புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  ரத்து செய்தார்.



இந்திய கடல் பகுதிக்குள் அனுமதியின்றி ஆயுதங்களுடன் நுழைந்ததாக கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவின் அட்வன்போர்ட் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு ஓகியோ ஆயுதக் கப்பலை கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.


  மேலும், கப்பலில் இருந்த 25 பாதுகாப்பு வீரர்கள், கேப்டன் உள்பட 10 மாலுமிகள் ஆகிய 35 பேரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீசார் கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.  இந்திய கடல் பகுதிக்குள் அனுமதியின்றி ஆயுதங்களுடன் நுழைந்தது தொடர்பாகவும், மீனவர்களிடம் திருட்டுத்தனமாக 1500 லிட்டர் டீசல் வாங்கியதாகவும் 35 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், வெளிநாட்டைச் சேர்ந்த 23 பேர் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதான கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கும் ஜனவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் உள்ளது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் கடந்த 26-ம் தேதி சிறையில் உள்ள 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி முதலாவது நீதித்துறை நடுவர் கதிரவன் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி க்யூ பிரிவு போலீஸார் தரப்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் டிசம்பர் 27-ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெ. கிருஷ்ணமூர்த்தி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.
க்யூ பிரிவு போலீஸார் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை உள்ள வழக்கில் மட்டுமே 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அமெரிக்க கப்பல் ஊழியர்கள் மீதான வழக்கு சிறப்பு வழக்கு என்பதால் 90 நாள்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். எனவே, 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வாதங்கள் குறித்து ஆராய்ந்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தி 35 பேருக்கும் தூத்துக்குடி முதலாவது நீதித் துறை நடுவர் வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதாக அறிவித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

ad

ad