புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2016

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் சிறைவைப்பா?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்?..நன்றி விகடன்

இன்று காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட்
பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது.
தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்!
சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓ
.பி.எஸ்ஸுன் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமியை ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சுந்தரபாண்டியனைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக, போயஸ் கார்டனின் ஊழியர் ரமேஷ், சிவகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஓ.பி.எஸ்ஸின் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறது.  "யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். ஒட்டுமொத்த நெட்வொர்க்கின் செயல்பாடுகளும் வந்தாக வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா.
இதனால், இதுவரையில் ஓ.பி.எஸ் தயவோடு கோலோச்சி வந்த அமைச்சர்களும் நடுக்கத்தில் உள்ளனர். ' சீட் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. அம்மாவின் கோபப் பார்வைக்கு ஆளாகாமல் இருந்தால் போதும்' என கோவில் கோவிலாக பூஜை செய்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.முருகன். நெல்லை மாவட்டத்தின் முதன்மையான கான்ட்ராக்டர். அந்த மாவட்டத்தில் உள்ள 120 ஒப்பந்ததாரர்களும் ஆர்.எஸ்.முருகனின் கண்ணசைவுக்குக் கட்டுப்படுவர். இவர் நாங்குநேரி தொகுதியின் அ.தி.மு.க செயலாளராகவும் இருக்கிறார். ஓ.பி.எஸ்ஸுக்கு ஆல் இன் ஆலாக இருந்து வந்த முருகன், இப்போது தலைமறைவாகிவிட்டார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முருகனின் திருவிளையாடல்கள் அதிகம். தான் எடுக்கும் வேலைகளை சப் காண்ட்ராக்ட் மூலம் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார்.
இதற்காக, 30 முதல் 40 சதவீத கமிஷனை ஓ.பி.எஸ்ஸிடம் சேர்க்கும் பணி முருகனுடையது. சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி, பாளை சட்டமன்றத் தொகுதிகளில் சீட் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் முருகன். சில மாதங்களுக்கு முன்பு குமாரசாமி என்ற சப் காண்ட்ராக்டர் முருகன் மீது புகார் கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். முருகனின் செல்வாக்கை அறிந்த போலீஸார், புகாரைக் கிடப்பில் போட்டுவிட்டனர்.
ஓ.பி.எஸ்ஸின் பரிவர்த்தனையில் முருகன் இருப்பதை அறிந்த போலீஸார், முருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொடும் காயம் விளைவித்தல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முருகனின் இருப்பிடத்தைக் கண்டறிய பாளை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தீவிரமாகத் தேடி வருகிறார். முருகன் பிடிபட்டால் ஓ.பி.எஸ்ஸின் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விபரங்களும் தெரிய வரலாம் என்பதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால், அதிர்ந்து போயிருக்கிறார் ஓ.பி.எஸ். இதன் உச்சகட்டமாக கைது நடவடிக்கை வரை போகலாம் என்பதால் அவரது கூடாரமே அதிர்ந்து போயிருக்கிறது. இதற்குக் காரணமாக, நடந்த சில அபசகுன சம்பவங்களை பட்டியல் போட்டார் ஓ.பி.எஸ் நண்பர் ஒருவர். தேனி, பழனிசெட்டிப்பட்டி அதிமுக தலைமைக் கழக கட்டட திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் பலியானார்.
பெரியகுளம் தொகுதியில் நடந்த நலத்திட்ட விழாவில் ஜெயலலிதா படம் சரிந்து விழுந்தது, போடி திருமண விழாவில் மின்சார ஒயர் அறுந்து முத்துராஜ் என்பவர் படுகாயம் அடைந்தது என தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களால் அதிர்ந்து போயிருக்கிறார் ஓ.பி.எஸ்.
சட்டமன்ற தேர்தல் சீட்டுக்காக வாங்கப்பட்ட பணம், 5 ஆண்டுகளில் குவிந்த பணம், வாங்கிக் குவித்த சொத்துக்கள், பினாமிகளின் விவரம் என அனைத்து புள்ளிவிபரங்களும் ஜெயலலிதா வசம் சென்றிருக்கிறதாம். இவை அனைத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் கார்டன் இறங்கியிருக்கிறது. இதையடுத்து, 'விசாரணை முடியும் வரையில் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்' என ஓ.பன்னீர்செல்வத்திற்கு கார்டன் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினரான மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். கார்டனுக்கு நெருக்கமான மன்னார்குடி உறவினர்களும், சில காவல்துறை அதிகாரிகளும் ஓ.பி.எஸ்ஸிடம் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டனர். முடிவில், ஓ.பி.எஸ் வாங்கிக் குவித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். உச்சகட்டமாக, ஓ.பி.எஸ் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் அதிரடிக்கிறது.

ad

ad