புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 மே, 2019

நாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களை கடனுக்கு வாங்கியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அவற்றை பணம் செலுத்தி வாங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நேற்றைய தினம் பத்தாவது ஆண்டு யுத்த வெற்றிக்கொண்டாட்டத்தை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் விசேட உரையொன்றை ஆற்றுகையிலேயே முன்னாள் அரச தலைவரான மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுவதற்கு கடனுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்தது. எனினும் புலிகள் அமைப்பு எமது இராணுவத்திற்கு எதிராகவும், இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் யுத்தம் செய்வதற்கான ஆயுதங்களை சர்வதேச சந்தையில் பணம் செலுத்தியே கொள்வனவு செய்தது. இது இலகுவாக பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியல்ல. 25360 படையினர் இந்த யுத்தத்தின்போது உயிரிழந்தார்கள். பொலிஸ் அதிகாரிகள், சாதாரண மக்கள், அரசியல்வாதிகள் என பலர் உயிரிழந்தனர். பல வெளிநாடுகள் இந்த யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த வேண்டுகோள்களை நிராகரித்தே நாம் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டோம். அமெரிக்காவின் உதவியுடனேயே, ஐரோப்பிய ஒன்றியத்தினால் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. 2007 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய, இந்தோனேசிய கடற்பரப்பிலும் அமெரிக்காவின் உதவியுடனேயே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டன. 200 9ஆம் ஆண்டு அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவானார். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் சர்வதேசத்தின் அழுத்தத்தை புறந்தள்ளி யுத்தத்தை வெற்றிகொண்டோம்.” என்றார்.

யுத்தம் முடிந்த பின்னர் நாட்டில் சமாதானம் நிலைக்க சில தேசிய அமைப்புகள் இடமளிக்கவில்லை என்று கூறிய மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த கால விடயங்களை பேசியதோடு அவர்களின் ஆலோசனைகளை கேட்டு யுத்தத்தில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தி யுத்தம் நிறைவடைந்த தினத்தில் இருந்து பல கதைகளை பேசித் திரிந்தனர் என்று சாடியுள்ளார்.

“யுத்தம் நிறைவடைந்தது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. சீனா எமது நாட்டிற்கு வழங்கிய உதவிகள் அவர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. 2015ஆம் ஆண்டு வெளிநாட்டு சக்திகளின் தேவைக்காகவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவும் உருவான அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த நாடு மீண்டும் தலைத்தூக்கக் கூடாது என்பதே அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரல். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த இராணுவத்தை விரட்டி விரட்டி அடித்தமையே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து செய்த நடவடிக்கை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30 இன் கீழ் ஒன்று பிரேரணையை நிறைவேற்றி வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கி குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு சாட்சிகள் இல்லாதபோதிலும் இராணுவத்தின் அனைத்து உயர் அதிகாரிகளையும் பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 30 இன் கீழ் ஒன்று பிரேரணையில் உள்ள விடயங்களை செயற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் பல விடயங்களை நிறைவேற்றியுள்ளது. காணாமற்போனோர் சட்டத்தின் ஊடாக இராணுவம் மற்றும் பொலிஸாரின் எல்லைக்குள் நுழைந்து எந்த சந்தர்ப்பத்திலும் ஆவணங்களை பரிசோதனை செய்யவோ ஆராய்ந்து பார்க்கவோ அதிகாரமளிக்கும் அரச இரகசியங்களை பாதுகாக்கும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு விசாரணை செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ள விசாரணை மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

காணாமற்போதலை தடுத்தல் தொடர்பிலான சர்வதேச சாசனத்திற்கு அமைய காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒருவரை வேறு ஒரு நாடு விசாரணைக்கு உட்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது சந்தேக நபரை தண்டிக்கும் ஒரு செயற்பாடாகும். இதன் மூலம் இராணுவத்தை தண்டிப்பதே நோக்கம். சாட்சிகள் இல்லாவிடின் எவரிடமாவது வாக்குமூலம் பெற்று தண்டிப்பதே நோக்கம். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அனைத்து உயர் நிலை இராணுவ அதிகாரிகளையும் குறைந்தது பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலமாவது பதிவு செய்துள்ளது இந்த அரசாங்கம். இராணுவ வீரர்களை கொலையாளிகள், கப்பம்பெறுபவர்கள் என தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவர்களை அடையாளப்படுத்தியுள்ளது இந்த அரசாங்கம்” என்ற குற்றச்சாட்டை மஹிந்த காரசாரமாக முன்வைத்தார்.


“புதிய யாப்பு ஒன்றின் ஊடாக மத்திய அரசாங்கத்தை இல்லாதொழித்து ஒன்பது மாகாண அரசாங்கங்களை தோற்றுவித்து நாட்டை பிரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டிருக்குமானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் என்ன நடந்திருக்குமென எம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தீவிரவாதிகளை தண்டிப்பதற்கான அன்றி அவர்களை காப்பாற்றுவதாகவே அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் புலிகள் அமைப்பினால் கூட முடியாத ஒரு தாக்குதலை ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திக் காட்டியிருக்கின்றார்கள். எனினும் அதன் பின்னர் இந்த அரசாங்கத்தினால் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இராணுவமே இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது”. என்றார் அவர்.