புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2024

ஸிம்பாப்வேயுடனான கடைசிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்ற இலங்கை தொடரையும் கைப்பற்றியது

www.pungudutivuswiss.com
ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 9.1 ஓவர்கள் மீதமிருக்க 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை தொடரை 2 - 1 ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.

இந்தியாவுக்கு எதிராக 2021 ஜூலை மாதம் ஈட்டிய தொடர் வெற்றிக்குப் பின்னர் 30 மாதங்கள் கழித்து இருதரப்பு சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை முதல் தடடைவயாக இலங்கை கைப்பற்றியுள்ளது.

வனிந்து ஹசரங்கவின் 4 விக்கெட் குவியல், ஏஞ்சலோ மெத்யூஸ், மஹீஷ் தீக்ஷன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் என்பன இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இப் போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 83 ஓட்டங்கள் என்ற மிகவும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் சுமாரான வேகத்தில் துடுப்பெடுத்தாடி 53 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 27 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 33 ஓட்டங்களைப் பெற்று சோன் வில்லியம்ஸின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய பெத்தும் நிஸ்ஸன்க இந்தப் போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 5 பவுண்டறிகள் ஒரு சிக்ஸ் உட்பட 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் வெற்றி இலக்கை சிக்ஸுடன் நிறைவு செய்தார்.

தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டதுடன் சரித் அசலன்க உபாதை காரணமாக விளையாடவில்லை. அவர்கள் இருவருக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

தனஞ்சய டி சில்வா 9 மாதங்களின் பின்னரும் கமிந்து மெண்டிஸ் 12 மாதங்களின் பின்னரும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினர்.

ஸிம்பாப்வே அணியில் ரெயான் பேர்லுக்குப் பதிலாக டோனி மொன்யொங்கா விளையாடினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.

ஏஞ்சலோ மெத்யூஸ் முதலாவது ஓவரிலேயே க்ரெய்க் ஏர்வின்ஸை (0) ஆட்டம் இழக்கச் செய்தார். (9-1)

ஆனால், டில்ஷான் மதுஷன்க வீசிய அடுத்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது.

எனினும் மெத்யூஸ் தனது 2ஆவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ப்றயன் பெனெட்டின் விக்கெட்டைக் கைப்பற்றி இலங்கைக்கு ஆறுதலைக் கொடுத்தார்.(35 - 2 விக்)

பெனெட் 12 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு நான்குடன் 29 ஓட்டங்களைக் குவித்தார்.

பெனெட் ஆட்டம் இழந்த பின்னர் ஸிம்பாப்வேயின் ஓட்ட வேகம் சுமாராக இருந்தது.

மொத்த எண்ணிக்கை 51 ஓட்டங்களாக இருந்தபோது மற்றைய ஆரம்ப வீரர் டினாஷே கமுன்ஹுகம்வே 12 ஓட்டங்களுடன் மஹீஷ் தீக்ஷ்னவின் பந்துவீச்சில் களம் விட்டு வெளியேறினார்.

9ஆவது ஓவரில் ஸிம்பாப்வே 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்தது.

அப்போது சிரேஷ்ட வீரர்களான அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா, சோன் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்ததால் ஸிம்பாப்வே கனிசமான ஓட்டங்களைப் பெறும் என கருதப்பட்டது.

ஆனால் கடைசி 7 விக்கெட்கள் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

ராஸாவின் விக்கெட்டை மதுஷன்கவும் சோன் வில்லியம்ஸின் விக்கெட்டை தனஞ்சய டி சில்வாவும் முன்யொங்கா, 2ஆவது போட்டி நாயகன் லூக் ஜொங்வே, வெலிங்டன் மஸகட்ஸா, ரிச்சர்ட் ங்கராவா ஆகியோரின் விக்கெட்களை அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவும், கடைசியாக க்ளைவ் மதண்டேயின் விக்கெட்டை மஹீஷ் தீக்ஷனவும் கைப்பற்றினர்.

அவர்களில் சோன் வில்லியம்ஸ் (15), சிக்ந்தர் ராஸா (10) ஆகிய இருவரைத் தவிர மற்றையவர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வனிந்து ஹசரங்க ஆட்டநாயகனாகவும் 3 வருடங்களின் பின்னர் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் மீள் பிரவேசம் செய்த ஏஞ்சலோ மெத்யூஸ் தொடர்நாயகனாகவும் தெரிவாகினர்

ad

ad