார். 
பகண்டை கூட்டுரோடு ஒன்றிய அலுவலத்திற்கு அருகில் புதியதாக கட்டப்பட்ட சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா, தோப்பிச்சேரி, அத்தியூர், நூர்ஓலை, சேரன்தாங்கல், வானாபுரம் ஆகிய ஊர்களில் அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை கட்டிடம், பஸ் நிறுத்தம் போன்றவைகளை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
திட்டமிட்டப்படி தோப்பிச்சேரியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த விஜயகாந்த், பின்னர் 11.15 மணி அளவில் பகண்டை கூட்டுரோட்டில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம், 51 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ்அடுப்பு, குக்கர் வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய மாவட்டச் செயலாளரும், தேமுதிக எம்எல்ஏவுமான வெங்கடேசன், இங்கு வழங்கப்பட்டிருக்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கேப்டன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார் என்றார்.
வழக்கமாக தான் சென்று கலந்துகொள்ளும் நிகழ்ச்சி மேடைகளில் மைக்கை பிடிக்கும் விஜயகாந்த், இந்த மேடையில் மைக்கை பிடிக்கவில்லை. 
அதற்கு பதிலாக, புதியதாக கட்டி திறக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தேமுதிக நிர்வாகிகள், மரக்காணம் மற்றும் தருமபுரி சம்பவங்கள் பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
பின்னர் விஜயகாந்த் பேசுகையில்,
இந்த ஆட்சியில் சட்டமன்றம் முதல் சாதாரண பகுதி வரை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மத்திய அரசு உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வருகிறது. அதைப் பார்த்து ஜெயலலிதா தேர்தல் டெண்ட் என்று சொல்லுகிறார். ஆனால், இவர்கள் ஆட்சியில் மலிவு விலை உணவகம், மலிவு விலை குடிநீர், மலிவு விலை காய்கறி கடை என்று திறக்கிறார்கள். இது இவர்கள் தேர்தல் டெண்ட்தானே. 
டாஸ்மாக் கடையில் பாக்கெட் தண்ணீரை 3 ரூபாய் விற்கிறார்கள். டாஸ்மாக் கடையில் அதிக வருமானம் வரவேண்டும் என்பதற்காகத்தான் இதனை செய்கிறார்கள். 
தேர்தலுக்கு நாள் இருக்கிறது. கூட்டணி பற்றி இப்போது பேசவில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும். வரும் பாராளுமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்திலும் எதிரோலிக்கும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
கேள்வி: மாநிலங்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்தீர்களே?
பதில்: நாங்கள் தோல்வியடைவில்லை. நாங்கள் போட்டியிட்டதால்தான் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். 
கேள்வி: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நீங்கள் கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டதே. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?
பதில்: அது எங்கள் கட்சி பிரச்சனை. அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 
கேள்வி: உங்கள் மீது வழக்கு போட்டார்கள். அடுத்து உங்கள் கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீது போட்டதுடன், கட்சியின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் மீதும் தற்போது வழக்குகள் போடப்படுகிறதே?
பதில்: எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்க தயார். அவதூறு வழக்குகளை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி பெறுவோம் என்றார்.
தொடர்ந்து அத்தியூர், நூர்ஓலை, சேரன்தாங்கல், வானாபுரம் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். அதிகாரிகளும், போலீசாரும் தயாராக இருந்தனர். 
பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்ததும், தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு, 12 மணி அளவில் செல்போன் அழைப்பு வந்தது. அதனை மாவட்டச் செயலாளர் வெங்கடேசனிடம் கொடுத்து பேச சொன்னார். செல்போனில் பேசிய அவர், விஜயகாந்த் காதில் ஏதோ சொன்னார். உடனே அங்கிருந்து தனது காரில் மின்னல் வேகத்தில் புறப்பட்டார் விஜயகாந்த்.
அத்தியூருக்குத்தான் விஜயகாந்த் செல்கிறார் என நினைத்த போலீசாரும், அதிகாரிகளும் அங்கு அவரது காரை பின்தொடர்ந்தனர். ஆனால் அந்தியூரை கடந்த விஜயகாந்த் கார் நிற்காமல் சென்றது. அவரது கார் எங்கே சென்றது, விஜயகாந்த் எங்கே சென்றார் என்று போலீசாரும், அதிகாரிகளும் குழப்பம் அடைந்தனர். 
தேமுதிகவில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலர், தங்களை கடத்த முயற்சி நடப்பதாக கொடுத்த புகாராலும், நாகர்கோவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் ஆஜராக வந்தபோது, விஜயகாந்த் வழக்கறிஞருக்கும், அரசு வழக்கறிஞருக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து, அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த் மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், விஜயகாந்த அந்த இடத்தை விட்டு வெளியேறிஇருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பகண்டை கூட்டுரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த், அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்ல இருந்ததால் பரபரப்புடன் இருந்தது. இந்த பரபரப்பில் அவர் மாயமானது மேலும் பரபரப்பை ஏற்படுத்த அவரது கட்சியினர் அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வேண்டிக்கொண்டனர்.

செய்தி, படங்கள்: எஸ்.பி.சேகர்

ad

ad