புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 ஜூன், 2020

இணக்க அரசியலை ஒருபோதும் ஏற்கேன்! ஊடக செய்திக்கு தவராசா மறுப்பு

Jaffna Editor

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று வெளியான விசமத்தனமான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட செயற்பாடே ஆகும்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா.

ஊடகங்களில் போலியாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் அவரின் மறுப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்றும் இன்றைய அரசு எதிர்வருத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு – மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு –  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தார் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

அது தொடர்பில் – அந்தச் செய்தி தொடர்பில் – அவர் தனது மறுப்பைத் தெரிவித்திருக்கின்றார். எந்தத் தனியார் ஊடகத்துக்கும் நான் இவ்வாறாகத் தெரிவித்திருக்கவில்லை. இது வேண்டுமென்று என்மீது சேறுபூசுகின்ற ஒரு நடவடிக்கையாகும்.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் சில அரசியல் கருத்து மோதல்கள் எனக்கும் கட்சியிலுள்ள சிலருக்கும் ஏற்பட்டுள்ளன. என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் செயற்பாடு இதுவென்பதை நான் நன்கு அறிவேன்.

இணக்க அரசியல் நடத்தவேண்டும் என்று எனது 40 வருடகால சட்டவாழ்க்கையிலும் 10 வருடகால அரசியல் வாழ்க்கையிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் கூறியவன் அல்லன். இணக்க அரசியலை நான் முற்றுமுழுதாக வெறுப்பவன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று நான் குறிப்பிட்டவன் அல்லன். பேச்சு நடத்துவது, எமது தேவைகளைப் பெற்றுக்கொள்வது, அரசியல் தீர்வுக்காகப் பேச்சு நடத்துவது இவை சாதாரணமாக நடைபெறுகின்ற விடயங்கள். ஆனால் இணக்க அரசியலை நான் எப்போதும் சொன்னமை கிடையாது. – என்று தெரிவித்துள்ளார்.

Share the Post