புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஆக., 2018

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணிக் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திச் செயலணியின் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கான குழுவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்காதபோதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைவாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விசேட செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், கடந்த மாதம் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்திருந்ததுடன், இதில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டது. 48 பேர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த ஜூலை 30ஆம் திகதி செயலணியின் முதலாவது கூட்டம் நடைபெற்றிருந்தது. கூட்டத்தின் முடிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அழைக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால தனது உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார். கூட்டமைப்பை அழைக்காமை தொடர்பில் தனது உயர் அதிகாரிகளைக் கடிந்திருந்தார்.
எதிர்வரும் 27ஆம் திகதி பி.ப. 3 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் செயலணியின் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்புக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ள விடயங்களுடன் தொடர்புடைய மாவட்ட செயலர்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது