புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

கோவணம் கட்டிக்கிட்டு, தாடியை சொறிஞ்சிக்கிட்டு திரிவான்னு நினைச்சிட்டியா... விவசாயிடா !

லகிற்கே படியளப்பவன் விவசாயி என்பார்கள். ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை
இன்று சிரமங்களுடன் காலம்தள்ளும் ஒரு ஜீவன் அந்த விவசாயிதான். 

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் கடந்த ஆண்டு ஆம் ஆத்மி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ராஜஸ்தான் மாநில விவசாயி கஜேந்தரா சிங், யாரும் எதிர்பாராத நேரத்தில், அருகில் இருந்த மரத்தில் ஏறி தூக்குப் போட்டுக்கொண்டார். பயிர்கள் சேதம் அடைந்து, பெரும் நஷ்டத்திற்குள்ளானதால் இனி தன்னால் தனது குழந்தைகளை காப்பாற்ற முடியாது என்ற விரக்தியில் அந்த  முடிவை எடுத்ததாக அவரது கடிதம் சொன்னது.

சத்தீஷ்கர்  மாநிலத்தில் விவசாயம் பொய்த்துப்போனதை குறிப்பிட்டு 'சாவதை தவிர வேறு வழியில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்விட்ட விவசாயி ஒருவரிடம், 'அதற்கு என்னிடம் எதற்கு வந்தீர்கள்...தாராளமாக சாகலாம் அதற்கு என் உத்தரவு அவசியமில்லை “என்று கிண்டலாக சொல்லியிருக்கிறார்.

தெலங்கானாவில் நொடித்துப்போன விவசாயி ஒருவர், "தப்பித்தவறி கூட ஒரு விவசாயி ஆகிவிடாதே!" என பள்ளியில் படிக்கும் தனது மகனிடம் கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டார் கடந்த வருடம்.

கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மகாராஷ்டிரா எம்.பி கோபால் ஷெட்டி, 'விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது ஃபேஷனாகிவிட்டதாக' சொல்லி விவசாயிகளை எள்ளி நகையாடினார் ஒரு பேட்டியில். இந்தியாவில் விவசாயிகள் நிலை இதுதான்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு ஆவண இயக்ககம் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. மாநிலத்திற்கு ஒரு பிரச்னையுடன் தமிழக விவசாயிகள் மள்ளுக்கட்டுவது கடந்த பல வருடங்களாக தொடர்கதையாகிவருகிறது. தொடர் போராட்டங்கள் நடத்தியும் அரசும் அதிகாரிகளும் தங்கள் பிரச்னைகளுக்கு செவிமடுக்காத விரக்தியில் காலத்திற்கேற்ப பாடை கட்டிப்போராட்டம், துாக்கு மாட்டும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என விதவிதமாக தங்கள் போராட்ட வடிவங்களை மாற்றிக்கொண்டுள்ளனர் தமிழக விவசாயிகள் இன்று.

தங்கள் பிரச்னைகளில் அரசையும் அதிகாரிகளையும் கவனம் செலுத்த வைக்க அரசியல்வாதிகளைப்போல் நுாதனமாக செயல்பட சிந்திக்க வைத்தததுதான் இந்திய அரசின் இமாலய சாதனை. 
கத்தி படத்தில் அரசும் பத்திரிகைகளும் விவசாயிகளின் கோரிக்கைகளை பொருட்படுத்தாதபோது வெகுண்டெழும் கதாநாயகன் ஒரு உபாயம் செய்கிறான். விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்த சென்னைக்கு குடிநீர் வரும் வீராணம் ஏரியின் ராட்சஷ குழாய்களில் ஏறி அமர்ந்து செயற்கையாக நீர்த்தட்டுப்பாட்டை உருவாக்குகிறான். திணறுகிறது சென்னை. கத்தி சொன்ன சேதியை புரிந்துகொண்ட விவசாயிகள் இன்று அதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் செய்துகொண்டிருக்கிறார்கள்.
  
