கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே – அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம்
அவுஸ்திரேலியாவில் மருத்துவரான தனது கணவரை படுக்கையில் வைத்து கொலை செய்த இலங்கையரான பெண் மருத்துவர், தானும் தனது கணவரும் யுவதியொருவருடன் இணைந்து கூட்டாக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே இக் கொலையைச் செய்தார் என அவுஸ்திரேலிய நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சமரி லியனகே (35)எனும் இப் பெண், தனது கணவரான டாக்டர் தினேந்திர அத்துகோரளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்தாரெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலிய மாநில தலைநகர் பேர்த்துக்கு வடக்கிலுள்ள ஜெரால்ட்டன் நகரிலுள்ள இத் தம்பதியின் வீட்டில் மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு மேற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில், அரச தரப்பு சட்டத்தரணியான நிக்கோகின் தனது வாதத்தை முன்வைத்தபோது, “தினேந்திர அத்து கோரள அடிக்கடி தனது மனைவி மற்றும் ஏனைய பெண்கள் சகிதம் மூன்று பேராக இணைந்து பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு விரும்புபவர்.
இதனால், இத் தம்பதியினர் 17 வயதான யுவதியொருவருடன் இணைந்து பாலியல் உறவை ஆரம்பித்தனர்” எனத் தெரிவித்தார்.
“டாக்டர் சமரி லியனகே, தனது கணவர் மற்றும் மேற்படி 17 வயது யுவதியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதன் பின்னர், இவ்விடயம் குறித்து அவர் விசனமடைந்திருந்தார்.
யுவதியொருவருடன் தானும் தனது கணவரும் பாலியல் உறவில் ஈடுபட்ட விடயத்தை கணவர் அம்பலப்படுத்தினால் அது தனது தொழிற்சார் வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பாக அமையும் என சமரி லியனகே அச்சம் கொண்டிருந்தார்.
இந்த அச்சம் காரணமாக, சுத்தியல் ஒன்றினால் கணவர் தினேந்திர அத்துகோரளவை சமரி லியனகே தாக்கி கொலை செய்தாரென சட்டத்தரணி நிக் கோகின் நீதிமன்றில் கூறினார்.
2014 ஜூன் மாத்தில் ஒருநாள் அதிகாலை வேளையில் சமரி லியனேயின் தொலைபேசி அழைப்பு கிடைத்ததாகவும் அதிகாலை 6.18 மணியளவில் பொலிஸார் அவ் வீட்டை சென்றடைந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மெத்தையில் இரத்தம் வழிந்தோடிய நிலையில், தினேந்திர லியனேயின் சடலத்தை பொலிஸார் கண்டனர்.
அவ் வீட்டை அடைந்த முதல் பொலிஸ் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரியான மெத்தியூகேர்லி சாட்சியமளிக்கையில், “என்ன நடந்தது என நான் (சமரி லியனகேயிடம்) கேட்டேன். தனக்கு எதுவும் தெரியவில்லை என அவர் பதிலளித்தார்” என்றார்.
கட்டிலுக்கு அருகில் சுத்தியல் ஒன்றை தான் கண்டதாகவும் அப் பொலிஸ் அதிகாரி கூறினார்.
மேற்படி சுத்தியல் 1.79 கிலோகிராம் எடையுடடையது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியான டாக்டர் சமரி லியனகேயின் சட்டத்தரணி வாதிடுகையில், தனது கட்சிக்காரர், துன்புறுத்தப்பட்டு உறக்கமற்ற துயரம் கொண்ட நெருக்கடியில் சிக்கிய ஒரு பெண் எனத் தெரிவித்தார்.
“அவரின் கணவருக்காக கெமராவுக்கு முன்னால் ஒரு மொடல் போன்று செயற்பட வேண்டியிருந்தது. சிலவேளைகளில் பல மணித்தியாலங்கள் இது நீடித்தது” என்றார்.
தனது கணவரை கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டை டாக்டர் சமரி லியனகே நிராகரித்துள்ளார். இவ் வழக்கு விசாரணை தொடர்கிறது.
