சிலாவத்துறை காணி மீட்புத் தொடர்பில் வடமாகாண ஆளுநருடன், களத்திலிருந்தே அலைபேசியில் உரையாடிய, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, காணி மீட்பு விவகாரம் தொடர்பில், நேற்று (06) இடம்பெற்ற முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டத்திலும், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கு, ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
சிலாவத்துறை கடற்படை முன்பாக கடந்த 15 நாள்களாக மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடும் முசலி பிரதேச மக்களை முன்னதாக, சந்தித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விடயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
அதன் பின் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில், மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைத்தனர்.“பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த, எமக்கு சொந்தமான காணிகளை நாங்கள் பறிகொடுத்து பரிதவிக்கின்றோம். 10 வருடங்களாக நாங்கள் இந்தக் காணி விடுவிப்புக்காக போராடி வருகின்றபோதும் இதுவரை எமக்கு நீதியோ, நியாயமோ கிடைக்கவில்லை. எனவேதான் தற்போது கடற்படை முகாமுக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்” என்றனர்.
“மேற்படி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளீர்கள், அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்துள்ளீர்கள். அதன் தொடர்ச்சியாக, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து காணியை மீட்டுத்தரவேண்டும்” எனக் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.
இக்கோரிக்கைகளை கருத்திலெடுத்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இது தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள், காணித்திணைக்கள அதிகாரிகள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றுக்கொண்டார்.
அதனடிப்படையில், கடற்படையினருக்கு இந்தப் பிரதேசத்தில் எங்கே காணிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன? அல்லது வேறு ஏதாவது பொருத்தமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா? என காணி அதிகாரியிடம் அமைச்சர் கேட்டார். அதற்குப் பதிலளிகத்த அதிகாரிகள், மேத்தன்வெளியில் காணி ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
அதன்பின்னரே, சிலாவத்துறை மக்களின் காணிப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஜானாதிபதியின் கவனத்துக்கு இந்த பிரச்சினையை நேரடியாக எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதென மீளாய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.