இந்திய குடியரசு தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லும் போது இலங்கையினரை கொண்டு தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர் சதி திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவில் வசிப்பவர்கள் மூலம் இந்த சதிச்செயலை நடத்த திட்டம் புனையப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குடியரசு தின விழாவில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் செல்லவுள்ளார்.
இதனையடுத்து லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முகம்மது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கைகோர்த்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்திய- பாக்கிஸ்தான் எல்லையில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய மத்திய உளவு பிரிவினர் டில்லி மற்றும் ஆக்ரா போலீசாருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஒபாமா செல்லும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் இலங்கை வாழ் நபர்கள், மாலத்தீவு நபர்கள் ஆகியோருடன் கூட்டு அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுள்ளனர்.
இதனையடுத்து டில்லியில் நீண்ட நாள் தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரமுகர்களை போலீசார் தீவிரமாகவும், ரகசியமாகவும் கண்காணித்து வர உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.