புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 மே, 2016

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன்


காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்திடவும், களியமலைகிராமம் வாக்கு சாவடி எண் 81ல் மறுவாக்குப்பதிவு நடத்திடவும் தேர்தல் ஆணையத்திடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அத்தொகுதியின் வேட்பாளருமான தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 19.05.2016 அன்று நடைபெற்ற காட்டுமன்னார்கோயில் தொகுதி 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது களியமலை கிராமத்தில் வாக்குசாவடி எண் 81ல் பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரம் பழுதானது (இயந்திரம் எண்-L14732). வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கையை அந்த இயந்திரம் காட்டவில்லை. 16.05.2016 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போதும் அந்த வாக்கு பதிவு இயந்திரம் இயங்காததால் வாக்குபதிவு தாமதமாக நடந்திருக்கிறது.

பழுதான இயந்திரத்திற்கு விடை தெரியாமல் வாக்கு எண்ணிகையை தொடரக்கூடாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். தேர்தல் அதிகாரி அந்த பழுதான இயந்திரத்திலிருந்து காகிதத்தில் அச்சு எடுத்து வாக்குஎண்ணிக்கையை காட்டியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் அந்த குறிப்பிட்ட வாக்குசாவடியில் மறுவாக்குபதிவு நடத்த உத்தரவிடாமல், பழுதான இயந்திரத்திலிருந்து வெளியான அச்சுபிரதியை தேர்தல் அதிகாரி எப்படி ஏற்றுக்கொண்டார்? அதை பதிவான மொத்த வாக்குகளில் எப்படி சேர்த்தார்?

101 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். தேர்தல் அதிகாரி தனது கடமையை சரியாக செய்திருந்தால் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அதிக வாக்குகளை பெற்று வென்றிருப்பார். தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி மறுவாக்கு எண்ணிகையை தேர்தல் அதிகாரி நடத்தி இருக்கலாம். மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் அதிகாரி உள்நோக்கத்துடனே புறந்தள்ளியதாக தெரிகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமெனவும், களியமலை கிராமத்தில் வாக்குசாவடி எண்:81ல் வாக்குப்பதிவு இயந்திரம் எண்-L14732 பழுதானதால் தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில் உள்ளபடி அந்த வாக்குசாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டுமெனவும் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி அவர்களுக்கும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களுக்கும் இன்று (30.05.2016) இன்று திருமாவளவன் மனு அளித்துள்ளார்.