இதனால் நேற்றுவரை செய்தித்தாள்களில் பத்தோடு பதினொன்றாக இடம்பெற்ற விவசாயிகள் பற்றிய செய்தி இன்று பிரதான பக்கங்களில் இடம்பெறுகிறது.

அப்படி நடந்த சில போராட்டங்கள்


பன்னாட்டு கம்பெனிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்த அவசர சட்டம் கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள குருங்குடி, கண்டமங்கலம், வீரநந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்,  தங்கள் வயல்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை
தஞ்சாவூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர், கூட்டுறவு வங்கிகளில் தங்கள் வீட்டுப் பெண்களின் தாலி முதற்கொண்டு எல்லா நகைகளையும் ஏலம் விடுவதை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தாலிகளை கொடுத்து 'அதிர்ச்சி' போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அடுத்து வரும் கூட்டத்தில் 100 பெண்களை அழைத்து வந்து தாலியை கழற்றி ஆட்சியரிடம் கொடுத்து போராட்டம் நடத்துவோம்" என திகில் கொடுத்துச் சென்றனர் என்பது வேறு கதை.

லால்குடி அதிகாரிக்கு நேர்ந்துவிட்ட ஆடுமாடுகள்

லால்குடியில் தண்ணியில்லை, விளைச்சல் இல்லை என காலம்காலமாக போராடி வந்த லால்குடி விவசாயிகள் ஒருநாள் திடீரென தங்கள் ஆடுமாடுகளை அழைத்துச் சென்று தண்ணியில்லை விளைச்சல் இல்லை. நீங்களே வைத்து பராமரியுங்கள் என லால்குடி சப் கலெக்டரின் வீட்டில் அத்தனையையும் கட்டிவிட்டு நடைகட்டினர் தங்கள் வீடுகளுக்கு. அதிர்ச்சியில் உறைந்துநின்றார் சப் கலெக்டர்.
ஆதிவாசியான விவசாயி!

இன்னொரு மாவட்டத்தில் தங்கள் நிலத்துக்கு பட்டா கொடுக்காமல் இழுத்தடித்த அதிகாரிகளிடம் பலமுறை மன்றாடியும் நீதி கிடைக்காத நிலையில் நுாற்றுக்கணக்கான விவசாயிகள் இலை தழைகளை மட்டும் அணிந்து தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாங்கள் இனி ஆதிவாசியாகப்போவதாக கூறி தாசில்தாரை கிறுகிறுக்கச் செய்தனர் சில மாதங்களுக்கு முன்.

பாடையில் விவசாயி
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது  உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் பாரத கிஷான் விவசாய சங்கத்தினர் கடந்த 2014 ம் வருடம் நடத்திய 14 நாட்கள் தொடர் போராட்டத்தின் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதவிதமான போராட்டத்தை நிகழ்த்தி பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பினர் விவசாயிகள்.

முதல் நாள் அரை நிர்வாண போராட்டம், இரண்டாவது நாளில் நெற்றியில் நாமம், மூன்றாவது நாள் சந்நியாசி வடிவம, நான்காவது நாள் குல்லா அணிந்தும், 5ஆம் நாள் வாயில் கருப்பு துணியுடன் அரை நிர்வாண போராட்டம் இறுதிநாளில் பாடைகட்டி ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். போராட்டத்தின் இறுதி நாளில்  தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு அதிர்ச்சி தந்தனர் விவசாயிகள்.

சென்னை

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிப்பது, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர் கடன்களை ரத்து செய்வது, விளை நிலங்களை ஜப்தி செய்யத் தடை, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த வருடம் அச்சங்கத்தின்  மாநில தலைவர்  அய்யாக்கண்ணு, போராட்டம் நடத்தினர்.  மண்ணை நேசிக்கும் விவசாயி சாந்தமானவன் என்ற கூற்றை அடித்து நொறுக்கும்விதமாக அந்த பேராட்டம் நிகழ்ந்த ஏப்ரல் மாதத்தின் ஓர்நாளில்  தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டதோடு சாலையில் படுத்துறங்கி அம்மாவுக்கே அதிர்ச்சி தந்தனர்.
மறுதினம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கடற்கரை காந்தி சிலை அருகே கடலில் இறங்கி கலக்கத்தை கொடுத்தனர் காவல்துறைக்கு.. போலீஸார் அவர்களை  மீட்டு கரைக்கு கொண்டுவர படாதபாடு பட்டனர்.

