புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2023

இறுதிப்போட்டியில் இந்தியா: கோலி, ரோகித், ஷமி சாதனை - வரலாறாகிப் போன அரையிறுதி ஆட்டம்

www.pungudutivuswiss.com
இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலியின் சாதனை சதம், ஸ்ரேயாஸ் அய்யர், ரோகித் சர்மா, கில் ஆகியோரின் அற்புதமான பேட்டிங், முகமது ஷமியின் மிரட்டல் பவுலிங் ஆகியவற்றால் இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அடித்தளமாக இருந்தது ரோஹித் சர்மாவின்(47) அதிரடியான ஆட்டம்தான். அவர் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தில் கோலி, கில் இருவரும் பயணித்து அணியை வழிநடத்தினர்.

இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சன் - மிட்செல் ஜோடி சிறப்பாக ஆடி இந்தியாவை ஒருகட்டத்தல் மிரட்டிவிட்டனர். பின்னர் முகமது ஷமியின் அற்புதமான பவுலிங்கால் இந்திய அணி மீண்டும் ஒருமுறை மீண்டு வந்தது.

கோலி, ரோகித், ஷமி ஆகியோர் படைத்த சாதனைகளால் இந்தப் போட்டி இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆட்டமாக மட்டுமின்றி, வரலாற்றில் இடம்பிடித்த ஆட்டமாகவும் மாறிப் போனது.

இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங்

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா - சுப்மான் கில் ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது.

டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹத் 2 பவுண்டரிகள் என 10 ரன்கள் சேர்த்தார்.

டிம் சவுதி வீசிய 2வது ஓவரில் சுப்மான் கில் 2 பவுண்டரிள் என 8 ரன்களை விளாசினார். போல்ட் வீசிய 3-வது ஓவரில் ரோஹித் சர்மா எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கிவிட்டு சிக்ஸருக்கு அனுப்ப ரசிகர்கள் கரோஷத்தால் அரங்கை அதிரவைத்தனர்.

இந்த சிக்ஸர் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் 50 சிக்ஸர்கள் விளாசி மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர் கெயிலின்(49)சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். சவுதி வீசிய 4வது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர், பவுண்டரி உள்ளிட்ட 13 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேகப்பந்துவீச்சை வெளுத்ததால் சான்ட்னர் பந்துவீச அழைக்கப்பட்டார். சான்ட்னர் வீசிய 6-வது ஓவரில் ரோஹித் சர்மா டீப் ஸ்குயர் லெக்திசையில் சிக்ஸரும், ஃபைன் லெக்திசையில் பவுண்டரியும் விளாசி மிரட்டினார்.

கெயில் சாதனையை தகர்த்த ரோகித்

டிரன்ட் போல்ட் வீசிய 5வது ஓவரில் சிக்ஸர் விளாசியதன் மூலம் ஒட்டுமொத்த உலகக்கோப்பைத் தொடர்களில் 50 சிக்ஸர்களை எட்டி அவர் எட்டினார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக சிக்சர்களை விளாசியவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். கிறிஸ் கெயில் 49 சிக்சர்களுடன் இதுவரை முதலிடத்தில் இருந்தார். உலகக்கோப்பைத் தொடரில் 27 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை ரோகித் சர்மா எட்டியுள்ளார். 3வது இடத்தில் உள்ள மேக்ஸ்வெல்(43), டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர்(37) சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித் அவுட், கோலி - கில் அபாரம்

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா அரைசதத்தை நெருங்கிய நிலையில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். டிம் சவுத்தீ பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய அவர் 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். அதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடக்கம்.

ரோகித் அவுட்டைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையே உள்ளே வந்தார். ஒருமுனையில் கோலி நிதானமாக ஆட, மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரரும், ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான சுப்மான் கில் அதிரடிக்கு மாறினார்.

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் அவர் சிக்சர்களை விரட்டினார். அபாரமாக ஆடிய அவர் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். ரோகித் களத்தில் இருந்தவரை நிதானம் காட்டிய கில், அவர் அவுட்டான பின்னர் அதிரடிக்கு மாறினார். அரைசதத்தில் கடைசி 39 ரன்களை 27 பந்துகளில் அவர் எடுத்தார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில் தசைப்பிடிப்பால் வெளியேற்றம்

அரைசதம் கடந்த பின்னரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சுப்மான் கில் பந்துகளை அடிக்கடி பவுண்டரி எல்லைக்கு விரட்டியபடி இருந்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் 6-க்கும் அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது.

கில் அதிரடி காட்டியதால் மறுமுனையில், நட்சத்திர வீரர் விராட் கோலி ரன் ரேட் பற்றிய நெருக்கடி ஏதும் இன்றி களத்தில் காலூன்ற போதிய அவகாசம் எடுத்துக் கொள்ள முடிந்தது. இந்த ஜோடி 100 ரன்களை கடந்த நிலையில், எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பால் சுப்மான் கில் களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் 65 பந்துகளில் 3 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களை சேர்த்திருந்தார். அப்போது இந்திய அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில் வெளியேறிய பிறகு ஸ்ரேயாஸ் களமிறங்கி, கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 28-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

ஒரு உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள் சேர்த்த இந்தியபேட்டர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் 673 ரன்கள் சாதனையை விராட் கோலி 674 ரன்கள் சேர்த்து இன்று முறியடித்தார்.

போல்ட் வீசிய 36-வது ஓவரில் விராட் கோலி ஒரு பவுண்டரி, ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 17 ரன்கள் விளாசினர். ஆனால், அடுத்த 3 ஓவர்களில் இந்திய பேட்டர்கள் ரன் வேகத்தை சான்ட்னர் கட்டுப்படுத்தி துல்லியமாகப் பந்துவீசினார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணிஒரு விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

சச்சின் சாதனையை முறியடித்து 50-வது சதம் அடித்த கோலி

அபாரமாக ஆடிய விராட் கோலி 106 பந்துகளில் 50-வது சதத்தை பதிவு செய்து சச்சினின் சாதனையை அவரின் முன்பே முறியடித்தார். அரங்கில் இருந்த ரசிகர்கள், கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் விராட் கோலிக்கு பறக்கும் முத்தங்களை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த வாரம் கோலி தனது பிறந்தநாளின்போது 49-வது சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49-வது சதம் அடித்திருந்தநிலையில் அதை விராட் கோலி முறியடித்து 50-வது சதத்தை எட்டினார். சதம் அடித்தவுடன் ஆர்ப்பரித்த கோலி, தனது ஹெல்மெட்டை கழற்றி அரங்கில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு தலைவணங்கி வணக்கம் செலுத்தினார்.

ஒருநாள் போட்டிகளின் அரசனாக வலம்வரும் கோலி 50-வது சதத்தை அடித்துள்ளார். சச்சின 49 சதங்கள், ரோஹித் சர்மா 31, பாண்டிங் 30சதங்கள், ஜெயசூர்யா 28 சதங்கள் அடித்துள்ளனர்.

கோலிக்கு எழுந்து நின்று மரியாதை

42-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்களைக் கடந்தது. சதம் அடித்தபின் அதிரடியாக ஆடிய விராட் கோலி விக்கெட்டை இழந்தார். சவுதி வீசிய 44-வது ஓவரில் 3 பந்தில் கோலி அடித்த ஷாட்டை பிலிப்ஸ் கேட்சைப் பிடிக்க தவறவிட்டார். ஆனால், கடைசிப்பந்தில் கோலி டீப் ஸ்குயர் லெக் திசையில்அடித்த ஷாட்டை கான்வே சரியாகப் பிடித்தார். கோலி 113 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்து(9பவுண்டரி,2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்து சென்றபோது அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.

சச்சின் டெண்டுல்கர், டேவிட் பெக்காம், ஆகாஷ் அம்பானி, அனுஷ்கா ஷர்மா, ரிச்சார்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் முன் 50-வது சதம் அடித்த கோலி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திச் சென்றார். அடுத்து ராகுல் களமிறங்கினார்.

ஸ்ரேயாஸ் அபாரமான சதம்

விராட் கோலி இருக்கும்போதே ஸ்ரேயாஸ்அதிரடியாக பேட் செய்து வந்தார். அவர் ஆட்டமிழந்தபின் வெளுக்கத் தொடங்கினார். ரவீந்திரா வீசிய 45-வது ஓவரில் ஸ்ரேயாஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 14 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் 67 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 7 சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும்.நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஸ்ரேயாஸ் தொடர்ந்து 2வது சதத்தை அரையிறுதியிலும் பதிவு செய்துள்ளார்.

போல்ட் வீசிய 49-வது ஓவரில் ராகுல் சிக்ஸர், பவுண்டரியும், ஸ்ரேயாஸ் ஒரு பவுண்டரியும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர்.ஆனால், ஸ்ரேயாஸ் 105 ரன்னில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் கணக்கில் 8சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தடுமாற்றத்துடன் நியூசிலாந்து

398 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. கான்வே, ரவீந்திரா ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே 2 அற்புதமான பவுண்டரிகளை அடித்து கான்வே அதிரடியாகத் தொடங்கினார். அதன்பின் ரன்வேகம் குறைந்தது.

6வது ஓவரை வீச ஷமி அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே ராகுலிடம் கேட்ச் கொடுத்து கான்வே 13ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த வில்லியம்ஸன், ரவீந்திராவுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 2வது ஓவரில் அடுத்தவிக்கெட் சரிந்தது.

ஷமி வீசிய 8-வது ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ரவீந்திரா 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 40 ரன்களுக்கு நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்துகளமிறங்கிய டேரல் மிட்ஷெல், கேப்டன் வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் நிதானமாக இருவரும் பேட் செய்தனர். 10ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது.

சிராஜ் வீசிய ஓவர்களில் மிட்ஷெல், வில்லியம்ஸன் பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தனர். ஷமி பந்துவீசவந்தபின் அவரின் 17-வது ஓவரில் மிட்ஷெல் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். நியூசிலாந்து அணி முதல் 50 ரன்களை எட்டுவதற்கு 62 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் அடுத்த 50 ரன்களை அடுத்த 6 ஓவர்களில் எட்டியது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரு வாய்ப்புகள் தப்பின

குல்தீப் வீசிய 18-வது ஓவரில் வில்லியம்ஸன் கால் காப்பில் வாங்கினார். ஆனால், களநடுவர் அவுட் வழங்கவில்லை. ஆனால்,டிஆர் எஸ் முறையிட்டும் அம்பயர்ஸ் காலாக அமைந்ததால், இந்தியாவின் அவுட் முறையீடு நிராகரிக்கப்பட்டது.

அதே ஓவரில் வில்லியம்ஸன் ரன் எடுக்க அவசரப்பட்டு ஓடினார். ஆனால், ரன்அவுட் செய்யும் முயற்சியில் ஷமி ஈடுபட்டார். ஆனால், பந்து டைரெக்ட் ஹிட்டில் ஸ்டெம்பில் விழுவதற்கு முன்பே, ராகுல் ஸ்டெம்பை தட்டிவிட்டதால் அவுட் வழங்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது.

10 ஓவர்கள் முடிவில் 46 ரன்கள் சேர்த்திருந்த நியூசிலாந்து அடுத்த 10 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்து வலுவாக நகர்ந்தது. வில்லியம்ஸன், மிட்ஷெல் இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நகர்த்தினர். ஓவருக்கு 7 ரன்கள் சேர்த்து சேஸிங்கில் நியூசிலாந்து பேட்டர்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய டாரல் மிட்ஷெல் 49 பந்துகளில் அரைசதம் அடித்தார், அதைத் தொடர்ந்து 51 பந்துகளில் வி்ல்லியம்சனும் அரைசதம் அடித்தார். இருவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளித்தனர். 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்த முயன்றனர்.

ஷமி வீசிய 33வது ஓவரில் ஒரு ரன் அடித்து, மிட்ஷெல் 85 பந்துகளில் சதம் அடித்தார். அடுத்த பந்தில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்ஸன் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். இருவரும் 3 வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பையில் ஷமி 50-வது விக்கெட்

வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி, ஷமி உலகக் கோப்பையில் 50-வது விக்கெட்டை எட்டி சாதனை படைத்தார்.

அடுத்து களமிறங்கிய டாம் லாதம் வந்தவேகத்தில் ஷமி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு வந்த பிலிப்ஸ், மிட்ஷெலுடன் சேர்ந்தார். இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்ததைப் பயன்படுத்தி, ஜடேஜா, ஷமி இருவரும் லைன் லென்த்தில் பந்துவீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தி நெருக்கடி அளித்தனர்.

ஆனால் மிட்ஷெலையும், பிலிப்ஸையும் சில ஓவர்கள்தான் கட்டுப்படுத்த முடிந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைத்ததால், 35 ஓவர்களுக்கு மேல் மீண்டும் அதிரடியில் மிட்ஷெல் இறங்கினார். சிராஜ் வீசிய 39-வது ஓவரில் பிலிப்ஸ், மிட்ஷெல் இருவரும் தலா ஒரு பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தனர். ஷமி வீசிய 40-வது ஓவரில் பிலிப்ஸ் ஒரு சிக்ஸர் விளாசி 9 ரன்கள் சேர்த்தனர்.

40ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவாலாக இருந்தது. 60 பந்துகளில் நியூசிலாந்து வெற்றிக்கு 132 ரன்கள் தேவைப்பட்டது.

நெருக்கடியில் அவுட்டான நியூசி. வீரர்கள்

வெற்றிக்கான ரன் நெருக்கடி அதிகரித்ததால் நியூசிலாந்து பேட்டர்கள் அடித்து விளையாடத் தொடங்கி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். பும்ரா வீசிய 42வது ஓவரின் 5-வது பந்தை ஸ்லோவராக வீசினார். இதைக் கவனிக்காமல் பிலிப்ஸ் அடிக்கவே பவுண்டரி அருகே ஜடேஜா கேட்ச் பிடிக்கவே பிலிப்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சாப்மேன் களமிறங்கி, மிட்ஷெலுடன் சேர்ந்தார். குல்தீப் வீசிய 43வது ஓவரில் சாப்மேன் ஸ்குயர் லெத் திசையில் தூக்கி அடிக்க, ஜடேஜாவிடம் கேட்சானது. சாப்மேன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

36 பந்துகளில் நியூசிலாந்து வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது. சான்ட்னர் களமிறங்கி, மிட்ஷெலுடன் சேர்ந்தார்.

நியூசிலாந்து வீரர்கள் கடுமையாக போராடினாலும் வெற்றி பெறத் தேவையான ரன்கள் மிகவும் அதிகமாக இருந்ததால் அந்த நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 50-வது ஓவரில் அந்த அணி ஆல் அவுட் ஆகிப் போனது. இதனால் 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுயநலம் கருதாத ரோகித் சர்மா

ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பைத் தொடரில் 550 ரன்கள் குவித்துள்ளார். இதில் 226 ரன்கள் கடந்த 10 போட்டிகளில் முதல் 20 பந்துகளில் சேர்க்கப்பட்டவை. அரைசதம் அடிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் ஆடாத ரோஹித் சர்மா, அணியின் ஸ்கோர் உயர்வுக்காக மட்டுமே கவனம் செலுத்தி பேட் செய்துள்ளார்.

இதனால்தான், இந்த உலக் கோப்பைத் தொடரில் 4 முறை 40ரன்களுக்கு மேல் ரோகித் சர்மா ஆட்டமிழந்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 40க்கும் அதிகமான ரன்களை பவர்ப்ளே ஓவரில் 5 முறை விளாசியுள்ளார். இதில் ரோகித்தின் ஸ்ட்ரைக் ரேட் 120க்கும் அதிகமாகும். 1999ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரன்டம் மெக்கலம் மட்டுமே முதல் 10 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 2015ம் ஆண்டிலிருந்து மெக்கலம் ஃபார்முலாவை பல நாட்டு பேட்டர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

முகமது ஷமி புதிய சாதனை

வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி, ஷமி உலகக் கோப்பையில் 50-வது விக்கெட்டை எட்டி சாதனை படைத்தார். உலகக்கோப்பையில் தனது 17-வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சச்சின் கண் முன்னே அவரது சாதனைகளை தகர்த்த கோலி

ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் விராட் கோலி பவுண்டரி அடித்தபோது புதிய மைல்கல்லை எட்டினார். 2023 உலகக் கோப்பைத் தொடரில் 600 ரன்களை எட்டிய 3வது இந்திய பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

ரவீந்திரா வீசிய 27-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில் கோலி ஒரு ரன் எடுத்து 72-வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். உலகக் கோப்பை நாக்அவுட் அவுட் சுற்றில் கோலி அடித்த முதல் அரைசதமாகும்.

விராட் கோலி இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன், 2 ரன்கள், 3 ரன்கள் என ஓடியே 370 ரன்கள் சேர்த்துள்ளார். இவருக்கு அடுத்தாற்போல் ரச்சின் ரவீந்திரா 255 ரன்கள் ஓடியே சேர்த்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் கோலி 10 போட்டிகளில் 8-வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

ஒரு உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள் சேர்த்த இந்தியபேட்டர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் 673 ரன்கள் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

அபாரமாக ஆடிய விராட் கோலி 106 பந்துகளில் 50-வது சதத்தை பதிவு செய்து சச்சினின் சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49-வது சதம் அடித்திருந்த நிலையில் அதை விராட் கோலி முறியடித்து 50-வது சதத்தை எட்டினார். சதம் அடித்தவுடன் ஆர்ப்பரித்த கோலி, தனது ஹெல்மெட்டை கழற்றி அரங்கில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு தலைவணங்கி வணக்கம் செலுத்தினார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அனுஷ்கா, சச்சின் முன்னிலையில்..."

இந்திய அணியின் பேட்டிங் முடிந்ததும் பேசிய விராட் கோலி, "இது கனவு போல் இருக்கிறது. அனுஷ்கா அங்கேயே அமர்ந்திருந்தார், சச்சின் இங்கே இருந்தார். இந்த தருணத்தை விவரித்து சொல்வது கடினம். என் வாழ்க்கைத் துணை, நான் மிகவும் நேசிக்கும் நபர் அங்கே அமர்ந்திருக்கிறார், என் ஹீரோ அங்கே அமர்ந்திருக்கிறார், அவர்களின் முன் மற்றும் வான்கடேயில் உள்ள இந்த மக்கள் முன்னால் 50வது ஒருநாள் சதம் அடிக்க முடிந்தது. அத்தகைய வரலாற்று அரங்கம், எனவே அது அற்புதமானது.

முக்கியமான போட்டியில் 330-340 ரன்களுக்கு மேல் எடுக்க விரும்புவார்கள். ஆனால், 400க்கு அருகில் செல்வது அற்புதமானது. ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக பேட்டிங் செய்தார். தொடக்கத்தில் சுப்மன் மற்றும் ரோஹித், கடைசியாக கேஎல் ... அனைவரும் தங்கள் பாத்திரங்களை சரியாகச் செய்தார்கள் என்று நினைக்கிறேன், மேலும் அணிக்காக அழகாக வேலை செய்தார்கள்." என்று கூறினார்.

கோலியை வாழ்த்தி சச்சின் ட்வீட்

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம், ஒரே உலகக்கோப்பையில் அதிக ரன்கள் ஆகிய தனது சாதனைகளை முறியடித்த கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, அணியின் மற்ற வீரர்கள் என் கால்களைத் தொடுமாறு உன்னைக் கூறி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இல்லை. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில், அதுவும் எனது சொந்த மைதானத்தில் அதனை செய்தது இன்னும் சிறப்பானது" என்று கூறியுள்ளார்.

இந்தியா vs நியூசிலாந்து

ad

ad