12 நவ., 2015

யாழில் காணாமற்போனோரின் உறவுகள் ஐ.நா.குழுவினரிடம் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் காணாமற்போனோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள காணாமற்போனோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா.செயற்குழு இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்களைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுச் செல்வதற்காக வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு, காணாமல் போனோர் சார்பாக இந்த அமைதியான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், உறவுகள் கறுப்புத் துணியால் தமது வாய்களைக் கட்டிக்கொண்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தரும்படியும், விசாரணைகள் துரிதமாக நடைபெறுவதுடன், அது மிகவும் நம்பிக்கையானதாக இருக்க வேண்டும் என்றும் காணாமல் போனோரின் உறவுகள் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன், காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கிய அவர்கள், தமது உறவுகளை கண்டுபிடித்து தரும்படி கண்ணீர் மல்க தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

இதேவேளை நேற்றைய தினம் ஐ.நா விசேட பிரிதிநிதிகள் குழு மன்னாரிற்குச் சென்று காணாமற்போனோரின் உறவுகள் 40 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.