புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

அமெரிக்க போர்க்குற்ற நிபுணரை தமிழ்க் கூட்டமைப்பு நாளை சந்திக்கும்! முக்கிய போர்க்குற்ற ஆவணங்கள் கையளிப்பு
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
நாளை மறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர்
சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.
இந்தத் தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரச படைகளினால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பிலான முக்கிய ஆவணங்களை இலங்கை வரும் போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ரெப்பிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் கையளிக்கத் தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் தடவையாக இலங்கை வந்த ஸ்ரீபன் ஜே.ராப்பை கொழும்பில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான விடயங்களை அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் ஈடுபடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பை நாளை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரச படைகளினால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான முக்கிய ஆவணங்களையும் அவரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.
இதேவேளை, இரண்டாவது தடவையாக இலங்கை வரும் ஸ்ரீபன் ஜே.ராப், நல்லிணக்க ஆணைக்குழுவில் போர்க்குற்றங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா நிறைவேற்றியுள்ள இரண்டு தீர்மானங்கள் ஆகியவற்றை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளதா என்பதை ஆராயவுள்ளதுடன், போர்க்குற்றங்களுக்குத் தண்டனை விதித்தலில் முக்கிய கவனம் செலுத்துவார் என்று தாம் எதிர்பார்க்கின்றோம் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீபன் ஜே ராப், இலங்கைப் பயணத்தின்போது அரச உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சியினர், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நீதித் துறையினர் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்வார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad