ஜில்லா - விமர்சனம்!
தன்னையும் மனைவியையும் காப்பாற்றிவிட்டு அனாதையாக நிற்கும் விஜய்யை அழைத்துச் செல்லும் மோகன்லால் தன்னுடைய மகனாகவே அவரை வளர்க்க, மோகன்லாலை எதிர்த்து பேசினாலே அடித்து துவைக்கும் ஜில்லா ரௌடியாக வளர்கிறார் விஜய்(சக்தி).
தன் தந்தையை கொன்றது ஒரு போலிஸ் என்பதால் சிறுவயதிலிருந்தே காக்கி கலர் பிடிக்காமல் வளரும் விஜய் தன் பால்ய நண்பன் சூரி கான்ஸ்டபிளாக காக்கி சட்டையுடன் வந்ததும் சட்டையை கிழிப்பது, பார்த்தவுடனே காதலில் விழுந்த காஜல் அகர்வாலும் போலிஸ் என்று தெரிந்ததும் காதலை கைவிடுவது என காக்கியை கண்ணால் கூட பார்க்காமல் இருக்கிறார்.
யாரும் எதிர்க்க முடியாத பலத்தோடு, அரசு அதிகாரிகளையும் தன் வசம் வைத்துக்கொண்டு செல்வாக்குடன் மதுரையை ஆட்டிப்படைக்கிறார் மோகன்லால், புதிதாக வந்த மதுரை மாவட்ட கமிஷனர் மோகன்லாலை கைது செய்து அவமானப்படுத்துகிறார். இந்த அவமானம் தாங்காமல் மோகன்லால் கலங்கியதைக் கண்டு, கமிஷனரின் கையை விஜய் வெட்டினாலும், கமிஷனரின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணரும் மோகன்லால் ’நம்ம ஆள் ஒருத்தர் அந்த இடத்துல இருக்கனும். அதுக்கு சக்தி தான் சரியான ஆள்’ என்று சொல்லிவிடுகிறார்.
மோகன்லாலின் சந்தோஷத்திற்காக போலிஸாக சம்மதிக்கிறார் விஜய். போலிஸ் டிரைனிங்கிலும், தேர்விலும் விஜய் பல சொதப்பல்கள் செய்தாலும் மோகன்லால் தனது பலத்தால் அவரை அசிஸ்டண்ட் கமிஷனராக்கிவிட ‘இனி எந்த ரௌடியின் மீதும் ஆக்ஷன் எடுக்கக்கூடாது. ஏன்னா அவங்க எல்லாரும் என் மாமன் மச்சான்’ என்ற உத்தரவுடன் விஜய் சார்ஜ் எடுக்கிறார் .
மோகன்லாலின் இளைய மகனான மகத் ராகவேந்திரா ஷாப்பிங் மால் கட்ட கேஸ்(எரிவாயு) ஏஜென்ஸி இருக்குமிடைத்திற்கு ஆசைப்பட்டதும், மோகன்லாலின் ரௌடி கும்பலும், விஜய்யின் போலிஸ் கும்பலும் அந்த ஏஜென்ஸியை அடித்து நொறுக்கி பூட்டுபோடுகிறார்கள். ரௌடிகளின் களேபரத்தால் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்படுகிறது. அந்த இடத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருக்கும் மக்களும், பள்ளிக்குழந்தைகளும் இறப்பதையும், அலறுவதையும் கண்கூடாக பார்க்கும் விஜய் கலங்கிப்போகிறார்.
(ஹீரோன்னா ஒரு கட்டத்துல திருந்தனுமில்லையா? அவரை திருத்த ஒருத்தர் வரனுமில்லையா?) வழக்கம்போல காஜல் அகர்வாலின் கடுமையான வார்த்தைகளால் திருந்தும் விஜய் முதல்முறையாக காக்கிசட்டையை போட்டு மாமன் மச்சான் ரௌடிகளையே சுலுக்கெடுத்து, ஒரே நாள் இரவில் ’ஆபரேஷன் க்ளீன்’ என்ற ஆபரேஷன் மூலம் மதுரை மாவட்டத்திலிருக்கும் மொத்த ரௌடிகளையும் கைது செய்துவிடுகிறார்.
தன்னிடம் இருப்பவர்களை கைது செய்ததால் விஜய் மேல் கடும் கோபம் கொள்கிறார் மோகன்லால். ’நம்ம ஆளுங்களை ஏன் அரஸ்ட் பண்ண? இந்த காக்கி சட்டையை கழட்டி போட்டுட்டு பழைய சக்தியா வா’ என்று சொல்லும் மோகன்லாலிடம், ’உங்க பக்கத்துல இருந்து பாத்தா தப்பா தெரியல, இங்க இருந்து பாத்தா தப்பா தெரியுது. நான் மாறமாட்டேன் நீங்க மாறனும்’ என்று சொல்லி மோகன் லாலை எதிர்த்து நிற்கிறார் விஜய்.
விஜய் தனது ஒவ்வொரு தொழிலையும் முடக்குவதோடு, தன் சொந்த மகனையும் கைது செய்ய, தன்னோடு இருக்கும் அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி விஜய்யை கொன்றுவிடுமாறு ஐடியா கொடுக்கிறார் மோகன்லால்.
