29 ஜன., 2015

ராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும்; சி.வி.விக்னேஸ்வரன்


வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
                                         
 
வடமாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நிலையில் வடமாகாணத்தில் இடம்பெறும் மாற்றங்கள் தொடர்பாக அவர்கள் ஆவலாக கேட்டறிந்தனர்.
 
புதிய அரசின் செயற்பாடுகள் பல இடத்தில் நன்மை பயக்கின்றது. குறிப்பாக ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியவர்களின் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறினேன்'
 
எனினும் பாரிய பிரச்சினையாக இராணுவ வெளியேற்றம், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளக்கையளித்தல் தொடர்பான பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். 
 
அதுமட்டுமின்றி பொதுமக்களின் காணிகளையா? இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
 
அது தொடர்பான அவருக்கு முழுமையாக எடுத்துக் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் காட்டப்பட்டது
 
இது பாரிய மாற்றதை ஏற்படுத்துமா? என்பது அவர்களது அடுத்த வினாவாக இருந்தது. 99 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் வடமாகாணத்தல் உள்ளனர். விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு சிங்கள பிரதிநிதியை அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என்தை அவர்களுக்கு தெரிவித்தேன். 
 
இதன் பின்னரே இதில் இவ்வளவு சிக்கலான பிரச்சினை உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்' என்று அவர் கூறினார். '
 
வடமாகாணத்துக்கு கூட்டுறவுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உதவிகளை யாழ்.பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குவது தொடர்பாக தாம் ஆராய்வதாகவும் தெரிவித்தனர்.
 
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.  குறிப்பாக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்படும் தரவு அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளதாக தெரிவித்தேன்.
 
இது பற்றி தீர்மானத்தை கொண்டு வரும் நாடுகளே தீர்மானிக்கும் என அவர் தெரிவித்ததாக' முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555263841429361528#sthash.NsLX7ZKP.dpuf