'இந்தியாவில் முதன்முறையாக' விவசாயிகளுக்கு வீட்டுக்காவல்

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்த எந்தவித அறிவிப்பும் இடம் பெறாததை கண்டித்து கடந்த வருடம் மார்ச் மாதம் விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்  அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன் எதிரொலியாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட நி்ர்வாகிகள் பலரை மாநில காவல்துறை அவரவர் வீட்டுக்காவலில் வைத்து அவர்களை முடக்கியது. விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்தது இதுவே இந்தியாவில் முதன்முறை என கொதித்தார் அய்யாக்கண்ணு.
நான்தான் அடுத்த ஜனாதிபதி!- விவசாயி தந்த கிலி

தங்கள் மீதான கவனத்தை கொண்டுவர விவசாயிகள் இத்தனை வழிமுறைகளை பின்பற்றுவதற்கு  முன்னோடி ஒருவர் உண்டு அவர்  “கோவணம் தங்கவேல்” . கடந்த 2012 ஜனாதிபதி தேர்தல் பரபரப்பில் இந்தியா இருந்தபோது இவரிடமிருந்து வந்த ஓர் அறிவிப்பு ஜனாதிபதி வேட்பாளர்களை சற்றே நெளியவைத்தது. ஆம்...ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
அறிவிப்பில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா...காரணம் முந்தைய தேர்தல்களில் மனுதாக்கலுக்கு அவர் அணிந்துவந்த உடை கோவணம்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த தங்கவேல் அதற்கு முன் கொடுத்த கோரிக்கைகள் பத்திரிகைகளில் 13 ம் பக்கத்தை மட்டுமே அதிகபட்சமாக எட்ட முடிந்தது. அவரது ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு மறுதினம் செய்தித்தாள்களில் முதற்பக்கத்தை அலங்கரித்தது. வேடிக்கையாக இருந்தாலும் வேதனையான உண்மை இது.

அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் ரேஞ்சுக்கு இப்படி விவசாயிகள் நுாதன வழிமுறைகளை கையாள்வது ஏன் என  திருச்சியில்  காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டு தரக் கோரி, மண்ணில் புதைந்து நூதன போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் கேட்டோம்.

“ ஒரு தாய் கூட எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அழுகிற பிள்ளைக்குத்தான் முதலில் பாலுட்ட விரும்புவாள். குழந்தை யின் அழுகையைதான் அதன் பசியாக அவள் உணர்வாள். அப்படிதான் எங்கள் குரலை எழுப்புகிறோம். இந்த நாட்டில் விவசாயிகள் இரண்டாம்தரக் குடிமகனாகவே கருதப்படுகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல் இந்த போராட்ட வடிவங்கள் விநோதங்கள் அல்ல; ஆண்டாண்டுகாலமாக போராடி கிடைக்காத உரிமைகளால் நாங்கள் அடைந்த விரக்தியும் வேதனையும். 'நாங்கள் சேற்றில் கால்வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைப்பீர்கள்' என பேசித்திரிவதில் இனி அர்த்தமில்லை என ஒவ்வொருவரும் உணர்ந்துவிட்டோம்.

