புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2013

அகிம்சை ரீதியான உலகம் விரும்புகின்ற போராட்ட வடிவம் தான் வட மாகாண சபைத் தேர்தல்!
நாளை இந்த பிள்ளைகள் இந்த மண்ணிலேயே வளர்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை எடுத்துக் கூறுகின்ற வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த மண்ணிலுள்ளவர்களிடம் தேசிய உணர்வு நிறுத்தி வைத்திருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். 
நேற்று யாழ். ஆனைக்கோட்டை சனசமூக நிலையத்தின் சிறுவர் விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இங்கு காலம் காலமாக வாழ்கின்ற மக்கள் தமிழ்த் தேசியத்தோடும் இன மானத்தோடும் இன விடுதலைக்காகவும் போராடியிருக்கின்றார்கள். இப்பொழூதும் கூட எங்கள் இனம், தமிழர்களாகிய நாங்கள் பேசுகின்ற மொழி, நாம் இந்த மண்ணில் பிறந்து வளந்தவர்கள், இவ்வாறு இந்த மண்ணில் நாங்கள் வாழ வேண்டும். இங்கு நிம்மதியாக இருக்க வேண்டும். இதனை யாரும் தடுக்கக் கூடாது என்ற சிந்தனையோடு வாழுகின்றவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தான் தமிழர்கள்.
ஆனால் யாரோ இங்கு வருகிறார்கள் நீ எங்கு செல்கிறாய். உனது அடையாள அட்டையை காட்டு, காலையில் இங்கு வா, மாலையில் அங்கே வா எனக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கையில், எங்களுடைய காணியை, மொழியைப் பறிக்கிறார்கள், இவ்வாறு தொடருவதால் எங்களை இங்கு இருக்க விடுகிறார்கள் என்ற எண்ணம் அந்த சிந்தனை எங்களிடம் பரவலாக இருக்கின்றது. எங்களுடைய நிலங்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றார்கள் .சீருடையுடன் வந்து புகுந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் துப்பாக்கிகளுடன் வருகின்றார்கள். இங்கு பிள்ளைகளுக்குத் துப்பாக்கி வேண்டாமென்று நாங்கள் சொல்கின்றோம். ஆனால் அவர்கள் துப்பாக்கிகளை எங்கள் பிள்ளைகளுக்கு காட்டுகின்றார்கள். நாங்கள் துப்பாக்கியை விரும்பவில்லை. துப்பாக்கி வேண்டாமென்கிறோம். ஆனால் அவர்கள் தான் எங்கள் பிள்ளைகளுக்குத் துப்பாக்கியைக் காட்டுகிறார்கள். வளருகின்ற இந்த சிறிய குழந்தை வளர்ந்து வருகின்ற போது நானும் இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தினால் என்ன என்றே நினைக்கும்.
இந்த மண்ணென்பது தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மண். இதிலே எங்கள் தேசிய உணர்வுடன் கூடிய எங்கள் தாயக மண்ணென்று எமது இருப்பை சிந்திக்கின்றவர்கள். நாங்கள் தமிழீழம் கேட்டுப் போராடியவர்கள். ஆனால் எங்களால் அதை அடைய முடியவில்லை. போராட்டத்தின் பல சக்திகள் வடிவங்களைத் தேர்ந்தெடுத்து நாம் போராடியிருக்கின்றோம். இப்பொழுது உலகத்தோடு ஒரு அகிம்சை ரீதியான உலகம் விரும்புகின்ற னநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம். அதன் ஒரு வடிவம் தான் இந்த மாகாண சபைத் தேர்தல்.
நாளை இந்த மண்ணிலே எங்களால் வெளியிலே என்னத்தைச் சொல்ல முடிமோ அதனைச் சொல்வதற்கான வாய்ப்பாக நாம் இந்த மாகாண சபைத் தேர்தலைப் பார்க்கின்றோம்.
2009 ஆம் ஆண்டு கொத்துக் கொத்தாக சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் கொன்றொழிக்கப்பட்டார்கள் காணாமல் போனார்கள். இதற்கு சர்வதேச விசாரணை தேவை. இந்த மண்ணிலே சிங்கள இனம் தமிழினத்தை அழித்தது. இத்தகைய இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை பகிரங்கமாகக் கேட்கிறோம். இந்நிலையில் இத் தேர்தலில் நீங்கள் அளிக்கப் போகின்ற வாக்குகள் அதற்கான பெறுமதியாகத்தான் இருக்கும்.
நாங்கள் எங்களுடைய மண்ணிலே அதாவது வரலாற்று ரீதியாக நாம் பிறந்து வளர்ந்த மண்ணிலே எமது மரபு வழித் தாயகமும் தமிழ்த் தேசியம் என்கின்ற அடையாளமும் அழிக்கப்படாமல் எங்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
இதற்காகத் தான் இத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இவர்களுக்கு பதவிகள் தேவையில்லை. அவர்களுக்கு இருப்பது போதும். நாங்கள் பதவிகளுக்காக அலைகின்ற இனமும் அல்ல. எங்கள் இனம் படுகின்ற துன்பங்களை அழிவுகளை வெறுமனே வீதிகளுக்காகவும் கட்டிடங்களுக்காகவும் எங்கள் இனங்களை தெருவிலே விடுகின்றவர்களாக நாங்கள் வாழ முடியாது. வரலாறு புதியவர்களை பிரசுரித்திருக்கின்றது. அதில் ஒரு பாதையாக விக்கினேஸ்வரன் வந்திருக்கின்றார். இதில் எங்களுக்கு விக்கினேஸ்வரன் கிடைத்துள்ளது நல்லதொரு சந்தர்ப்பம்.
