புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015

கயிறே, என் கதை கேள்! - முருகன் சொல்லும் கண்ணீர் தூங்கியும் தூங்காமலும்..!

சித்ரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்ரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எ
ல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும் எனக் குரூரத்தோடு யோசித்து, பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்தினார்கள்.
...
இரவு 10 மணிக்கு ஒரு அதிகாரி என்னை அழைத்தார். ஈரக்குலை நடுங்க உயிரைக் கையில் பிடித்தபடி நின்றேன். 'அந்தக் கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்’ என்று மிரட்டினார். இதேபோல் எத்தனையோ தடவை அதிகாரிகள் என்னை விசாரித்து இருக்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களைக் கண்ணீரோடு அவர்களிடம் சொல்வேன். புதுமுக இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் போல் அலட்டிக்கொள்ளாமல் கேட்பார்கள். 'இவராவது நம் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்வாரா?’ என ஏக்கத்தோடு நடந்த விஷயங்களைச் சொல்வேன். எந்த பதிலும் சொல்லாமல், பிரம்பைக் கையில் எடுப்பார்கள்.
என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதற்றத்தில் என் நரம்புகள் எல்லாம் உடலுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும். ரத்தச் சிவப்பைப் பார்த்தால்தான் பிரம்புகளுக்கு நிறைவு வரும்.
ஆனால், மௌனத்தோடு என் முகத்தை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டு இருந்த அந்த அதிகாரி மீது எனக்கு மெல்லிதாக நம்பிக்கை வந்தது. 'நிச்சயம் இவர் என்னைப் புரிந்துகொள்வார்’ என என்னை நானே தேற்றிக்கொண்டு, நடந்த விஷயங்களை சொல்லத் தொடங்கினேன். பல முறைச் சொல்லிச் சொல்லி என் வேதனைகள் எனக்கே பழகிப்போய் இருந்தன.
தலை குனிந்தபடி சொல்லிக்கொண்டு இருந்த நான் சற்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் டேபிளில் சாய்ந்தபடி கண்களை மூடி இருந்தார். இவ்வளவு கோரங்களைக் கேட்டபடி ஒருவர் தூங்குகிறார் என்றால், குரூரத்தின் எத்தகைய ரசனையாளராக அவர் இருந்திருப்பார்?
என் கண்ணீரும் ஒப்பாரியும் அவருக்குத் தாலாட்டுப் பாடல் மாதிரி இருந்திருக்குமோ என்னவோ... தன்னை மறந்து நாற்காலியில் சாய்ந்துகிடந்தார். 'இவரிடம் பேசி என்னாகப் போகிறது? எதுவுமே செய்ய முடியாதவனின் கடைசி வெளிப்பாடுதான் கண்ணீர். ஆனால், அதனையும் அலட்சியப்படுத்துபவர்களிடம் நாம் என்ன செய்ய முடியும்? என நினைத்தபடி, என் பேச்சை நிறுத்தினேன். ஆலங்கட்டி மழை தகரக் கூரையில் விழுந்தால் எப்படி இருக்கும்? சடசடவென அப்படி ஒரு சத்தம்... லத்தியை எடுத்து முதுகு, முகம் என விளாசத் தொடங்கிய அந்த அதிகாரி, பெரும் குரலெடுத்து அலறினார்.
'என்னையா ஏமாத்தப் பார்க்குறே... நாயே...’ எனக் காட்டுக் கத்தல் கத்தியபடி பிரம்பால் விளாசித் தள்ளினார். நாய் என்கிற வார்த்தையின் தொடர்ச்சியாக அவர் சொன்ன... இல்லை இல்லை... அவர் உமிழ்ந்த அசிங்க வார்த்தைகள் இப்போதும் என் நெஞ்சுக்குள் அமிலத் துளிகளாக அரிக்கின்றன. 'மன்னிச்சுக்கங்க சார்... நீங்க தூங்கிட்டீங்கன்னு நெனச்சு பேச்சை நிறுத்திட்டேன்’ என ஈனஸ்வரத்தில் புலம்பினேன்.
'என்னையப் பார்த்தா சினிமா போலீஸ் மாதிரி தெரியுதா? விசாரணை செய்யிறப்பவே நான் தூங்குவேனாடா நாயே...’ எனக் கொந்தளித்தார்.
மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து கொட்டத் தொடங்கினேன். வழக்கம்போல் நாற்காலி மீது சாய்ந்தார்; கண்களை மூடியபடி படுத்தார். தூங்கிவிட்டார் என நினைத்துப் பேச்சை நிறுத்தினாலும் மிருகம்போல் அடிப்பாரே என நினைத்து, அவரை அந்த அறையின் ஐந்தாவது சுவராக நினைத்து முழு விஷயங்களையும் சொல்லி முடித்தேன். நேரம் நள்ளிரவைத் தொட்டது. காயங்களால் கிழிந்து தொங்கிய உடல் சாய்வுக்காக ஏங்கியது. என்னையும் மீறி உடல் தடுமாறத் தொடங்கியது.
