புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2014

மூன்று தமிழர்க்கும் எப்போது உத்தரவு?- நக்கீரன் 

ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள், மகாராஷ்டிர எல்லையில் உள்ள கர்நாடகத்தின் பெல்காம் சிறையில் வாடிக்கொண்டு இருந்த நான்கு தமிழர்களுக்கு உயிர்போய் உயிர் வந்திருக்கிறது!ஆம், கர்நாடகத் தமிழர்களான ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் மற்றும் சேலம் மீசைமாதவன் ஆகியோர் மீது, வீரப்பன் கூட்டாளிகள் என வழக்கு தொடுத்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் ஞானப்பிரகாசம் என்பவர், சாம் ராஜ்நகர் மாவட்டம் தோமையார் பாளையம் தேவாலயத்தில் தோட்டக்காரராகப் பணியாற்றியவர்; அங்கு பல ஆண்டுகளாகத் தங்கிப் பணியாற்றி வந்தவரை 1993ம் ஆண்டு பாலாற்றில் வீரப்பன் கும்பல் செய்த கொலைச் சம்பவத்தை அடுத்து, திடீரென தேவாலயத்தில் இருந்த ஞானப்பிரகாசத்தை அதிரடிப்படையினர் கூட்டிச்சென்றனர்.
ஒரு வழக்குக்காக அவரை விசாரித்தபின் விட்டுவிடுவதாகச் சொல்லிவிட்டு, அடுத்த நாளே ’வீரப்பன் கூட்டாளி கைது  என பத்திரிகைச் செய்தி கொடுத்தனர்; ஆனால், ஞானப்பிரகாசம் அப்பாவி என்பதை அந்த தேவாலயத்தின் பாதிரியார் வின்சென்ட் டிசோசா கூறினார்.
இது பற்றி 2013 பெப்ரவரி 16-19 நக்கீரன் இதழில், "தூக்குமேடையில் நிரபராதி- சாட்சி சொல்லும் பாதிரியார்' என்ற தலைப்பிலும் அடுத்து 2013 பிப்.20-22 இதழிலேயே "தூக்குத்தண்டனைக் கைதி குற்றவாளி அல்ல’ கர்நாடக போலீஸ் அறிக்கை' என்ற தலைப்பிலும் சிறப்புச் செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார், நீதிபதி சதாசிவம். தலைமை நீதிபதியான பிறகு, கடந்த மாதம் 15ம் தேதியன்று, சென்னை ஜுடிசியல் அகடமி நிகழ்ச்சியில் பேசிய அவர், "மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைவில் முடிவெடுக்க வேண்டும்' என்றும் "13 ஆண்டுகளாக பரிசீலனையிலேயே இருந்துவரும் மரணதண்டனைக் கைதிகளின் மனுக்கள் விசாரணை முடிந்துவிட்டது, ஜனவரிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும்' என்றும் தெரிவித்திருந்தார்.
சொன்னபடியே, கடந்த 22ஆம் தேதியன்று, தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு, 15 பேரின் கருணைமனு பரிசீலனையில் ஏற்பட்ட தாமதத்தைக் கணக்கில்கொண்டு, அவர்களின் தண்டனையை ஆயுளாகக் குறைத்து, இந்திய நீதித் துறையின் வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் இப்படி மரணதண்டனையில் இருந்து தண்டனைக்குறைப்பு செய்யமுடியும்' என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் தூக்கிலிருந்து தப்பிய 15 பேருக்காகவும் சட்டரீதியாகப் பாடுபட்ட சட்ட வல்லுநர்கள் ராம் ஜெத்மலானி, காலின் கான்ஸ்வல், மொகித் சவுத்ரி ஆகியோருடன், தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பாரியும் சே.பிரபுவும் முக்கியமானவர்கள்.
அவர்களிடம் பேசியபோது, முதல் முதலில் மரணதண்டனைக் கைதிகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளின் கடமைகளைப் பற்றி தெளிவாக வரையறுத்து இந்தத் தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். மேலும், ஐ.நா. சாசனங்களில் சொல்லப்படும் கருத்துகள் புதிய நெறிமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. மனபாதிப்பு உள்ளவர்களுக்கு தண்டனைக் குறைப்பு செய்யமுடியும், கருணைமனு குறித்து ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தாமதம் ஏற்படுத்துவது போன்ற நிலைமையில், அதில் தலையிட்டு குடிமகனின் வாழும் உரிமையை நிலைநாட்டுவது உச்சநீதிமன்றத்தின் கடமை, தூக்குக் கயிறை எதிர்நோக்கிக் காத்திருக்கும் காலத்தை இழுத்தடிக்கும் போதும் வாழும் உரிமை பாதிக்கப்படுவதாக எடுத்துக் கொள்ள முடியும்’ என்பன போன்ற இந்தத் தீர்ப்பின் குறிப்புகள், எதிர்காலத்தில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்பதற்கான முன்னோட்டமாக இருக்கும்'' என்றனர் உறுதியான குரலில்.
நான்கு தமிழர்களுக்குப் பொருந்தும் இந்த நீதி, ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களுக்கும் பொருந்துமா?
அதுவும் குறிப்பாக, ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவரே, தவறான ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக ஒப்புக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, காயம்பட்ட தமிழ் இதயங்களுக்கு ஆறுதல் மருந்தாக அமைந்துள்ளது.
தீர்ப்பு வெளிவந்த பின்னர் கடந்த 23ம் தேதியன்று பேரறிவாளன் மற்றும் அவரின் சக சிறைவாசிகளைச் சந்தித்து விட்டு வந்த அறிவின் தாயார் அற்புதம்ம்மாளிடம் பேசினோம்.
எல்லாருக்கும் மகிழ்ச்சியான தீர்ப்பு.. யாரா இருந்தாலும்.. கருணைமனுவை இவ்வளவு காலம் நிலுவையில வச்சுருக்கிறது, கொடுமையானது தானே.. மனிதஉரிமை மீறலை ஏற்றுக்கொள்ள முடியாதுங்கிறதை இப்போ உச்சநீதிமன்றமே தீர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கு. இதேபோல மரணதண்டனையை முற்றிலுமா ஒழிக்கப்படணும். அதன் மூலமா மனிதநேயம் தழைக்கச் செய்யணும்!'' என்றவரிடம்,
பேரறிவாளனின் உணர்வு பற்றிக் கேட்ட தற்கு, ""ஆயுள் சிறைவாசிகளை மாநில அரசுகள் கருணை அடிப்படையில விடுதலைசெய்ய வாய்ப்பு உண்டாகியிருக்கிறது, வரவேற்க தகுந்தது.
இந்த முக்கியமான தீர்ப்பின் மூலமா, மனித உரிமைக்காக நிற்கக்கூடிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றவங்க வரிசையில் நீதிபதி சதாசிவமும் இடம்பெறுவதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்பா..
வரும் 29ம் தேதி இவங்க மூவர் தொடர்பான தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கோம்பா.என்றார்.
தன் மகனுக்காக என்றில்லாமல், மரணதண்டனைக்கு எதிராக இடைவிடாது இயங்கிக்கொண்டு இருக்கும் வயதான அந்தத் தாயுடன், ஒட்டுமொத்த தமிழினமும் தானே காத்திருக்கிறது, விடுதலைச் செய்திக்காக!

ad

ad