புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2016

இந்திய வஞ்சகம்அ.யல் நாட்டுஅகதிகளுக்கு குடியுரிமை ஆனால்தமிழருக்குஇல்லைதாயும் தந்தையும் அகதி, தனயர்கள் அகதி, பேரன்களுமா அகதி?

நீண்டகால நுழைவு அனுமதி (Long Term Visa) பெற்று, இந்தியாவில் வசிக்கும் அண்டை நாட்டுச் சிறுபான்மையினருக்குக் கூடுதலாக
பல்வேறு சலுகைகளை அளிக்கவும், அவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவு செய்துள்ளது. வரவேற்கப்பட வேண்டிய முடிவு.
உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறி, நீண்டகால நுழைவு அனுமதி பெற்று இந்தியாவுக்கு வந்து தங்கியிருக்கும் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தச் சலுகைகள் நியாயமானதுதான்.
இந்தச் சலுகைகளின்படி, அவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கலாம், ஆதார் அட்டை பெறலாம், சுயதொழில் செய்யலாம், பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ் பெற முடியும், வேறு மாநிலத்துக்கு குடிபெயரலாம், விரும்பினால் இந்தியக் குடிமகனாகவும் மாறிக்கொள்ளலாம்.
இவர்களின் குடியுரிமை மனுக்களை பரிசீலிக்கவும் அங்கீகரிக்கவும் ஏழு வடமாநிலங்களின் 16 மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், இலங்கை அகதிகள் ஏன் சேர்க்கப்படவில்லை என்கின்ற நியாயமான கேள்வியை மத்திய அரசுக்கு நினைவூட்ட வேண்டியது அவசியமாகிறது.
கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழகத்தின் அகதி முகாம்களில் இருந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கிடைக்கவில்லை.
அவர்கள் வாழ்விடம் மோசமான சூழலில் உள்ளது என்பதுடன், அவர்கள் உயர்கல்வியும்கூட – ஒரு சில படிப்புகள் மட்டும் நிபந்தனையுடன் – அனுமதிக்கப்படுகிறது.
இப்போது அகதிகள் முகாம்களில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய மண்ணில் பிறந்தவர்கள்தான். ஆனால், அவர்கள் இந்தியக் குடிகள் அல்லர். இலங்கைக் குடிகளாக சான்று பெறவும் அவர்களால் இயலவில்லை.
இதற்கான முயற்சிகள் வெகுகாலத்துக்கு முன்பு நடைபெற்றன. முகாம்கள் தோறும் ஆய்வுகள் நடத்தி, இலங்கை தூதரகத்தின் உதவியுடன் குழந்தைகளை இலங்கைக் குடிமக்களாக பதிவு செய்யும் நடவடிக்கை அப்போது தொடங்கப்பட்டது.
ஆனால், அந்த நடவடிக்கை தமிழீழ விடுதலைக்கு எதிரானது என விடுதலைப் புலிகள் கருதினர். அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
அந்த நேரத்தில், விடுதலைப் புலிகளின் கருத்து சரியானதுதான். அகதிகளை இலங்கைக் குடிமக்களாக மாற்றி, புலிகளுக்கு எதிர்நிலையில் நிறுத்தும் முயற்சியாக அவர்கள் பார்த்ததில் உண்மை இருந்தது.
ஆனால், இப்போது அதுவல்ல நிலைமை. நீண்ட கால நுழைவு அனுமதி குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால், முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிந்தைய இலங்கை அகதிகளின் நிலைமையை மத்திய அரசு ஆய்வு செய்து பார்க்கவில்லை. கருத்திலும் கொள்ளவில்லை.
இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர அ.தி.மு.க. அரசு மத்திய அரசை வற்புறுத்தும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை என்பது கிடையாது என்பதே இந்திய அரசின் பதிலாக இருந்து வருகிறது.
அப்படியானால் விஜய் மல்லையா, லலித்குமார் மோடி ஆகியோர் எப்படி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார்கள் என்ற கேள்விக்கு அது “ஓவர்ஸீஸ் சிட்டிசன்ஸ் ஆப் இந்தியா” என்று சொல்லப்படுகிறது.
“ஓ.சி.ஐ” பெறுவதற்கு இந்தியாவில் பிறந்ததற்கான சான்றுகள் தேவை. விஜய் மல்லையா, லலித்குமார் மோடி ஆகியோர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அல்ல.
ஆனால், பிரிட்டனில் “நிரந்தரமாக வசிப்போர்’ (Permanent Resident). அவர்களுக்கு அங்கே தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் உண்டு.
தற்போது இலங்கையில் அமைதியான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அனுப்பிவிடலாமா என்பதிலும் இருவகையான கருத்து நிலவுகின்றது.
இலங்கையில் இன்னும் அமைதி திரும்பவில்லை, அவர்களுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவர்களை அனுப்ப வேண்டும் என்று சில அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.
அவர்களை முற்றிலுமாக அனுப்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக அனுப்ப வேண்டும் என்கிறது சில மிதவாத அரசியல் கட்சிகள்.
இலங்கையில் உள்ளவர்களோ அவர்களை அனுப்பி வையுங்கள். அவர்கள் வந்து தங்கள் நிலம், வீடு உடைமையை உரிமை கோராவிட்டால் அங்கெல்லாம் சிங்களக் குடியேற்றம் நடந்துவிடும் என்று புலம்புகிறார்கள்.
அவர்களை அனுப்பி வைக்கவும் யாரும் தயாரில்லை.முகாமைவிட்டு வெளியேறி, இங்கேயே நல்ல முறையில் தொழில்செய்து வாழவும் அனுமதிக்கவில்லை.
இரட்டை குடியுரிமை வழங்கவும் இந்தியச் சட்டம் இடம் தராது.
அவர்கள் ஆப்கான், பாகிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினரைப்போல நுழைவு அனுமதியுடன் வந்திருந்தால், அவர்களை இந்தியக் குடிகளாக மாற்றிவிட முடியும்.
ஆனால், உயிர் பிழைத்தால் போதும் என்று படகில் வந்து இறங்கியவர்களிடம் இலங்கைக்குடி என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை.
அகதிகள் முகாமில் பிறந்த அத்தனைக் குழந்தைகளும் இந்த மண்ணில் பிறந்த குழந்தைகள்தாம்.
சுமார் 50,000 குழந்தைகள் இருக்கக்கூடும். அவர்தம் பிறப்புக்கான ஆதாரங்கள் அகதிகள் முகாம் பதிவேட்டிலேயே இருக்கின்றன.
இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு, இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை என்றாலும் இந்தியக் குடியுரிமையையாவது வழங்கினால் என்ன?
இந்த விவகாரத்தை இழுத்தடிக்கக் கூடாது, விரைவான முடிவு தேவை.

ad

ad