29 ஜன., 2015

புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பதுடன், யாழ்.பொது நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் குறித்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக ஆளுநர் மாற்றம் மற்றும் பிரதம செயலாளர் மாற்றம் ஆகியவற்றை புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளபோதும் அவை சிறியளவிலான மாற்றங்கள்.
ஆனால் மீள்குடியேற்றம் என்ற பெரிய மாற்றம் உருவாக்கப்படவில்லை. மீள்குடியேற்ற அமைச்சரை நாம் சந்தித்தபோது அவர் கூறுகின்றார்.
தேவையற்ற காணிகளை விடுவிப்பதாக, ஆனால் பிரதமர் இராணுவத்தை வெளியேற்றப்படப்போவதில்லை  என சொல்கிறார்.
ஆனால் இராணுவத்தை குறைக்காமல் மீள்குடியேற்றம் சாத்தியமில்லை. எனவே இந்த பேச்சுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குகின்றது. எனவே நாம் நம்பிக்கை கொள்ள முடியாமல் உள்ளோம்.
மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகளில் நடைபெறவுள்ளது. இதனால் 99வீதம் தமிழ் மக்கள் வாழும் வடமாகாணத்தில் ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படும் நிலை உருவாகும்.
எனவே அது இங்குள்ள பல பிரச்சினைகளை காண்பிக்கும், என கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அங்கு பெறுமதியான நூல்களையும் வழங்கி வைத்துள்ளார்.