புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 நவ., 2015

வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: சச்சின் அணியை வீழ்த்தி தொடரை வென்றது வார்னே அணி

 
ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியாக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டி நடப்படுகிறது.
இதில் சச்சின் டெண்டுல்கரின் சச்சினின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணியும், ஷேன் வார்னேயின் வார்னேஸ் வாரியஸ் அணியும் மோதுகின்றன.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வார்னே அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரின் 2வது டி20 போட்டி டெக்சாஸில் உள்ள ஹொஸ்டனில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற சச்சின் முதலில் வார்னே அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதைத் தொடர்ந்து அந்த அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் மைக்கேல் வாகன் (30), ஹேடன் (32) அதிரடி தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த காலிஸ் 23 பந்தில் 4 சிக்சர் உட்பட 45 ஓட்டங்கள் எடுத்தார்.
பொண்டிங் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 16 பந்தில் 41 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய சங்கக்காரா 30 பந்தில் 6 சிக்சர் 6 பவுண்டரி உட்பட 70 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வார்னே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை குவித்தது. சைமோன்ஸ் (19), ஜான்டி ரோட்ஸ் (18) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சச்சின் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ஷேவாக் (16) இந்தப் போட்டியில் ஏமாற்றினார். சச்சின் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜெயவர்த்தனே (5), கங்குலி (12), லாரா (19) நிலைக்கவில்லை. பொல்லாக் 7 சிக்சருடன் 55 ஓட்டங்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் சச்சின் அணியால் 8 விக்கெட்டுக்கு 205 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வார்னே அணி கைப்பற்றியது.
70 ஓட்டங்கள் குவித்த வார்னே அணியின் சங்கக்காரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.