20 செப்., 2016

இயக்குநர் பிரியதர்ஷன்-நடிகை லிசி-க்கு விவாகரத்து வழங்கி உத்தரவு

திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன-நடிகை லிசி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை மாவட்ட முதன்மை
குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழில் சிறைச்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவரும், விக்ரம் படத்தில் நடித்த நடிகை லிஸியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
பின்னர், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் பிரியதர்ஷன்-லிசி ஆகிய இருவரும் மனம் ஒத்து பிரிவதாக கடந்த மார்ச்சில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், இருவருக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கியது. இந்த கால அவகாசம் முடிவுற்றதைத் தொடர்ந்து, பிரியதர்ஷன்- லிசி ஆகிய இருவரும் மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். அப்போது முழு மனதோடு பிரிவதை உறுதிப்படுத்தும் விதமாக, உரிய ஆவணங்களில் நீதிபதி முன்பு இருவரும் கையெழுத்திட்டனர். 
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி மரியா கிளிட்டா பிறப்பித்த தீர்ப்பில், இருவரும் மனம் விரும்பி பிரிவதாக தெரிவித்துள்ளனர். ஆகையால், இதனை ஏற்று, இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 1990-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி சென்னை போரூர் கோயிலில் நடைபெற்ற திருமணம், அதைத் தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்யபட்ட திருமண பதிவையும் ரத்து செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.