22 மே, 2016

ராஜபக்ஷவினரின் சொத்துக்கள் குறித்து கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும்: மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்துக்கள் குறித்து அரசாங்கம் கட்டாயமாக
விசாரணைகள் நடத்த வேண்டும் என்று மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க ஊடக நிறுவனமொன்றின் ஞாயிறு வார இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாடசாலை அதிபர் ஒருவருடன் சேர்ந்து நான்தான் முதன்முதலில் கார் ஒன்றை வாங்கிப் பரிசளித்தேன். அதனை எடுத்துக் கொண்டுதான் மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் கொழும்பு வந்தார். அதே போல மஹிந்தவின் முதலாவது தேர்தலில் அனைத்தையும் நானே செய்தேன் என தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் குடும்பத்தினருடன் எனக்கு இரண்டு தலைமுறைகள் நெருக்கம் உள்ளது. எனவே அவர்களின் சொத்துக்கள் குறித்தும் எனக்குத் தெரியும். இன்று அவர்கள் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கியிருப்பதும் தெரியும். இது குறித்து அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு சொத்துக்களை வாங்கும் அளவுக்கு ராஜபக்ஷவினருக்கு வசதிகள் இருக்கவில்லை என தெளிவூட்டியுள்ளார்.
களனியில் நான் செல்வாக்காக இருந்த காரணத்தினால் என்மேல் பொறாமை கொண்டு கோத்தபாய ராஜபக்ஷ என்னையும் என் மகனையும் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். தாக்குதல்களும் நடத்தினார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அவரது குடும்பத்தினரின் ஊழல்களுக்கு எதிராக யாரையும் பேச விடவில்லை. அவ்வாறான நிலையில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட அவர் இனி மீண்டும் அரசியலுக்கு வர எந்த அருகதையும் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், கூட்டு எதிர்க்கட்சி என்பதும் பொய், அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். அதன் பின் அவர்கள் தனியாக இயங்க முடியாது. அவ்வாறு இயங்க வேண்டுமாயின் அவர்கள் அனைவரும் தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் மேர்வின் சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.