புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2016

வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வதை கூடங்களுக்கான தடயங்கள் இரவோடு இரவாக அழிப்பு


வலி.வடக்கு வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வதை கூடங்களுக்கான தடயங்கள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளது.
தடயங்களாக காணப்பட்ட முட்கம்பிகள் அகற்றப்பட்டும், சுவர்களின் காணப்பட்ட தடயங்களுக்கு வர்ணம் பூசியுமே தடயங்கள் இல்லாதாக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் 468 ஏக்கர் நிலப்பரப்பு அண்மையில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் வீமன்காமம் வடக்குப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டிருந்த இராணுவத்தின் பாரிய முகாம் ஒன்றும் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த படைமுகாமில் இருந்த சில வீடுகளின் உட்பகுதிகளில் முட்கம்பிகள் கட்டப்பட்டும், மண் மூடைகள் அடுக்கப்பட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இராணுவ முகாமில் இருந்த ஏனைய வீடுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வித்தியாசமான முறையில் காணப்பட்டிருந்தது.
இதனால் இவ்வீடுகள் வதை கூடங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்பட்டிருந்து.
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் காணமல் போன தமது உறவுகளைப் போல் உள்ளனர் என்றும், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பாடசாலை சுவரில் காணமல் போனவருடைய கையெப்பம் இருந்தது என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பலர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
இதனால் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த இராணுவ முகாங்களில் இவ்வாறா வதை முகாங்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி கடந்த முதலாம் திகதி தினக்குரல் பத்திரிகையில் செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டதன் பின்னர் இரவோடு இரவாக குறித்த வீட்டிற்குள் வந்தவர்கள் வீட்டின் கூரையுடன் கட்டியிருந்த முட்கம்பிகளையும், மண் மூடைகள் மற்றும் கறுப்பு திரைகளையும் அகற்றிச் சென்றுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் சிங்கள மொழியினால் எழுதி ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகைகளையும் அவர்கள் அகற்றிச் சென்றுள்ளனர்.
மேலும் வதை கூடமாக பயன்படுத்தப்பட்ட வீடுகளின் சுவர்களில் வரையப்பட்டிருந்த படங்கள், எழுத்துக்கள் மற்றும் தயங்களுக்கு மேலும் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த வதை முகாமிற்குள் இருந்த இராணுவத்தின் சீருடைகளும், பாதணிகளும் தடயங்களை அழிக்க வந்தவர்களால் மீட்டுச் செல்லப்பட்டுள்ளது. இவ்வீட்டினைச் சூழவும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட வதை கூடங்கள் தொடர்பில் செய்தி வெளியிடப்பட்ட பின்னர் அங்கிருந்த தடயங்கள் அனைத்தும் விரைந்து அழிக்கப்பட்டமை அவ்வீடுகள் வதை கூடங்களாகத்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ad

ad