1970 களில் 120 ரூபாயாக இருந்த பவுனின் விலை இன்று 24 ஆயிரம் ரூபாய். அதாவது 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே காலகட்டத்தில் 40 ரூபாயாக இருந்த 60 கிலோ நெல்லின் விலை இன்று வெறும் 850 மட்டுமே. அதாவது 22 மடங்கு மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதுவும் கூட குறிப்பிட்ட சில மாவட்டங்களில்தான்.  விழுப்புரம் கடலுார் திருவண்ணாமலை வேலுார் மாவட்டங்களில் வெறும் 600 மட்டுமே. இதுதான் இந்தியாவில் விவசாயிகளின் வேதனையான வாழ்க்கை.அன்று ஆசிரியர் சம்பளம் 90 ரூபாய். இன்று அது 400 மடங்கு அதிகரித்து 36000 என ஆகியுள்ளது. அன்று எம்.எல். ஏ சம்பளம் 250. இன்று 220 மடங்கு அதிகரித்து 55000 ஆகியுள்ளது. அன்று வங்கிப்பணியாளரின் சம்பளம் 150 ரூபாய். இன்று 66 ஆயிரம். கிட்டதட்ட 440 மடங்கு.

70களில் 1 டன் கரும்பு 80 ரூபாய். அதை வெட்ட ஆள் கூலி 5 ரூபாய். 1970 களில் இருந்த மற்ற பொருட்களில் விலை பல நுாறு மடங்குகள் உயர்ந்துவிட்ட இன்றைய நிலையில் விவசாயி உற்பத்தி செய்யும் பயிர்களின் விலை அதற்கு நேரேதிராக உள்ளது வேதனைக்குரியது.
பொதுவாக தனிநபர் காப்பீட்டில் சம்பந்தப்பட்டவருக்கு விபத்து ஏற்பட்டதும் அதற்கான தொகை கிடைக்கும். ஆனால் ஒரு விவசாயி தனது பயிருக்கு காப்பீடு செய்திருந்தாலும் பயிர் சேதம் அடைந்தாலும் அவருக்கு காப்பீட்டுத்தொகை கிடைக்காது. அவர் வசிக்கும் தாலுக்கா முழுவதுமான பயிர்களும் நாசமாகியிருக்கவேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்ற அமைப்புகள் தங்கள் உரிமைகளை போராட்டங்கள் மூலமே சாதிக்கின்றனர். சிறை செல்லவும் தயங்காமல் போராடுகிறார்கள். சிறைசென்றாலும் அவர்களுக்கான சம்பளம் உறுதி. ஆனால் விவசாயி போராடுகிறேன் என தெருவுக்கு வந்தால் அவன் ஒருநாள் வாழ்வாதாரத்தை இழக்கவேண்டிவரும். எத்தனை வெள்ளம் புயல் மழை வந்தாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. ஆனால் விவசாயிக்கு நட்டத்தினை சந்திப்பான்.

அதுமட்டுமின்றி சுய கவுரவம் அதிகம் கொண்ட விவசாயி சிறைக்கு செல்வதை அவமானமாக கருதுவான். இதுதான் நேற்று வரை விவசாயிகள் போராட்டங்களை நடத்தாததற்கு காரணம். ஆனால் இன்று நாட்டில் நடக்கிற சம்பவங்களால் நாமும் போராடினால்தான் எதையும் பெற முடியும் என்பதை உணர்ந்துகொண்டோம். உரிமைகளுக்காக ரோட்டில் இறங்கி போராட தயாராகிவிட்டோம்.

எங்கள் உரிமைகளுக்காக கொளுத்தும் வெயிலில் உருள்கிறொம். கடலில் குதிக்கிறோம், மரணக்குழியில் படுக்கிறோம், பிணமாக கிடக்கிறோம். சாலையில் போலீஸாரிடம் அடிபடுகிறோம். மலைக்கோட்டை யிலிருந்து குதிக்கவும் தயாரானோம். எங்கள் உரிமைகளை பெற வேறு வழியில்லை. எங்கள் குரல் அரசை சென்றடைய நாங்கள் இதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது.  நாராயணசாமி காலத்தில்கூட ஒருமுறைதான் சிறைசென்றனர். இதுவரை நாங்கள் 6 முறை ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறோம். எங்கள் மரணம்தான் அடுத்த தலைமுறையிலாவது விவசாயியை வாழவைக்கும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார் விரக்தியான குரலில்
.

ad

ad