15 டிச., 2018

முன்னணி ஆதவுடன் வலி மேற்கு பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது

மக்களது அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி பிரதேச மட்டத்தில் தேவைப் பகுப்பாய்வுகளை முன்னெடுக்கப்படவேண்டும். அவற்றின் அதனடிப்படையில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும்” என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் வலியுறுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலி. மேற்கு பிரதேச சபையின் பாதீடு நேற்று வெள்ளிக்கிழமை தவிசாளர் தர்மலிங்கன் நடனேந்திரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பாதீடானது ஒரு சில திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாதீடு மீதான விவாத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன்

இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

இச் சபையில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள பாதீடானது உறுப்பினர்கள் எவரது நலன் கருதியும் சிறப்பு நிதிகளை ஒதுக்காது மக்கள் நலன் சார்ந்து மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்கின்றோம். வேறு பல சபைகளில் உறுப்பினர் நலன் சார்ந்து நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றமையால் சபையில் பாதீட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. ஆனால் இங்கு அவ்வாறானதொரு நிலை ஏற்படவில்லை.

இந்தப் பாதீட்டில் உறுப்பினர்கள் தங்களது வட்டாரத்திலுள்ள வீதிகளைச் சீரமைக்க சம அளவில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் இவ் உள்ளூராட்சி சபையின் ஆதிக்கத்திற்கு உள்பட்ட பிரதேசத்தில் மக்களது தேவைகளை முன்னிறுத்தி எவ் வட்டாரத்திலும் எந்த பிரதிநிதியும் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தக்கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இத்தகைய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது பிரதேச மட்டத்தில் தேவை பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மக்களின் அடிப்படை தேவைகள் அதிகமுள்ள இடங்களில் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் திட்டமிடல்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதே நேரம் தற்போது நாடு முழுவதுமே கழிவகற்றல் முகாமைத்துவம் என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அது தொடர்பில் எமது பிரதேசத்திலும் முறையான அவதானிப்பும் திட்டமிடல்களும் அவசியமாகின்றது.

குறிப்பாக பல இடங்களில் குப்பைகளை இவ்விடத்தில் போட வேண்டாம் என பலகைகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதனை தவிரத்து அவ் விடங்களில் சுற்று சூழலுக்கு ஏற்ப குப்பைகளை வகைப்படுத்தி போடும் வகையில் குப்பை தொட்டிகளை அமைப்பது பொருத்தமானதாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.

மேலும் பிரதேசத்தின் உள் வீதிகளிலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வகையில் குப்பை வண்டிகள் கிரமான முறையில் சேவைக்கு ஈடுபடுத்தப்படவேண்டும். அதற்கு பொருத்தமான வகையில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர வடக்கில் பல உள்ளூராட்சி சபைகளில் சபையினை கொண்டு நடாத்துவதில் ஆளும் தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் காணப்படும் நிலையில் எமது இச் சபை இதுவரை அத்தகைய முரண்பாடு எதனையும் எதிர் நோக்கவில்லை. அந்தவகையில் எமது இச் சபையின் தொடர்ச்சியான செயற்பாடுகள் ஏனைய சபைகளுக்கு முன்னுதாரணம் மிக்கதாக அமைய வேண்டும். அதற்கு ஏற்றவகையில் தொடர்ச்சியாக நாம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

நான் பி்ரதிநித்துவப்படுத்துகின்ற எமது கட்சியின் கொள்கையே, சபைகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம் ஆதரவளிப்போம் என்பதாகும். அந்தவகையில் நாம் அதனை மீளவும் நினைவுபடுத்துகின்றோம்.

கூட்டமைப்புடனும், ஏனைய கட்சிகளுடனும் கொள்ளைகை ரீதியில் நாம் முரண்பட்டுக்கொண்டாலும் அவர்களால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களை நாம் ஒரு போதும் எதிர்க்கப் போவதில்லை. அந்தவகையில் மக்கள் நலனினையே முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாதீட்டினை எமது கட்சியானது ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவளிக்கின்றது – என்றார்.