அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பயங்கரவாத தடைச்சட்டத்துடனான கைது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்வி- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 09 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுஹைல் என்ற இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பட்டமளிப்பு விழாவுக்கு கூட செல்ல முடியாத நிலைமை இந்த இளைஞனுக்கு ஏற்பட்டது. இந்த இளைஞன் தொடர்பில் சாட்சியங்கள் இல்லை, தற்போது விடுவிக்க முடியும் என்று தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைத்துள்ளார்.இந்த இளைஞனுக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூறுவது,? முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க துப்பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்.இருப்பினும் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.ஏனெனில் அவர் முஹம்மது துமிந்த திசாநாயக்க அல்லவே, இந்த நாட்டில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு மாத்திரமா பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பேசிய உங்களின் அரசாங்கம் தொடர்ந்து இந்த சட்டத்தை செயற்படுத்துவது நியாயமானதா,? இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முஸ்லிம் மற்றும் தமிழர்கள் மாத்திரம் கைது செய்யப்படுவதாக குறிப்பிடுவது தவறானது. அவ்வாறானதொரு நிலைப்பாட்டை சமூகமயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. இனத்தை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை. செயற்பாடு மற்றும் அதனுடனான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிடுவது இனத்தை அடக்கும் ஒரு செயற்பாடாக அது அர்த்தப்படுத்தப்படும்.அவ்வாறொன்றுமில்லை என்றார். மீண்டும் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், துப்பாக்கி விவகாரத்துக்காக தான் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.ஆனால் இந்த இளைஞன் தனது கைத்தொலைபேசியில் ஸ்டிக்கர் ஒன்றை வைத்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். மீண்டும் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர்,அண்மை காலமாக கைது செய்யப்பட்ட ஒருசிலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.இது இனத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையேதும் இல்லை. பொலிஸார் முன்வைக்கும் விடயங்களுக்கு அமைவாகவே தீர்மானம் எடுக்கப்படுகிறது. பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் இதர குற்றச்செயல்களின் போது நடைமுறையில் உள்ள சட்டத்தையே செயற்படுத்த வேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நாங்கள் செயற்பட்டிருந்தாலும், தற்போது அந்த சட்டம் உள்ளதால் அதனையே அமுல்படுத்த வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான பிறிதொரு சட்டம் இயற்றப்பட்டவுடன் ,நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து நாங்கள் குறிப்பிட்ட வாக்குறுதிகள் தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.புதிய சட்டம் இயற்றும் வரையில் நடைமுறையில் உள்ள சட்டம் செயற்படுத்தப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம்.நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கலாம்.இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம் என்றார். |