கோவா மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ, மின்சாரத்துறையில் பணியாற்றி வந்த அரசு ஊழியர் ஒருவரை கடந்த 2006-ம் ஆண்டு தாக்கினார். இது தொடர்பான வழக்கில் பிரான்சிஸ்கோ குற்றவாளி என மும்பை ஐகோர்ட்டின் கோவா பெஞ்சு கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த தீர்ப்பை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கலிபுல்லா, சிவா கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட அமர்வு, அமைச்சர் பிரான்சிஸ்கோவின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அரசு ஊழியரை தாக்கிய வழக்கில் அவர் குற்றவாளி எனவும் தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து பிரான்சிஸ்கோ தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
கோவா விகாஸ் கட்சியை சேர்ந்த பிரான்சிஸ்கோ, கடந்த நவம்பர் மாதம்தான் அமைச்சர் பதவியை பெற்றிருந்தார். இந்த தீர்ப்பின் மூலம் அவர் 6 மாதம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.