புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2015

முள்ளிவாய்க்கால் நினைவு....பொன் காந்தன்

இருளப்பிக் கிடக்கும் முகங்கள்
உள்ளே பெரும் ஓலம்
திரண்டு திரண்டு விழும் கண்ணீர்

தீராத்துயர்
அத்தனைபேருக்கும் அழுகை தந்த காலத்தை
எப்படிச் சபிக்க
இடிந்து கிடக்கும் முகங்களில்
முயன்றும் முயன்றும் புன்னகை எழுத முடியாத்துயர்
மறந்துவிடுவோமென்று நினைக்கிற சிலதை
நெடுஞ்சாணாய் கிடத்தி ஒரு யானை மிதி மிதித்தாலென்ன
திருவிழாவில் தொலைத்த
தொங்கட்டானை நினைத்தா கரைகின்றோம்
எங்கள் கருப்பையில் நடந்த
பிஞ்சுக்ககால்களின் உதைப்பையல்லவா
எங்கள் தெருக்கள் சூடிக்கிடந்த
உயிர்நாதங்களின் அழைப்பை அல்லவா
கருக்கல் கலைய நின்று
காதல் நிலத்தை அணைத்த நிலவை அல்லவா
மடிக்குள் விழுந்து எழுந்து
மனதை வருடிச்சென்ற மானை அல்லவா
உள்ளம் நிறைய நிறைய உட்கார்த்திருந்து
ஊறி வழிந்து அந்த தேனை அல்லவா
உன்னை அல்லவா என் கண்ணை அல்லவா
ஆண்டவா! மறந்திடல் கூடுமோ
ஈக்கள் கூடு கட்டுகையில்
எறும்பு இரை காவுகையில்
குருவி பேடு அடை காக்கையிலே
செடி அரும்பி  மெல்ல
மொட்டவிழ்த்து மலராகையிலே
எங்கிருந்தோ கண்ணீர்
எழுந்தவந்து துயர்மேவுகிறது.
இப்படித்தான் நாமும்
கனவு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினோமே
எட்டுத்திக்கிருந்தும் இயமன் வந்தான்
நம்பா இடத்திலிருந்தும் நயவஞ்சகம்
இப்பொழுது நல்லிணக்கம்
நியாயம் மனிதாபிமானம்
சகோதரத்துவம் பேசியென்ன
எம்மை கொல்லும்போது இருந்த
அந்த கொடுரவெறிக்கு என்ன தண்டனை
எங்கள் குழந்தைகளை தின்ற
கல்லால் ஆன மிருகத்துக்கு என்ன தீர்ப்பு
எங்கள் காதல் தேவதைகளை கடித்துக்குதறிய
சிங்கப்பற்களுக்கு என்ன முடிவு
இப்பொழுதும் கடவாய் கிழிய சிரித்தபடி
அந்த சண்டாளன் முன்னே நிற்கிறான்
என்ன விதி
ஒரு கல்லால் கூட கயவனின்
மண்டை பிளக்க முடியாதவராய் போனோமே
தண்டாயுதமும் தலைநிறைய கிரீடமும்
வென்றால் வீரகர்ச்சனையும்
மன்றாடாத குணமும் மானமும்
என்றே பூர்வீகக்குணம்படைத்து வந்த
நெடுவேர்க்குடிக்கு இன்று
குண்டூசி தூக்கவும் தோளில் பலமற்ற குனிவு
நெஞ்சுக்குள் கிடந்து வீரவாள் ஒன்று
சுருங்கிச்சுருண்டு கறுவிக் கரைந்து
கன்னத்தில் சுடும்
எரிமலைக்கண்ணீரை எகிறிவிழுவதை அறிவாரா
கோடி ஆண்டுகளுக்குப்பின் ஒரு கோபுரம்
இல்லை
ஒரு மங்காத மாணிக்க மலை
இல்லை மாமகுடம் தரித்தவானம்
எம் தாய் நிலமாய் கருத்தரித்து
கால்முளைத்து பூமிப்பந்தில்
புல்லரிக்க தடம் பதிக்க நினைத்தவேளை
கறையான் புற்றுக்கூட நமக்கில்லையென