மோகன்லாலுக்கு தெரியாமல் விஜய்யைக் கொல்ல சதி செய்தது யார்? மோகன்லால் திருந்தினாரா? என்பது தான் கிளைமாக்ஸ் அதிரடிகள்.
விஜய் வரும் காட்சிகளிலெல்லாம் ஒரு சண்டையாவது கன்ஃபார்ம், ரௌடிகள் இல்லையென்றால் சூரியை மொத்துகிறார். மதுரை வட்டார வழக்கு விஜய்க்கு ஒத்துவரவில்லை.
ஒரு ஜில்லாவையே அடக்கி ஆளும் தாதாவாக, வீட்டில் நல்ல அப்பாவாக, இந்த கேரக்டருக்கு மிகச்சரியான தேர்வு இவர் தான் என்ற அளவிற்கு அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார் மோகன்லால். விஜய்யை எதிர்த்து பேசியவர்களை கூட வாயால் கிழித்துப்போட்ட ரசிகர்கள் விஜய்யை மோகன்லால் எட்டி உதைக்கும்போது உணர்ச்சிவசப்படாமல் இருந்தது அவரது சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு கொடுத்த மரியாதை.
படத்தில் விஜய் ஹீரோவாக இருந்தாலும் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்வது மோகன்லால் தான். மோகன்லாலுக்கு சமமாக வசனம் பேசி நடிக்க அதிக சிரமப்பட்டிருக்கிறார் விஜய். அந்த சிரமத்தில் தானோ என்னவோ, மோகன்லாலுக்கு சிரமம் கொடுக்க மூச்சிரைக்க விஜய்யுடன் நடனமாடவிட்டிருக்கிறார்கள். மூச்சுவாங்கிக்கொண்டு விஜய்யுடன் சேர்ந்து மோகன்லால் குதிப்பதை பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கிறது. ’சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுன்னு’ படத்துல பாட்டு வந்தாலும், மோகன்லால் நடிப்புக்கு முன்னாடி விஜய்யோட நடிப்பு தூசுன்னு தான் நமக்கே சொல்லத் தோணுது.
வழக்கம்போல ஹீரோவை திருத்தவும், பாடல் வரப்போகிறது என்று உணர்த்தவும் சில ஃபிரேம்களில் எங்காவது இருக்கிறார் காஜல். கமிஷனர் விஜய்யை விட சப்-இன்ஸ்பெக்டர் காஜல் அதிக நேரம் காக்கி உடையில் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். தம்பி ராமையா, சூரி என இரண்டில் ஒருவர் விஜய்யுடன் எப்போதும் இருந்து அவ்வப்போது காமெடி கௌண்டர்களை அள்ளி வீசி சிரிப்பலையை பரவ விடுகிறார்கள்.
எல்லா படங்களையும் போல விஜய்யை தூக்கிப்பிடிக்கும் வசனங்கள் இந்த படத்திலும் ஏராளம். அவற்றில் சில...
மோகன்லால் - நான் நினைச்சா இவன் முடிப்பான். இவன் சாதா சக்தி இல்ல. ஜீவன் உள்ள சக்தி.
மோகன்லால் - இந்த சிவன் இல்லாம சக்தி இல்லை.
விஜய் - சக்தி இல்லாம எவனும் இல்லை.
திரைக்கதையின் ஓட்டம் லாஜிக் சொதப்பல்களை மறைத்துவிடுகிறது. இருந்தாலும் ஒரு டவுட்டு. ஸ்கூலுக்கே போகமாட்டேன்னு சொன்ன விஜய், குறுக்கு வழியில் போலிஸான பின் இந்தியில் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். கமெர்ஷியல் படத்துக்கான ஆக்ஷன், செண்டிமெண்ட், சிரிப்பு, காதல், பாட்டு என அனைத்தும் நிறைந்திருக்கிறது ஜில்லாவில்.
நெஞ்சுல மூணு குண்டடி பட்டதுக்கப்புறமும் அப்பாவுக்கு ஃபோன் செய்து பேசுகிறார் மிகுந்த மனதைரியம்(!) கொண்ட மகத்! போலிஸா சார்ஜ் எடுத்தாலும் யூனிஃபார்ம் போடமாட்டேன், ஸ்டைலா தாடி மீசையுடன் தான் அலைவேன் என விஜய் அடம்பிடிக்கும் கொடுமையெல்லாம் எத்தனையோ படத்துல அனுபவிச்சிட்டோம். இதுலயும் அனுபவிக்கவேண்டியது தான்.
டி.இமான் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ’பாட்டு ஒன்னு கட்டு...’ பாடலில் அதிரடியான இசையை தந்து மிரட்டுகிறார். ’கண்டாங்கி’ பாடலை ஃபாரின் லொகேஷனில் எடுத்து பாட்டை பார்க்க முடியாத அளவுக்கு கெடுத்துவிட்டார்கள்.
வன்முறை ஆபாசம் என எதுவும் அதிகமில்லாமல் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய கமெர்ஷியல் படமாக இருக்கிறது ஜில்லா. ஜில்லா படத்தை தயாரித்த நடிகர் ஜீவா நல்லா கல்லா கட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜில்லா - நல்லா கல்லா கட்டும்!