புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2015

புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

புங்குடுதீவில் ஏதாவது பிரச்சினை இடம்பெற்றால் அந்தப் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஊர்காவற்றுறையில் இருக்கின்ற பொலிஸாரே வரவேண்டும். புங்குடுதீவுக்கும் ஊர்காவற்றுறைக்கும் குறைந்தது 25 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.
25 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸாரிடம் சென்று முறையிடுவது என்பது மிகக் கடினமான காரியம்.
பொலிஸ் சேவை என்பது மக்களுக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும்.
ஆனால் புங்குடுதீவைப் பொறுத்தவரை பொலிஸாரின் சேவையைப் பெறுவது கடினமானது என்ற உண்மை மாணவி வித்தியாவின் கொலையுடன் தெரியவந்துள்ளது.
அதிலும் தீவகம் மிக நீண்ட இடப்பெயர்வுக்குப் பின்னர் மீளக்குடியமரப்பட்ட பிரதேசம். அடிப்படை வசதிகளை அரசு இன்னமும் செய்து கொடுக்கவில்லை. இந்நிலையில் அங்கு மீளக்குடியமர்ந்த மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மாணவி வித்தியாவின் படுகொலைக்கு முன்னதாக புங்குடுதீவில் சாரதாம்பாள், தர்சினி, நகுலா என்ற இளம் பெண்களும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நிலைமை இதுவாக இருக்கையில், புங்குடுதீவில் பொலிஸ் நிலையத்தை தற்போது அமைக்க முடியாது என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஏ.ஜயசிங்க கூறியுள்ளார்.
புங்குடுதீவில் சட்டத்தை மதிக்காத மிக மோசமான கும்பல் ஒன்று உள்ளது. இந்தக் கும்பல் பொலிஸாரையும் தாக்கியுள்ளது.
எனவே புங்குடுதீவில் பொலிஸ் நிலையத்தை அமைக்க முடியாது என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறியிருப்பது இங்கு வேடிக்கைக்குரியது.
எந்த இடத்தில் சட்டத்தை மதிக்காத கும்பல் இருக்கிறதோ அங்குதான் பொலிஸ் நிலையம் இருக்க வேண்டும்.
சட்டத்தை மதிக்காத கும்பல்களை அடக்குவது தான் பொலிஸாரின் பணி. இதை விடுத்து புங்குடுதீவில் சட்டத்தை மதிக்காத கும்பல் ஒன்று உள்ளது.
அதனால் இப்போது புங்குடுதீவில் பொலிஸ் நிலையத்தை ஆரம்பிக்க முடியாது எனக் கூறுவது, எந்தளவு தூரம் நியாயமானது என்பதை பொலிஸ் மேலாண்மை தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சட்டத்தை மதிக்காத கும்பல்கள் இருக்கின்ற இடங்களில் வாழ்கின்ற மக்கள் எவ்வளவு கஷ்டங்களை எதிர்நோக்குவர் என்பதை உணராமல், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பொறுப்பற்றுக் கதைப்பது அவ்வளவு நல்லதல்ல.
முன்பும் ஒரு தடவை புங்குடுதீவு விடயத்தில் வடக்குமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தான் பொய் சொன்னதாக தெரிவித்திருந்தார்.
பொது மக்களுக்கு உத்தரவாதம் வழங்கிவிட்டு சந்தர்ப்பத்திற்குப் பொய் சொன்னேன் என்று கூறினால் இன்னொரு தடவை பொலிஸ் அத்தியட்சகரின் உறுதி மொழியை பொதுமக்கள் நம்புவரா என்ன?
எனவே புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் வடக்கு மாகாண அரசு ஜனாதிபதி மைத்திரியுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ad

ad