இடிக்கப்பட்டது கனவு
இதயவலியெடுக்க பாவாயிரம் பாடி
ஆறிவிடமுடியா பலிபீடமாய் முள்ளிவாய்க்கால்
ஒருபோதும் நினைத்திலோம்
நந்திக்கடல் வெளிகளில்
அந்த நாதியற்ற சமுத்திர மணலில்
எங்கள் தமிழ்ச்சாதி சரிந்து சமாதியுமின்றி போவோமென
மூங்கிலாற்றிலா சுதந்திரபுரத்திலா பொக்கணையிலா
ஆனந்தபுரத்திலா வலைஞர் மடத்திலா
முள்ளிவாய்க்காலிலா எங்கே கட்டிப்புரண்டாலும்
அங்கே மண்ணுள் பலகுரல்கள்
கண்ணில் நீர்பெருகும்
கங்கையென நினைவுகள் பாயும்
தங்கையெனவும் தாய்தந்தையெனவும்
தம்பியெனவும் தாழம்பு மலர்குழந்தையெனவும்
மங்கிடாதந்து மணநாள் கனவுமகள் எனவும்
பொங்கி எழும் ஓலம்
பூகம்மாய் நெஞ்சு வெடிக்கும்
வற்றாப்பளையாள்
இந்த வம்சத்தின் துயர் கண்டு தவிப்பாள்.
ஆறாண்டென்ன நூறாண்டுபோயினும்
நெஞ்சில் வளர்த்தி நேரத்துக்கு உணவூட்டி
கண்ணே எம் வம்சத்து வளர்பிறையேயென
கொஞ்சி வளர்த்த கொத்துமல்லிகையை
எவர்தருவார் திருப்பி.
ஒருபோதும் நினைத்திலோம்
கையெடுத்து வணங்க ஒரு கல்லறையுமின்றி தவிப்போமென
எங்கள் கல்லறைகளில் இருந்தும்
கால் தடங்களில் இருந்தும்
காற்றில் கலந்த கடைசி வார்;த்தைகளில் இருந்தும்
மீண்டுமெழும் எங்கள் தாகமென கலங்கிப்போயா
கயவன் மண்மேடாக்கி போனான்
எங்கள் மாணிக்க தேகங்களை.
மிருங்கங்கள் நடத்திய உச்சக்கூத்தில்
மானுடம் காணா எல்லா அரக்கங்களும்
அசிங்கங்களும் அரங்கேறியது முல்லைத்தீவின் தேகத்தில்.
அந்த வேளைகளில் மண்ணுள் உறங்கும்
எங்கள் எல்லா மன்னர்களின் ஆத்மாக்கள்
மகா கோபம் கொண்டிருக்கும்
ஆழி கொந்தளித்திருக்கும்
வானம் நெருப்பாய் சிவந்திருக்கும்
எல்லாம் அழுதிருக்கும் எல்லாம் அழுதிருக்கும்
அழாத எல்லாமும் கூட அழுதிருக்கும்
ஆனால் அன்று மட்டும் உலக இரக்கம்
அரக்கத்துக்கு துணைபோன அகாலப்பிழை நடந்தது.
இன்னும்தான் புரியவில்லை அந்தப்புதிர்!
மரங்களை வெட்டும்போதுகூட
அழுதுபுரளும் கருணையால் செய்த இதயங்கள்
புரங்களை எரித்து
பூண்டோடு ஒரு இனத்தை அழிக்க நடந்த
பொல்லா வெறித்தனம் கண்டு பொங்கி எழுந்ததாய்
ஏன் குறிப்பு இல்லாமல் போயிற்று.
இந்த பிறவியின் பெரும் மூலதனமே உயிர்தானே
அதை ஒருவன் உருவி எடுக்கிறபோது
பார்த்திருந்தவரை எப்படி எழுதுவது
இப்பொழுது
எங்கள் ஆறுதலுக்கோ அன்றி தங்கள் தேறுதலுக்கோ
ஆயிரம் பக்கத்தில் அறிக்கை
ஆண்டுக்கொரு கூட்டத்தொடர்
மாண்டுபோனவர்க்காய் என ஒரு பெயர்மாற்றம்
அவன் கேட்டதற்காக ஒரு தள்ளிப்போடல்
இவன் கேட்டதற்காய் ஒரு கிள்ளிப்போடல்
உள்நாட்டிலா வெளிநாட்டிலா என்ற விவாதங்கள்
எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும்
கொல்லப்பட்டவர்களின் ஆவியால்
எல்லோருக்கும் உறைக்கும்படி
ஒரு வார்த்தையில் சொல்லமுடியும்
ஆனாலும் அதுவும் யோசிக்கிறது
தமிழ்ஆவியைக்கூட கொல்லத்துடிக்கும் அரக்கன்
இன்னமும் அரசகட்டில் ஏற ஆசைப்படுகின்றான்.
சாத்தான்களை எங்கள்  சோதரர்கள் சிலர்
தங்கள் சரித்திர புருசர்களாய் நினைக்கின்றார்கள்.
பாவிகள் வாழும் நாட்டில்
பலனில்லை  நினைவுகளை மீட்டி
காவியங்களை பாடவேண்டிய பொழுதில்
ஒரு காகம் போல கரைய வேண்டியதாயிற்று
ஒரு பூனைபோல சுவரோடு உரசி சீற வேண்டியதாயிற்று
ஒரு திரியை நெய்யில் தோய்த்து அக்கம் பக்கம் பார்த்து
பற்றவைக்கின்றேன்
கொதிக்கின்ற நெஞ்சு ஆறட்;டும் என்று.
இறந்தவரை நினைத்தல் உரிமை என்று
ஒரு சிங்களவாய் உச்சரிக்கிறது.
பயங்கரவாதிகளுக்கு ஒளியேற்றுவது
நாட்டுக்கு ஒத்துவராது என்கிறார் இன்னெருவர்
புலிகளுக்கும் சேர்த்தே பூச்சூடுவார்கள் என்கிறார் மற்றாள்
பூவென்கிறார் புஸ்பம் என்கிறார் மலர் என்கிறார்
கண்ணை மூடிக்கொண்டு காரியத்தை முடிக்கின்றேன்.
என்ன நினைக்கிறார் சிறீசேனா
நல்ல மனிதராய் இருப்பாரோ
தமிழில் தேசிய கீதம் பாட
பாடட்டும் என அவர்பாட்டில் இருக்கின்றார்
மயக்கிவிட்டு மாந்தீரிகத்தை போடும் மறுவடிவமா இது.
இல்லை மனட்சாட்சியின் மறுவடிவமா இது
எது!
ஈன்ற தாய் புகழ் காத்து
இனிய தோழர் உறவு காத்து
மாண்புமிக்க மானம் காத்து
மாதவவீரம் காத்து
மனதுக்கின்பக்காதல் காத்து
ஈறுவரை மண்காத்து
இலட்சிய வேதம் காத்து
இன்றுவரை இதயமெழும்
சத்தியங்கள் தோற்பதில்லை
சதா எம் வழியில் வரும்
தடுமாற்றம் தீர்;க்கும்வரம்
நெஞ்சுக்குள் நடக்கும் போரில்
எங்கள் சந்தணத்தோட்டத்தை
வெட்டிச்சரித்து வெற்றிவிழா நடத்தி
நேற்று எம்மை மிதித்து விளையாடிய
மிலேச்சனை
எப்படி அழைத்து வந்து
எப்படி கேள்விகள் கேட்டு
எப்படி அவனை தூக்கில் ஏற்றி
தொலைப்பது பற்றி ஒத்திகை நடக்கின்றது.
மகுடம் இழந்திருக்கின்றான் வெறியன் இப்பொழுது
அவன் தம்பியொருவன் சிறைக்குள்
இன்னொருவன் முகம் வெளிறி நிற்கிறான்
எங்கள் சாபமும்
கொலை பாதகமும் துரத்த ஆரம்;பிக்கின்றது.
விகாரைகளும் அந்த பாதகனை பார்த்து
கண் மூடிக்கொள்ளும் காலம் கனியும்
கறுத்தக்கடா ஒன்றில்
கர்வம் பிடித்தவனின் உயிர்பறிக்க வருவான் காலன்.
அவனின் முதல் வார்த்தை
ஏய் கொடுரமானவனே!
முள்ளிவாய்க்கால் உனக்கு தெரியுமா என்றே ஆரம்பிக்கும்
அப்பொழுது எங்களில் பலபேர்கள்
ஏன் நானும் கூட அமரராகி பலஆண்டுகள் ஆகியும் இருக்கலாம்!

ad

ad