புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2018

ஆசிரியைக்கு தண்டனை இடமாற்றம் - மீளப் பெற்றது வடக்கு கல்வி அமைச்சு!

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியைக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான இடமாற்றல் கடிதம் நீக்கப்படுகிறது. அந்த ஆசிரியைக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கைக்கு அமைவாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது”
இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று கட்டளையிட்டார்.
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியைக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான இடமாற்றல் கடிதம் நீக்கப்படுகிறது. அந்த ஆசிரியைக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கைக்கு அமைவாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது” இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று கட்டளையிட்டார்.

“ஆசிரியைக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதம் மீளப்பெறப்படுகிறது. அவருக்கு எதிராக எந்த ஒரு ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொண்டு முன்னெடுக்கப்படாது” என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட அறிக்கையையடுத்தே மேல் நீதிமன்றம் இந்தக் கட்டளையை வழங்கியது.

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியை திருமதி ஜெயகாந்தன் கலைச்செல்வி என்பவருக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் கடந்த நவம்பர் 11ஆம் திகதியிடப்பட்ட இடமாற்றல் கடிதம் வழங்கப்பட்டது. “முறையான ஒழுக்காற்று விசாரணை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யப்படல் வேண்டும் என்ற பரிந்துரைக்கு அமைவாக 01.01.2018 இலிருந்து செயற்படும் படியாக தாங்கள் கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றீர்கள். அத்துடன் தங்களுடைய சேவைக்காலத்தில் மீண்டும் யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையுடன் இந்த இடமாற்றம் வழங்கப்படுகின்றது” என்று அந்தக் கடிதத்தில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டது.

“ஒழுக்காற்று காரணங்களின் அடிப்படையிலான இடமாற்றம்” எனக் குறிப்பிட்டு வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் அனுப்பிவைக்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை இடைநிறுத்தக் கட்டளை வழங்குமாறும் ஒழுக்காற்று விசாரணையில் மனுதாரரைக் குற்றவாளியாக இனங்கண்டமையை சட்டரீதியற்ற வெற்றும் வறிதானதும் என எழுத்தாணை ஆக்குமாறும் (நீக்குமாறும்) இடமாற்றல் வழங்கப்பட்ட ஆசிரியை சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக அந்த எழுத்தாணை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்மனுதாரர்களை ஜனவரி 10ஆம் திகதியான இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், அதுவரை இடமாற்றல் கடிதத்தை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்திருந்தது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான ஆசிரியை தனது சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானார்.

எதிர்மனுதாரர்களான வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகினர். இரண்டாவது எதிர்மனுதாரரான வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரனால் மன்றுக்கு பதிலி அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதில் “ஆசிரியைக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதம் மீளப்பெறப்படுகிறது. அவருக்கு எதிராக எந்த ஒரு ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொண்டு முன்னெடுக்கப்படாது” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையை ஆராய்ந்த மன்று, மனுதாரின் ஆட்சேபனையை கேட்டது. மனுதாரருக்கு எதிரான அனைத்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் நீக்கப்படுவதால் ஏற்றுக்கொள்வதாக மனுதாரரின் சட்டத்தரணி மன்றுக்கு விண்ணப்பம் செய்தார். “மனுதாரான ஆசிரியைக்கு கடந்த நவம்பர் 11ஆம் திகதி வழங்கப்பட்ட இடமாற்றல் கடிதம் மன்றினால் தடை செய்யப்படுகிறது. அந்தக் கடிதம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என எழுத்துமூல கடிதத்தை மேல் நீதிமன்றப் பதிவாளரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முன்வைக்கவேண்டும்.

ஆசிரியைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் 2016ஆம் ஆண்டு 6ஆம் மாதம் மாணவிகள் இருவரைக் கொடுமைப்படுத்தினார் என்று ஆசிரியர் ஒரு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனை அந்தப் பாடசாலையில் கடமையாற்றும் சங்கீத ஆசிரியை ஒருவரே முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த விடயம் அதிபர், ஆசிரியர்களால் மூடிமறைக்கப்பட்டது. எனினும் பாடசாலை மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாணவிகள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன், இந்த விடயத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் அதிபர் மற்றும் ஆசிரியர் சிலர் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மாணவிகள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சங்கீத ஆசிரியை சாட்சியம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் சங்கீத ஆசிரியை மீது கல்வித் திணைக்களத்தால் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad