புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2015

கஜேந்திரகுமாரின் கபடத்தனமான ஈனத்தன அரசியல் அம்பலம்- நக்கீரன்


கடந்த யூலை 23, வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தமிழ்தேசத்தை அடைய மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.


அவரது மொழியிலேயே சொல்வதென்றால் “எங்களுடைய நிலைப்பாட்டை பொறுத்தளவில் தமிழ் தேசத்தை நோக்கிப் போகிற பாதையிலே அந்த இலக்கை அடைவதற்கு 3 வழிகள் இருக்கின்றன.” 
(1) சிங்கள தேசம் விரும்பி ஒரு இணக்கப்பாட்டின்அடிப்படையிலே தேசத்தை அங்கீகரிப்பது. அது ஒரு பகல் கனவு. அதை நாங்கள் மறந்துவிட வேண்டும்.
(2) எமது தேசத்தை நாங்கள் பறித்து எடுப்பது. மே மாதம் 2009 க்குப் பிறகு அதைப்பற்றி நாங்கள் சிந்திப்பது சற்று கடினமான விடயம்.
(3) மூன்றாவது இலங்கைத் தீவை மையப்படுத்திய பூகோள அரசியல் போட்டியை நாங்கள் பயன்படுத்த வேண்டும். வருகிற சந்தர்ப்பங்களை சரியாக நாங்கள் பயன்படுத்தி நாங்கள் முன்னுக்குப் போக வேண்டும்.
மேலும் அவர் பேசுகையில் “நீங்கள் (நிருபர்) சொல்றியள் இந்த உலகமே வந்து இந்தப் (ஆயுத)போராட்டத்துக்கு எதிராக இருந்தது. சிறிலங்கா வந்து சுயநிர்ணய உரிமை, தேசம் என்பதையெல்லாம் நிராகரித்தது அப்படியென்றால் நாங்கள் எப்படி முன்னுக்குப் போகலாம் என்று? பலமாக இருக்கும் போது அங்கீகரிக்கப்படவில்லை. இப்போது பலவீனமாக இருக்கும் போது எப்படி அங்கீகரிக்கப் போகிறது?
பூகோள அரசியல் முரண்பாட்டைப் பயன்படுத்தி எமது இலக்கு நோக்கி பயணிக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும் சனாதிபதி தேர்தல் நடந்தபோது அதுவெறுமனே இராஜபக்சாவுக்கும் மைத்திரிபால சிறிசேனாவுக்கும் இடையில் நடந்த போட்டி அல்ல. இராஜபக்சாவுக்குப் பின்னால் சீனா இருந்தது என்பது அனைவர்க்கும் தெரியும். அதே போன்று மைத்திரிபால சிறிசேனாவுக்கும் யூஎன்பிக்கும் வந்து மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா இருந்தது என்பது அனைவர்க்கும் தெரிந்த விடயம். இந்தப் போட்டியிலே வந்து எப்படியாகிலும் இந்தியா சீனாவை வீட்டை அனுப்ப வேண்டும் இலங்கையில் இருந்து ஆகக் குறைந்தது சீனாவின் (ஆதிக்கத்தை) கட்டுப்படுத்த வேண்டும். இது அனைவர்க்கும் தெரிந்த விடயம். அப்படிப்பட்ட நிலையிலே இந்த ஆட்சிமாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் நாம் செயல்பட வேண்டும்.”
ஆனால் இப்போது பூகோள அரசியல் முரண்பாட்டைப் பயன்படுத்தி எமது இலக்கு நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று இப்படிச் சொல்லும் கஜேந்திரகுமார் சனவரி 8 இல் நடந்த சனாதிபதி தேர்தலை தேர்தலைப் புறக்கணித்தார். புறக்கணிக்குமாறு தமிழ்வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் சொல்லிய காரணம் இராஜபக்சாவுக்கும் சிறிசேனாவுக்கும் வித்தியாசமில்லை. இரண்டு பேரது இலக்கும் தமிழ்மக்களை அழிப்பதுதான். பெயரில் மட்டும் வித்தியாசம் இருக்கிறது.
புவிசார் அரசியல் முரண்பாடுகளை தமிழர் தரப்பு பயன்படுத்தி எமது இலக்கு நோக்கி நடக்க வேண்டும் என்று சொல்லும் கஜேந்திரகுமார் எதற்காக தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களை கேட்டார்? அவர் கேட்டுக் கொண்டது போல் எமது மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் மகிந்த இராஜபக்சே மீண்டும் வென்று சனாதிபதியாக வந்திருப்பார். எமது மக்களின் துன்பம் தொடர் கதையாக இருந்திருக்கும். குறிப்பாக போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கும், அல்லலுக்கும் ஆளாகி இருப்பார்கள். இதைத்தான் கஜேந்திரகுமார் விரும்பினாரா? விரும்புகிறாரா?
சனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது “பூகோள அரசியல் முரண்பாட்டைப் பயன்படுத்தி எமது இலக்கு நோக்கிப் பயணிக்க வேண்டும்” என்ற கோட்பாட்டுக்கு முற்றிலும் மாறானது. இந்த அரசியல் முரண்பாடு அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு புறம் மறு புறம் சீனா நாடு.
அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சனாதிபதி தேர்தலில் வாக்காளப் பெருமக்கள் பெருமளவு கலந்து கொண்டு சிறிசேனாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டது. காரணம் பன்னாட்டுச் சமூகம் ஒரு ஆட்சிமாற்றத்தை விரும்பியது. அதுவே எமது விருப்பமாகவும் இருந்தது. எமது நலன்களும் அவர்களது நலன்களும் ஒரே கோட்டில், ஒரே புள்ளியில் சந்தித்த போது இராஜபக்சா தோற்கடிக்கப்பட்டார். ஆனால் “பூகோள அரசியல் முரண்பாட்டைப் பயன்படுத்தி எமது இலக்கு நோக்கிப் பயணிக்க வேண்டும்” என்று சொன்ன கஜேந்திரகுமார் இராஜபக்சாவை அரசியலில் இருந்து அகற்றக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த மறுத்தார். மேலே கூறியவாறு இராஜபச்சாவுக்கும் சிறிசேனாவுக்கும் இடையில் வித்தியாசமில்லை பெயரில்தான் வித்தியாசம் என்றார். ஆட்சி மாற்றத்தை இந்தியா, அமெரிக்கா விரும்பியது தெரிந்தும் தேர்தலை ஏன் புறக்கணித்தார்? இங்கேதான் கஜேந்திரகுமார் அவர்களின் அரசியல் ஞான சூனியம் பளிச்சிடுகிறது.
இப்படித்தான் வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணித்தார்கள். 13 ஏ திருத்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவே அதன் கீழ் உருவாக்கப்பட்ட வட மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றார்கள். ஆனால் 6 ஆவது சட்ட திருத்தத்தை ஏற்றுக்கொண்டு நடாளுமன்றத் தேர்தலில் ததேமமு போட்டி போடுகிறது. இந்தச் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது?
157 (ஏ) (1) சிறீலங்காவில் அல்லது வெளிநாட்டில் வாழும் ஒருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ சிறீலங்காவிற்கு உள்ளே ஒரு தனி அரசை உருவாக்குவதற்கு ஆதரவு, ஊக்கம், நிதியுதவி, வெளிப்படையான பரிந்துரை ஆகியவற்றை செய்ய முடியாது.
(2) எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சபை அல்லது அமைப்பு சிறீலங்காவின் நிலப்பரப்பில் ஒரு தனி அரசை நிறுவுவதற்கான நோக்கத்தை அல்லது குறிக்கோளை வைத்திருக்க முடியாது.
இந்தச் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை உட்பட பல தண்டனைகள் உண்டு. கஜேந்திரகுமாரின் இரண்டு தேசம் ஒரு நாடு என்பது இந்தச் சட்டத்தின் கீழ் வர வாய்ப்புண்டு. காரணம் அவர் “இரண்டு தேசம் ஒரு நாடு என்ற நிலைப்பாடு கூட எங்களுடையய நிலைப்பாடு அல்ல. இந்த நிலைப்பாடு மக்களுடைய நிலைப்பாடு. மக்கள் இதற்கு ஆணை கொடுத்திருக்கிறார்கள்.” அதாவது இறைமையுள்ள சுதந்திர தமிழீழத்துக்கு மக்கள் ஆணை (1977 இல்) கொடுத்திருக்கிறார்கள்.
நாங்கள் முன்னாள் போராளிகளை இணைத்தது வி.புலிகளது நிலைப்பாட்டையோ அல்லது ஒரு கொள்கையின் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அல்ல. எங்களைப் பொறுத்தளவில் அன்றையில் இருந்து இன்றைய வரைக்கும் நாங்கள் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தமிழ்மக்களது நிலைப்பாடு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு முன்னரே ஒரு நிலைப்பாடு இருந்தது. அந்த நிலைப்பாடு யாரால் உருவாக்கப்பட்டதென்றால் மிதவாத தலைமைகளாலே 76 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம்தான் எங்களது நிலைப்பாடு. 
அதாவது தமிழீழம்தான் தனதும் தனது கட்சியின் நிலைப்பாடு என்கிறார். அப்படிச் சொல்கிறவர் எப்படி ஒற்றையாட்சி அரசு எனச் சொல்லும் 6 ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார்?
13ஏ திருத்தம் ஒன்றுக்கும் உதவாது. 13 ஏ சட்டத்தை அடியோடு நிராகரிக்கிற தரப்பாக இருக்கின்றோம். அதை நாங்கள் ஒரு ஆரம்பப் புள்ளியாகக் கூடப் பார்க்க முடியாது என்பதை மிகத் தெளிவாக எங்களுடைய மக்களுக்குக் கூறியிருக்கின்றோம் என்று சொல்லி விட்டு அதைவிட மோசமான 6 ஆவது திருத்தச் சட்டத்துக்கு விசுவாசம் தெரிவித்து தேர்தலில் போட்டியிடுவது மக்களை ஏமாற்றும் வேலை இல்லையா?
“இலங்கைத் தீவை மையப்படுத்திய பூகோள அரசியல் போட்டியை நாங்கள் பயன்படுத்த வேண்டும். வருகிற சந்தர்ப்பங்களை சரியாக நாங்கள் பயன்படுத்தி நாங்கள் முன்னுக்குப் போக வேண்டும” என்று சொல்லும் கஜேந்திரகுமார் இந்தியாவோடும் மேற்குலக நாடுகளோடும் பகைமை பாராட்டுகிறார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாக குற்றம் வேறு சாட்டுகிறார். அமெரிக்காவின் தாளத்துக்கு ததேகூ ஆட்டம் போடுவதாகவும் குறைபடுகிறார்.
தமிழ் தேசத்துக்கு அங்கீகாரம் கிடைத்தால் தமிழ்மக்களது சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார். அந்த அங்கீகாரத்தை எப்படிப் பெறுவது? யாரிடம் இருந்து பெறுவது? இந்தியாவையும் அமெரிக்காவையும் பகைத்தால் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்குமா?
இந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய பத்மினி சிதம்பரநாதன் தன்னையும் செல்வராசா கஜேந்திரனையும் ததேகூ வெளியேற்றிவிட்டதாகவும் அதன் காரணமாகவே தான், கஜேந்திரன், கஜேந்திரகுமார் மூவரும் சேர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தோற்றுவித்ததாகவும் சொன்னார். அவர் சொல்வதில் உண்மையில்லை. பத்மினி, கஜேந்திரன் இருவரும் கடைசிப் பொழுது வரை ததேகூ இடம் நியமனம் வாங்க படாதபாடு பட்டார்கள். அது தொடர்பாக என்னையும் இரா. சம்பந்தரோடு பேச வைத்தார்கள். அப்போதும் நியமனம் மறுக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த மூவரும் புதுக் கட்சி தொடங்கினார்கள்.
கஜேந்திரகுமாரைப் பொறுத்தளவில் அவருக்கு நியமனம் கொடுக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் தனது கட்சிக்கு இரண்டு இடம்போதாது மேலாதிகமாக ஒரு இடம் கேட்டார். அதற்கும் ததேகூ சம்மதித்தது. ஒரேயொரு நிபந்தனை. தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குடாநாட்டின் கரையோர மக்களைப் பிரதிநித்துவப் படுத்துபவராக இருக்க வேண்டும். அதற்குச் சம்மதித்த கஜேந்திரகுமார் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார். போனவர் போனதுதான். திரும்பி வரவேயில்லை. புதுக்கட்சி தொடங்கப் போவதான செய்தி மட்டும் ஏடுகளில் வெளிவந்தது!
கஜேந்திரகுமார் ததேகூ இல் இருந்து வெளியேறியதற்கு புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார்தான் காரணம். இன்னும் துல்லியமாக வன்னிக் கட்டமைப்பின் வாரிசுகள்தான் காரணம். அவர்கள்தான் இலண்டனுக்கு அடிக்கடி போன கஜேந்திரகுமாருக்கு குழைக்கடித்து அவரைப் பப்பாத்தி மரத்தில் ஏற்றினார்கள்.
அதே வன்னிக் கட்டமைப்பின் வாரிசுகள்தான் இந்தத் தேர்தலிலும் அவரைக் கரைசேர்க்கப் படாதபாடு படுகிறார்கள். பணத்தை வாரியிறைக்கிறார்கள். சைக்கிளுக்கு போடு புள்ளடி என அனைத்துலக ஈழமக்கள் பேரவை அறிக்கை விடுகிறது. சென்ற சனாதிபதி தேர்தலில் மதில்மேல் பூனையாக இருந்த அமைப்புகளில் இந்த அமைப்பும் ஒன்று. இன்னொரு கூட்டம் மாற்றத்துக்கான குரல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்! ஆனால் எமது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ததேகூ இன் பலம் மக்களின் பலம். மக்களின் பலம் ததேகூ இன் பலம்!
13 ஏ நிராகரிக்கிற கஜேந்திரகுமார் 6 ஆவது சட்ட திருத்தத்தை ஏற்று தேர்தலில் போட்டியிடுவது ஏன்? மக்களை ஏமாற்றும் எத்தனம் இல்லையா?

ad

ad