புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2016

ண்ணாவிரதத்தை கைவிடுமாறு கைதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை!



அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைப்பு பிரேரணை விவாதிக்கப்பட்ட பின்னர் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு முடிவொன்று எடுக்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
முற்பகல் 10 மணிமுதல் நண்பகல் வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் கைதிகளின் விவகாரம் முக்கிய பிரச்சினையாக நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
கைதிகள் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
85 தமிழ் அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்பும் செயற்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலைமைகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், புனர்வாழ்வு விடயத்தில் கைதிகளின் இணக்கப்பாட்டைப் பெறுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், நாளை மறுநாள் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை முன்வைக்கப்படவிருப்பதால், அதனைத் தொடர்ந்து இது விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இதனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அரசியல் கைதிகளிடம் கோரிக்கை விடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கைதிகள் விவகாரம் தவிர, கூட்டமைப்பின் ஒற்றுமை, இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம், கட்சிப் பதிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையின் முகவுரையில் இருந்த 'இனப்பிரச்சினைத் தீர்வு' என்ற விடயம் நீக்கப்பட்டமை குறித்து பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பில் கூட்டமைப்பு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

ad

ad