துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை என கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர். நூதனமான முறையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி கொள்ளையர்கள் இருக்கும் இடம் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழகத்தில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நாளுக்கு நாள் பல புதிய திருப்பங்களைச் சந்தித்தது. முதலில் கொள்ளையர்கள் மீது சந்தேகம் இருந்த நிலையில், பெரிய பாண்டியனின் உடலில் இருந்த குண்டு சக காவலர் முனிசேகருடையது என்பது தெரியவந்தது. ராஜஸ்தான் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சில கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
இந்நிலையில், கொளத்தூர் கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில், காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனைத் தான் கொல்லவில்லை என்றும், சம்பவ இடத்தில் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதும் நாங்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டோம் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும், அவனிடம் ராஜஸ்தான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.