'டேய்... முழுசும் சொல்லிட்டியா?’ - டேபிள் மீது கிடந்த அதிகாரி தலையை உயர்த்திக் கேட்டார். ஆமாம் எனத் தலையாட்டினேன். 'சரி, நீ பேசிக்கிட்டு இருந்தப்ப நான் தூங்கிட்டேன். அதனால, மறுபடியும் ஆரம்பத்தில இருந்து சொல்லு...’ என்றார்.
'தண்ணி’ எனக் கேட்கக்கூட என் தொண்டைக்கு சக்தி இல்லை. தூக்கம் இல்லாமலும், கால் கடுக்க நின்றதாலும் தொண்டைக்குக் கடுமையான வறட்சி... 'தண்ணி கொடுங்க’ என்பதைக் கைகளைக் காட்டி சைகையாகச் சொன்னேன். ''ஏண்டா, வேசி மகனே... என்னையவே முறைக்கிறியா..?'' எனத் திட்டியபடியே கண்மூடித்தனமாக அடித்தார். அவருக்கு கை வலிக்கும் என நினைத்து இன்னும் சில காவலர்கள் அடிப்பதற்குத் தோதாக என்னைத் தூக்கிப் பிடித்துக்கொண்டார்கள்.
அடித்து, திட்டி, காறி உமிழ்ந்து, 'இன்னிக்கு இது போதும்’ எனச் சொல்லி அவர் என்னை விடுவித்தபோது மணி அதிகாலை 4. அறையில் வந்து விழுந்ததுகூட எனக்கு நினைவு இருக்காது. அதிகபட்சம் ஒரு மணி நேரம்கூட நகர்ந்திருக்காது. மறுபடியும் தலைக்குப் பக்கத்தில் லத்தியால் தரையைத் தட்டுவார்கள். தூக்கமும் அசதியும் போன இடம் தெரியாமல், மறுபடியும் உடல் பதறிப்போய் துடிக்கும். அவ்வளவுதான்... அதன் பிறகு என்னைத் தூங்க அனுமதிக்க மாட்டார்கள். நிற்க முடியாமல், மண்டியிட்டுக் கெஞ்சிக் கூத்தாடுவேன். மனதில் இரக்க நரம்புகளே இல்லாத மிருகங்களைப்போல், வார்த்தைகளால் துளைத்தெடுப்பார்கள். நக்கல் அடித்துச் சிரிப்பார்கள், நான் புனிதமாக மதிக்கும் உறவுமுறைகளைத் தவறாகச் சித்திரித்துச் சிரிப்பார்கள். அவ்வளவு அசதியிலும், அந்த வார்த்தைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு பதில், ஒரே வெடுக்கில் நாக்கைப் பிடுங்கிப்போட்டு இறந்தே போகலாம். ஆனால், உறவுகளைக் கொச்சைப்படுத்திப் பேசுவதுதான் எனக்கு வலிக்கிறது எனத் தெரிந்து, துன்புறுத்தித் துடிக்கவைக்கும் வழியைக் கண்டுபிடித்தவர்களைப்போல், அதே மாதிரியான வார்த்தைகளையும் அசிங்க வர்ணிப்புகளையும் செய்தார்கள்.
அவற்றை விளக்கமாகச் சொல்வதே என்னை இன்னொரு முறை நானே அவமானப்படுத்திக்கொள்வதற்குச் சமம். என் மனைவி, தாயார், சகோதரிகள், மாமியார் ஆகியோரை மற்ற ஆண்களுடன் தொடர்படுத்தித் திட்டினார் அந்த அதிகாரி. என் மாமியார் அவர்களை நான் என் தாய்க்கு நிகராக மதிப்பவன். அந்தப் புனிதத்தை எல்லாம் மதிக்காமல் அடிப்படைப் பண்புகளே அற்றுப்போனவர்களாக அந்த அதிகாரி சொன்ன வார்த்தைகள் என்னை ஒரேயடியாகப் பொசுக்கிப்போட்டன. எதையுமே செய்ய முடியாத என் சொரணை அவமானத்தில் சுருண்டுபோனது.
இதேபோல் தொடர்ந்து 20 நாட்கள் விசாரித்தார்கள். என் மனைவி நளினிக்கும் இதேபோல் சித்ரவதை. எட்டு கண்காணிப்பாளர்கள் மாறி மாறி நளினியை அடியாலும், அமிலத்தைப் போன்ற வார்த்தைகளாலும் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் எமது ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்த அதிகாரி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கொடூரர். அவர் பெயரைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் மனு போட்டோம். சி.பி.ஐ., எஸ்.ஐ.டி-யில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றியதால், சித்ரவதை செய்தவர்களின் பெயர்களைக்கூட எங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை. எமக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகள் பற்றி குறுக்கு விசாரணையின்போது பதிவு செய்தேன்.