இலங்கையிலேயே உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்தவர் இந்த விக்னேஸ்வரன். இந்நிலையில் இவருடைய தெரிவு என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற நல்லதொரு வரப்பிரசாதம். அவர் இந்த மண்ணிலே ஒரு முதலமைச்சராக இருக்கப் போகின்றார்கள் என்றால் ஏதோ எங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்று நாங்கள் பொய் சொல்லவில்லை.
இவர் இந்த மண்ணை அடியாகக் கொண்டவர். இந்த மண்னுக்கு சொந்தக்காரர். ஆகவே அவரை நாங்கள் எல்லாக் கட்சிகளுமாகத் தேர்ந்தெடுத்தோம். தமிழர்கள் ஒட்டுமொத்தமாக விரும்பியெடுத்தோம். அதானால் தான் இந்த மண்னுக்கான அறிவாளியை சட்டவாக்க சிந்தனையாளனை நீதியரசரை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நாங்கள் நிறுத்தியுள்ளோம்.
இவர்களுக்கு மக்களாகிய நீங்கள் உங்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும். இந்நிலையில் இன்னுமொருவரும் இங்கே இருக்கின்றார். இங்கு பல முறை அச்சுறுத்தப்பட்ட மாநகர சபை உறுப்பினரான விந்தன் கனகரட்னம். இவர் இன்று உயிரோடு இருப்பதே ஆச்சரியமானது. ஏனெனில் பல தடைவ அச்சுறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டும இருக்கின்றார். இந்த அராஜகங்கள் இல்லாமல் போக வேண்டும். ஆகவே நாங்கள் இந்த மண்ணிலே வாழ்வதற்கு வாழ்வியல் உரிமையைப் பெறுவதற்காகத் தான் தங்களுடைய உயிரைக் கொடுக்கவும் தயாராக வந்திருக்கின்றார்கள்.
இந்த மண்ணிலே செய்யப்பட்ட்டிருக்கின்ற தியாகங்களை எல்லாம் மறந்து வெறுமனே காப்பெற் வீதிகளுக்காகவும் வெறும் கட்டிடங்களுக்காகவும் விலை போகப் போகின்றோமா. அல்லது தமிழினம் இந்த மண்ணில் வாழ்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கின்ற தேர்தலில் எங்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத் தேர்தலானது எங்களது கௌரவத்தின் மீதான, இருப்பின் மீதான தேர்தல். இதன் மூலமாக நாங்கள் ஒரு கருத்துக் கணிப்பை உலகத்திற்குச் சொல்ல நினைக்கிறோம். அதாவது எங்களுக்கு நிரந்தரமான கௌரவமான நீடித்து நிலைக்கக் கூடியதொரு தீர்வு தேவை. அந்தத் தீர்வுக்காக தமிழர்கள் ஒரு அணியாக இருக்கின்றார்கள். இதற்காக கூட்டமைப்புடன் இணைந்திருக்கின்றார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு சொல்வதற்காகவெ போட்டியிடுகின்றோமே தவிர இது தீர்வுக்காக அல்ல.
நாங்கள் என்ன செய்கிறோமென கேட்கின்றவர்கள் அவர்கள் என்ன செய்கின்றனர்கள் என்பதனை முதலில் தெரிவிக்க வேண்டும். தமழ் மக்களது மண்ணை கொள்ளையடிப்பதும். அதனை விற்று பிழைப்பு நடத்துவதையும் தான் செய்து வருகின்றனர். இதனை நாங்கள்தான் சிந்திக்க வேண்டும். நல்ல சிந்தனைகளுடன் வாழ்கின்றவர்கள் இங்கு இருக்கின்றார்கள். இந்நிலையில் நாளை இந்த மண் என்பது தமிழனுடைய மண்ணாக இருக்க வேண்டும். ஏனெனில் எமது மண்ணை பறிக்கின்றதும் அபகரிக்கின்றதுமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தடுப்பதற்கு எமக்கொரு ஆட்சி முறை வேண்டும். இதற்காகத் தான் வடக்கு தேர்தலில் போட்டியிடுகின்றோம். நாங்கள் தேர்வு செய்கின்ற ஒவ்வொருவரும் இலட்சியக் கனவுகளைச் சுமந்தவர்கள். அதாவது இன்று இங்கு வந்திருக்கின்ற அனந்தி என்பவரது கணவரை கண்முன்னெ இராணுவத்தினரிடம் அவரே கொடுத்திருக்கின்ற நிலையில் காணவில்லை எனக் கூறப்பட்டிருக்கின்றது.
இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகம். ஆகவே உலகமே எங்களுக்கு நியாயம் சொல்,எங்கள் இனம் அழிய வேண்டுமா? வரலாறு அழிக்கப்பட வேண்டுமா? சர்வதேசம் எங்களுக்கு என்ன சொல்லப் போகிறது.
அதற்கானதொரு கருத்துக் கணிப்பாகத்தான் இத் தேர்தலை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் இனத்தின் இருப்புக்காவும் வாழ்வுக்காகவும் முடிந்தளவு உலகம் விரும்புகின்ற உலகம் நேசிக்கின்ற ஜனநாயக வழியில் நேர்த்தியுடன் கடைப்பிடிக்க தயாராகத் தான் இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் மண்ணிலே சுதந்திரமாக நீதியாக நிம்மதியாக வாழ்வதற்கு இணைந்த போராடுவோம். அந்த போராட்டத்தின் ஒரு வழியாக பாதையாக கருத்துக்கணிப்பாக இந்த வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கிறோம். இதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வேட்பாளார் விந்தன் கனகரத்தினம் மற்றும் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad