-

24 ஜூன், 2025

செம்மணியில் தொடங்கியது அணையா விளக்கு போராட்டம்! Top News [Monday 2025-06-23 16:00]

www.pungudutivuswiss.com

மனிதப் புதைகுழிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத காரணத்தால் இந்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்திலும், அதனூடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒன்றிணைந்து 'அணையா விளக்கு' போராட்டத்தை இன்று  காலை 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பித்துள்ளனர்.

செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ். வளைவை அண்மித்த பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டத்தின்போது 1996இல் மறைந்த கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகநாதன் தலைமையில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டு, இதன்போது மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து மத தலைவர்களின் ஆத்ம உரைகள் இடம்பெற்றன.

மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

செம்மணி மண்ணில் புதையுண்டுபோனவர்களுக்கு நீதி வேண்டிய போராட்டமாக 'அணையா விளக்கு’ நடத்தப்படுகிறது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நாளையும் (24), நாளை மறுதினம் புதன்கிழமையும் (25) என மூன்று நாட்கள் அகிம்சை வழியில் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ad

ad