அந்த வழக்கில் என் மனைவி நளினியை அப்ரூவர் ஆக்க சி.பி.ஐ, எஸ்.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் மூலம் அதிகாரிகள் விருப்பப்படி என்னை முதன்மை எதிரியாக மாற்ற நினைத்தார்கள். இதற்காக அவர்கள் செய்த சதிதான் சகிக்க முடியாதது. அதற்கு முன்னர் இன்னொருவருக்கு நடத்தப்பட்ட சதியைச் சொல்கிறேன். நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தை நான் கண் முன்னால் எதிர்கொண்டவன்.
அந்தக் கொலை வழக்கில் ரங்கநாத் (ஏ-26) என்பவரைக் கைது செய்த பின்னர், அவரது மனைவி மிருதுளாவை அவரிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தார்கள். ரங்கநாத்துக்கு எதிராக சாட்சி சொல்லவைத்து டிரையல் கோர்ட்டில் மரண தண்டனை வாங்கிக் கொடுத்தனர். ரங்கநாத் அவர்களின் மனைவி மிருதுளாவை ஒரு சி.ஆர்.பி.எஃப். அதிகாரிக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். 36 வயதுக்கு மேலான மிருதுளாவுக்கு அரசு விதிகளை மீறி மத்திய அரசில் வேலையும் வாங்கிக் கொடுத்தனர்.
சித்திரிப்புகளுக்காகக் கல்யாணக் கலாட்டாக்களைக்கூட அதிகாரிகள் நடத்தினார்கள். இதேபோல் என் மனைவியை எனக்கு எதிராக மாற்ற சாம, பேத, தான, தண்ட உத்திகளை எல்லாம் கையாண்டார்கள். என் மனைவிக்கு ஒரு போலீஸ் அதிகாரியைத் திருமணம் செய்துவைக்கவும், அரசு வேலை பெற்றுத்தரவும், சொந்த வீடு வாங்க அரசு உதவி பெற்றுத் தரவும், பாதுகாப்பு கிடைக்கவும் ஆசை காட்டினார்கள். அடி உதைக்கு மசியாதவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அதிகாரிகளின் சிறுபிள்ளைத்தனமான எண்ணம்.
அந்த வார்த்தைத் தூண்டில்களில் நளினி சிக்கவில்லை. அடுத்தபடியாக இன்னொரு அஸ்திரம் எடுத்தார்கள். நளினி என்னை எப்படியாவது வெறுக்க வேண்டும் என நினைத்து என்னைப் பற்றி அவதூறு பரப்ப ஆரம்பித்தார்கள். எனக்கும் நளினிக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை நளினியிடம் சுட்டிக் காட்டினார்கள்.
'அவன் சிலோன்காரன்... உன்னைய ஏமாத்திட்டுப் போயிடுவான். நாங்க விசாரிச்ச வரைக்கும் உன் மேல அவனுக்கு அன்பே கிடையாது. அவனுக்கு ஏற்கெனவே பல பொண்ணுங்களோட தொடர்பு இருக்கு. அதை எல்லாம் எங்க விசாரணையிலேயே அவன் ஒப்புக்கிட்டான். ஆனா, உன்கிட்ட அவன் நடிக்கிறான்!’ என விதம் விதமாகத் திரைக்கதை எழுதி, நளினியிடம் சொன்னார்கள்.
நளினி கடைசி வரைக்கும் அசைந்து கொடுக்காததால், அதே வித்தைகளை என்னிடமும் பரப்பத் தொடங்கினார்கள். 'அவளுக்கு ஏற்கெனவே ரெண்டு லவ்வர்ஸ் இருக்காங்க. நளினியின் பழக்கவழக்கம் தப்பானது. நீ நம்பவில்லை என்றால், நாங்கள் நிரூபித்துக் காட்டுகிறோம். நீ அவளைவிட சின்னப் பையன். அதனால்தான் உன்னைய சுளுவா ஏமாத்திட்டா..!’ என ஆபாசக் கதைகள் எழுதும் ஆசாமிகளைப் போல் சொன்னார்கள்.
இருவருமே இந்த அபவாதங்களை நம்பாத நிலையில், சின்னஞ்சிறு சிசுவாக நளியின் வயிற்றில் வளர்ந்த எங்களின் வாரிசு மீது அவர்களின் பார்வை திரும்பியது. வரம்புமீறலையே வாய்ப்பாடாக வைத்திருப்பவர்களுக்கு எங்களின் சிசுவைச் சிதைப்பது சிரமமே அல்ல. ஆனால், எங்கள் தாம்பத்தியத்தின் அடையாளம் அந்த சிசு. ரத்தச் சுவடுகளுடன் கர்ப்பப்பையில் வளரும் அபாக்கியக் குழந்தை அது. என் வாரிசுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்கிற அவஸ்தையில், எதற்கும் ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.
- காயங்கள் ஆறாது

ad

ad