
இலங்கை அணி இறுதியாக 2014ம் ஆண்டு ஆசியக்கிண்ணத்தை வென்றிருந்ததுடன், சுமார் 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டது.
>> பல எதிர்பார்ப்புக்களுடன் இறுதிப் போட்டியில் இலங்கை அணி
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது.
இலங்கை அணியை பொருத்தவரை கடந்த 4 போட்டிகளிலும் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றிகளை பதிவுசெய்திருந்த நிலையில், இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை எதிர்பார்த்தளவிலான ஆரம்பம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீச தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இலங்கை அணி பறிகொடுத்தது.
நசீம் ஷாவின் முதல் ஓவரில் தன்னுடைய முதல் பந்தில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்க, பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் பவர்-பிளே ஓவர்களில் ஆட்டமிழந்தனர். எனவே, இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் தனன்ஜய டி சில்வா மற்றும் தசுன் ஷானக ஆகியோர் ஆட்டமிழக்க இலங்கை அணி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் பானுக ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை கட்டியெழுப்ப தொடங்கினர். இதில் வனிந்து ஹஸரங்க வேகமாக துடுப்பெடுத்தாடி 21 பந்துளில் 36 ஓட்டங்களை விளாச, மறுமுனையில் பானுக ராஜபக்ஷ அற்புதமான அரைச்சதம் ஒன்றை பதிவுசெய்தார்.
பானுக ராஜபக்ஷ இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 71 ஓட்டங்களை விளாச, தனன்ஜய டி சில்வா 28 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, சார்பில் பாபர் அஷாம் மற்றும் பக்ஹார் ஷமான் ஆகியோர் ஆரம்பத்தில் ஆட்டமிழந்தபோதும், மொஹமட் ரிஸ்வான் மற்றும் இப்திகார் அஹ்மட் ஆகியோர் இணைந்து இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து இலங்கை அணிக்கு சவால் கொடுத்தனர்.
எனினும், மத்திய ஓவர்களில் ஓட்ட எண்ணிக்கையை இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த தொடங்கினர். மொஹமட் ரிஸ்வான் அரைச்சதம் கடந்த போதிலும், தொடர்ச்சியான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 20 ஓவர்கள் நிறைவில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் ரிஸ்வான் 55 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, இப்திகார் அஹ்மட் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை தன்னுடைய இரண்டாவது போட்டியில் விளையாடிய பிரமோத் மதுசான் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆசியக்கிண்ணத்தை பொருத்தவரை தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த போதும், தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து கிண்ணத்தை தமதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.