புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2016

பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி

 


பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி அளித்தார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள்

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இவர்களின் தாக்குதலை நமது ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.

முன்னதாக பஞ்சாப் மாநில குர்தாஸ்பூர் நகர போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங் வந்த காரை குர்தாஸ்பூர் அருகே தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மடக்கி காரில் இருந்த சல்விந்தர் சிங், அவருடைய நண்பரும், நகை வியாபாரியுமான ராஜேஷ் சர்மா, சமையல்காரர் மதன்கோபால் ஆகியோரை கடத்தினர்.

பின்னர் அவர்களை கடுமையாக தாக்கி, வெவ்வேறு இடங்களில் தனித்தனியே கீழே தள்ளி விட்டு காரை மட்டும் எடுத்துச் சென்றனர். அதன்பிறகு தாஜ்பூர் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு பதன்கோட் விமானப்படை தளம் நோக்கி சென்று தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

நடந்த சம்பவம் குறித்து முதல் முறையாக சல்விந்தர் சிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எந்திர துப்பாக்கிகள்

தீவிரவாதிகள் அனைவரும் ஏ.கே. 47 ரக எந்திர துப்பாக்கிகளை வைத்திருந்தனர். எனது 3 செல்போன்களில் இரண்டை பறித்துக் கொண்டனர். முதலில் நான் ஒரு போலீஸ் அதிகாரி என்பது அவர்களுக்கு தெரியாது. போலீஸ்காரர் ஒருவர் என்னை செல்போனில் அழைத்தபோதுதான் போலீஸ் அதிகாரி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.

பிறகு தீவிரவாதிகள் எங்கள் 3 பேரின் கண்களையும் துணியால் கட்டி மறைத்தனர். கைகளையும் மடக்கி பின்புறமாக கட்டினர்.

அவர்கள் என்னை கொல்வதற்காக மீண்டும் வந்தனர். அவர்கள் வருவதற்குள் எனது கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.

வழிபாட்டு தளம் ஒன்றில் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்துவிட்டு வந்ததால் துப்பாக்கி வைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் சாதாரண உடையிலும் இருந்தேன்.

எங்களை மடக்கிய தீவிரவாதிகள் அனைவரும் கைகளை மேலே உயர்த்தும்படி சொன்னார்கள். இன்னொரு தீவிரவாதி மண்டியிட்டு நில்லுங்கள் என்றான். எங்களை நீங்கள் பார்த்தால் உடனடியாக சுட்டுக் கொல்வோம் என்றும் மிரட்டினர். அந்த தீவிரவாதிகள் உருது, பஞ்சாபி, இந்தி கலந்து பேசினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்காதது ஏன்?

தீவிரவாதிகளை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை? என்று நிருபர்கள் கேட்ட போது, ‘‘அவர்கள் அத்தனை பேரும் எந்திர துப்பாக்கி வைத்திருந்தனர். எனினும் என்னை தீவிரவாதிகள் கடத்திய சம்பவம் குறித்து உடனடியாக மேலிடத்துக்கு தெரிவித்தேன். அதன்பின்னரே டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி. மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் பதன்கோட் விரைந்தனர்’’ என்றார்.

நீங்கள் சொன்னதை முதலில் போலீஸ் அதிகாரிகள் நம்பவில்லையா? என்றபோது, ‘‘அப்படி அல்ல. நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன். எனக்கு புதிய வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. என்ன நடந்தது என்பது எனக்குத்தான் தெரியும். நான் எப்படி உயிருடன் வந்தேன் என்பதையும் அறிவேன்’’ என்றார்.

ad

ad