புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2013

வடக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு ஐ.நா.விடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரவுள்ளது! சிங்கள இணையத்தளம் தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவி நீக்கம் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் வடக்கிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களையும், தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டம் தீட்டியுள்ளதாகவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்பின்னர் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கும் வகையில் '''No fly Zone'' என வடக்குப் பிராந்தியத்தை ஐக்கிய நாடுகள் சபையினால் பெயரிட வைப்பதற்கான முயற்சிகளையும் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகளில் புலம்பெயர் தமிழர் அமைப்பான குளோபல் தமிழ் பேரவை ஈடுபட்டுள்ளதாம். அத்துடன், இதுகுறித்து வலியுறுத்த வேண்டுமென பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனிடம் கோரிக்கையொன்றையும் இந்த அமைப்பு முன்வைக்கவுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் வடக்கில் மத்திய கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட புரட்சியைப் போன்று அரசாங்கத்திற்கெதிரான பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ்க் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறான செய்திகளை பரப்பி, சரிந்துவரும் ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கான ஆதரவை நிலைநிறுத்தும் முயற்சியாக இவ்வாறான செய்திகளை மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு சார்பான சிங்கள ஊடகங்கள் பரப்பக்கூடும் என தமிழ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள், தமிழீழம், தமிழர் போராட்டம், சர்வதேச அழுத்தம் என்ற செய்திகளையும், சொற்பதங்களையும் பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத அரசியல் நடத்தும் முயற்சியாகவே இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த இணையத்தளம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரினால் நிர்வகிக்கப்படும் இலங்கையின் பிரபல சிங்கள இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad