நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகிறது. தமிழ் மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட கால நீண்ட எமது போராட்டம் இன்னும் வெற்றிபெறவில்லை. தமிழ் தலைமைகள் எமது உரிமையை நிலைநாட்டவும், சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் எடுத்த முயற்சிகள் அத்தனையும் இன்றுவரை சிங்களத்தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டு உதாசீனப்பட்டுள்ளன. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமை. பேச்சுவார்த்தை என்ற ரீதியில் காலத்தை கடத்தி தட்டிக்கழிக்கப்பட்டு தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் வரை ஏமாற்றியுள்ளார்கள். நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். வடக்கு. கிழக்கு தமிழர்களுடைய தாயகம் நாம் தனித்துவமானவர்கள் எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு எமது நிலம், மொழி, கலை, கலாசாரம். பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்கு தேவை என்பதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்த தேர்தலை எதிர்கொண்டு அதற்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டும். இதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நாம் இன்னும் எமது உரிமைப்போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்த முடியும். இந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்களின் விடிவுக்காக ஜனநாயக முறையில் புதிய அணுகுமுறையாக இதை அணுகி எமது உரிமைகளை வென்றெடுக்க புத்திசாதுரியமாக நடந்து இதனை அணுகுவதே சிறந்த தீர்மானமாக அமையும். இந்த முயற்சிக்கு வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்தேசியம் சார்ந்த அனைத்துக்கட்சிகளும், வடக்கு, கிழக்கில் செயற்படும் அத்தனை பொது அமைப்புக்களும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் அத்தனை தமிழ் பேசும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு தங்கள் பேராதரவை வழங்கி வாக்குகளை செலுத்த வேண்டும். அத்துடன் தென்னிலங்கை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும், தென்னிலங்கை கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகளும், தென்னிலங்கை தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பு வைத்துள்ளோர், மாற்றுக்கருத்துள்ளோர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி தமிழ் இனத்தின் விடிவிற்காக தமிழ் மக்களின் ஜனநாயக முறைப்படி நடைபெறும் உரிமைக்கான அங்கீகாரத்திற்கு தங்கள் பேராதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம் என்றுள்ளது. |