புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2016

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய காசில்லை. அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கோரும் பிள்ளைகளின் கதறல்

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய தம்மிடம் காசில்லையெனவும் அரச செலவில்
அடக்கம் செய்யுமாறும் கோரும் பிள்ளைகளின் கதறல் மூடிய அறைகளுள் முடங்கிப்போயுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண் போராளியாக செயற்பட்ட தொடங்கிய செல்வக்குமாரி, யுத்தத்தின் போது தனது கண்களை இழந்திருந்தார். இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
இருப்பதற்கு இடமில்லாமல் தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் அலைந்து இறுதியில் சகோதரன் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தார். அங்கு நுளம்பிற்கு மூட்டிய நெருப்பு அவளது உயிரையும் பறித்துள்ளது. உயிரிழந்த தமது அம்மாவை அடக்கம் செய்வதற்கு பிள்ளைகளிடம் பணம் இல்லாததால் அரச செலவில் அடக்கம் செய்யுமாறு பிள்ளைகள் கோரியிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:
வற்றாப்பளை கேப்பாப்பிலவை சேர்ந்த முப்பது வயதுடைய ஜீவா செல்வகுமாரி எனும் குடும்ப பெண்ணிற்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த பிள்ளைக்கு பதினேழு வயதும் கடைசி பிள்ளைக்கு இரண்டு வயதும் ஆகின்றது. இப்பெண் 2009 இறுதி யுத்தம் வரை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண் போராளியாக செயற்பட்டு வந்துள்ளார்.
இறுதி கட்ட யுத்தத்தின் போது ஒரு கண் பார்வையை முழுவதுமாக இழந்ததோடு மறு கண்ணின் பார்வையை இழக்கும் நிலையில் கடந்த ஆண்டு முதல் இருந்து வந்துள்ளார். தனது குடும்பத்தின் வறுமை காரணமாக அவரால் கண் பார்வைக்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை.
யுத்தத்தின் பின்னர் இரண்டு வருடங்கள் தடுப்பில் இருந்து வந்த செல்வக்குமாரியின் கணவன் பிரிந்து சென்ற நிலையில், செல்வக்குமாரிக்கென சொந்தமான வீடோ அல்லது காணியோ எதுவும் அற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்த கஸ்டமான சூழலில் தனது தங்கை வீட்டில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்த அவர், முரண்பாடு காரணமாக தங்கை வீட்டிலிருந்து வெளியேறி கொக்கிளாயில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு கடந்த டிசெம்பர் மாதம் பன்னிரண்டாம் திகதி பிள்ளைகள் மூவருடனும் சென்று தங்கியுள்ளார். அன்றைய தினம் இரவு அங்கு நுளம்பின் பெருக்கம் அதிகம் காணப்பட நுளம்பிற்கு புகை போடுவதற்காக மரக்கட்டைகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார்.
இதன் போது மண்ணெண்ணெய் தனது சட்டையிலும் ஊற்றியதை அறியாது விறகுக்கு தீ மூட்டிய தீ அவரது சட்டையிலும் பரவ, தீக்காயங்களுக்குள்ளான செல்வக்குமாரி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கடந்த இரண்டாம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அன்றைய தினம் பிற்பகல் 2.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பொலிசார் வருகை தராத காரணத்தால், செல்வக்குமாரியின் உடலம் மூன்று நாட்காளாக முல்லைத்தீவு பொலிசாரின் வருகைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரேத அறையில் காக்க வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் கேப்பாப்பிலவு பொலிசார் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வந்ததை தொடர்ந்து, திடீர் மரண விசாரணை அதிகாரியால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
உறவினர் தரப்பில் ஜெயக்குமாரியின் பதினேழு வயதுடைய மூத்த பெண் பிள்ளை மட்டுமே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு, வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்தார். தான் முல்லைத்தீவிலிருந்து பஸ் போக்குவரத்து காசுடன் மட்டுமே யாழ்ப்பாணம் வந்ததாகவும், அம்மாவை அடக்கம் செய்வதற்கு எம்மிடம் காசு இல்லை அரச செலவில் உடலத்தை அடக்கம் செய்யுமாறும் அப்பெண் திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் அழுதழுது கேட்டுள்ளார்.
பெண்ணின் குடும்ப நிலையை அறிந்து மனித நேய உணர்வாளர்கள் சிலர் உதவி சடலம் ஊருக்கு அனுப்பி இறுதி கிரியை நடந்துள்ளது. அம்மா இறந்ததன் பின்னர் நேற்று சாப்பிடக்கூட எம்மிடம் ஒருவழியும் இல்லை என அந்த பிள்ளை விசாரணை அதிகாரியிடம் கண்ணீருடே தெரிவித்திருந்தனர்.

ad

ad