அதன்படி வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப்புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேசப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதிமுன்னுரிமை வழங்கவேண்டும் என வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும், மனித உரிமைகள் பேரவையின் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஜனநாயக தமிழரசுக்கட்சியின் தலைவர் கே.வி.தவராசா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் ஆகியோரும், மதத்தலைவர்கள் 11 பேரும், 115 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து அனுப்பியுள்ள இக்கூட்டுக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் ஒத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இயங்கிவரும் ஏனைய அமைப்புக்களுமான நாம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இக்கடிதத்தை எழுதுகிறோம். இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பவற்றுக்குக் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப்பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதம் தொடர்பில் மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னர் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் ஐக்கிய நாடுகள் சபை அடைந்த தோல்வியானது, இப்போது உலகளாவிய ரீதியில் எதேச்சதிகாரப்போக்கிலான பல நாடுகளின் அரசாங்கங்கள் தண்டனையிலிருந்து விடுபட்டு, மிகமோசமான குற்றங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் உங்களிடம் நாம் சில விடயங்களை வலியுறுத்த விரும்புகிறோம். அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது, இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த 16 ஆண்டுகளில் பொறுப்புக்கூறல் செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்படவில்லை என்ற விடயத்தை ஐ.நா பொதுச்சபை, ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா பாதுகாப்புச்சபை ஆகிய கட்டமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக்கோரி உறுப்புநாடுகளால் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும். அதேபோன்று உள்ளகப்பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்பையும் நேரத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். குறிப்பாக 'சுயாதீன குற்றப்பத்திர அல்லது சட்டவாதி அலுவலகத்தை' ஸ்தாபிப்பதே இலங்கையின் உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கிய நகர்வாக அமையும் என சிலர் முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் இலங்கையின் அரச கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பொறுப்புக்கூறல் செயன்முறையை நிறுவுவதற்கான தன்முனைப்பற்ற நிலையைக் கையாள்வதற்கு சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை நிறுவுவது மாத்திரம் போதுமானதன்று. அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின்' நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்பதுடன் அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் காலநீடிப்புச் செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும் அக்காலநீடிப்பானது குறித்து வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கானதாகவும், இலங்கையை ஐ.நா பொதுச்சபை, ஐ.நா பாதுகாப்புச்சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகிய கட்டமைப்புக்கள் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியதாகவும் அமையவேண்டும். அடுத்ததாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப்புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேசப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதிமுன்னுரிமை வழங்கவேண்டும். |