19 நவ., 2019

ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி மக்கள் ஆணையின் பிரகாரம் இறுதித் தீர்மானத்தை எடுக்க இருப்பதோடு நாளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐ.தே.க தெரிவித்தது.

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானதுடன், நேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பேனென அவர் நாட்டு மக்களுக்கு கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஐ.தே.முவின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐ.தே.க அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடியும்வரை அரசாங்கத்தை கொண்டுசெல்ல வேண்டுமென ஏகமானதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

என்றாலும், ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாக கொண்டு பாராளுமன்றத்தை விரைவில் கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதுவரை அரசாங்கம் எவ்வாறு செயற்படுவது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஐ.தே.க அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் 2020 ஆகஸ்ட் மாத்தில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது