புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2018

ஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலையை தாமதிப்பது
அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் இன்றுவரை முடிவெடுக்கவில்லை.
இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காததை பாமக கண்டிக்கிறது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.
அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக்காலமான 14 ஆண்டுகளை ஏற்கெனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை.
மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டைக் காரணமாக 7 தமிழர்களின் விடுதலை கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புசட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
7 தமிழர்களின் நடத்தை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 45 நாட்களாகியும் அதன் மீது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவையும் எடுக்காதது நியாயமல்ல.
7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் இரு வகையான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். ஒன்று அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து ஆணை பிறப்பிக்கலாம் அல்லது அமைச்சரவை தீர்மானத்தை ஏற்க முடியாது என்று கூறி மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைக்கலாம்.
இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகபட்சமாக ஒருவாரம் போதுமானது. ஆனால் 45 நாட்களாகியும் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுப்பதை ஆளுநர் தாமதிப்பது பல்வேறு ஊகங்களையும் ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின்மீது ஆளுநர் முடிவெடுக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் இந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டே 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுப்பதை ஆளுநர் விருப்பம்போல் தாமதப்படுத்துவதை ஏற்கமுடியாது’ என தெரிவித்துள்ளார்.

ad

ad