புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2025

சட்டவிரோத தடுப்பு முகாம் இருந்ததை ஒப்புக்கொண்டார் அட்மிரல் உலுகத்தென்ன! [Sunday 2025-08-03 18:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்

இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படியும் மேலும் பல சாட்சிகளின் பிரகாரமும் குறித்த சட்ட விரோத சிறையில் இரு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 60 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தததாக சி.ஐ.டி. யினர் விசாரணையில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சி.ஐ.டி. அதிகாரிகள் குறித்த 60 பேரும் யாரென அடையாளம் காண்பதற்கு, கடற்படை தளபதியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை பொல்க‌ஹகவல நீதிவானின் உத்தரவூடாக கோரியுள்ளனர். எனினும் அந்த தகவல்கலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட இதுவரை வழங்கவில்லையென சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பிலான விசாரணைகளில் ‘கன்சைட்’ எனும் நிலத்தடி வதை முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று நடாத்திய விசாரணைகளின் போது கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம அல்லது கேகாலை சாந்த‌, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரின் கடத்தல்கள் தொடர்பில் தகவல் வெளிப்பட்டன.

இந்நிலையில் கேகாலை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றின் பிரதிவாதியான சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் ‘கன்சைட்’ முகாமில் இருந்தமைக்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அது குறித்து கோட்டை நீதிவானுக்கு அறிக்கையும் சமர்பித்தனர்.

அவ்வாறான நிலையில் கேகாலை மேல் நீதிமன்ற பதிவாளரின் முறைப்பாட்டுக்கு அமைய கேகாலையைச் சேர்ந்த குறித்து தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. கேகாலை சாந்த சமரவிக்ரம, அலவ்வ பொலிஸாரால் கடந்த 2010 ஜூலை 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் போது தப்பியோடியதாக பொலிஸ் தரப்பில் அப்போது கூறப்பட்டது. எனினும் விசாரணையில் பொலிஸ் அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் அவரை ‘கன்சைட்’ முகாமில் சிறை வைத்து காணாமலாக்கியமை வெளிப்ப‌டுத்தப்பட்டது.

இந்நிலையில், இது குறித்த விசாரணைகளில் இதுவரை அலவ்வ பொலிஸ் நிலையத்தின் அப்போதைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாரும், கன்சைட் வதை முகாமின் பொறுப்பாளராக இருந்த கொமாண்டர் ரணசிங்க உள்ளிட்ட 5 கடற்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே கடந்த ஜூலை 28 ஆம் திகதி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது 2010 ஜூலை 23 ஆம் திகதி காணாமல் போன கேகாலை சாந்த அதிலிருந்து 6 மாதங்கள் வரை திருகோணமலை ‘கன்சைட்’ நிலத்தடி சித்திரவதை முகாமில் இருந்தமை சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்ப்ட்டது.

அதன்படியே, கடந்த 2010 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2013 வரை கடற்படை உளவுத்துறை பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை நடாத்தியது. இதன்போது தான் 2010 ஒக்டோபர் முதலாம் திகதி உளவுத்துறை பணிப்பாளராக கடமையேற்ற பின்னர், அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொண்ட எழுத்து மூல அனுமதிக்கு அமைய ‘கன்சைட்’ முகாமை பார்வையிட சென்ற‌தாக முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி.யினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு 40 முதல் 60 வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கன்சைட்’ என்பதை பதிவு செய்யப்பட்ட சிறைச்சாலை அல்ல என்பதையும், அது சட்ட விரோத தடுப்பு மையம் என்பதையும் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன ஏற்றுக்கொன்டதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கும் அறிவித்துள்ளனர்.

அதன்படியே, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தண்டனை சட்டக் கோவையின் 356,141,296,32,47 ஆகிய பிரிவின் கீழ் கடத்தல் மற்றும் சிறை வைப்பு, சட்டவிரோத கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருத்தமை, கொலை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட தண்டனைக் குரிய குற்றங்களை புரிந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த சட்ட விரோத செயலை அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க அறிந்திருந்ததாக சாட்சியங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரையும் அப்போது கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக இருந்த கொலம்பகேவையும் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர். முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய, கன்சைட் முகாமை பார்வையிட தான் என்ர போது, அங்கு விஷேட உளவுப் பிரிவு என ஒரு பிரிவு செயற்பட்டதாகவும், அது கடற்படையின் உளவுத் துறையால் வழிநடத்தப்பட்ட பிரிவு அல்ல என்பதை தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட பிரிவுக்கு, உளவுத் துறையுடன் தொடர்புபடாத கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி, கௌசல்யா ஆகிய கடற்படை வீர வீராங்கனைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பின்னர் தான் அந்த விசேட உளவுத்துறை பிரிவை கலைத்ததாகவும் நிஷாந்த உலுகேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடற்படை விசேட உளவுத்துறை தொடர்பிலும் சி.ஐ.டி. அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றது. கடந்த ஜூலை 30 ஆம் திகதி நிஷாந்த உலுகேதென்னவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும், முன் வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அடையாள அணிவகுப்பை இரத்துச் செய்தது. இந்த விவகாரத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு பொறுப்பாளராக இருந்த பாரதி, கடற்படையின் விஜேகோன் உள்ளிட்ட சாட்சியாளர்கள் அளித்துள்ள சாட்சியங்களின் பிரகாரம் இரு வெளிநாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது. அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதனிடையே, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் நாமல், சார்ஜன் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை கடற்படை உளவுப் பிரிவு அச்சுறுத்தும் வண்ணம் பின் தொடர்ந்த்துள்ளமை குறித்து பொல்கஹவல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் குறித்து கடற்படை வீரர் விஜேகோனின் சாட்சியத்தை மையபப்டுத்தி, பருத்தித் துறையை சேர்ந்த்த கரன், சரீதா எனும் கணவன் மனைவியிடம் சாட்சியம் பெற அவர்களை தேடி சி.ஐ.டி. குழு சென்ற போது கடற்படை உளவுப் பிரிவினர் அவர்களை பின் தொடர்ந்த்துள்ளனர். பருத்தித் துறையை சேர்ந்த குறித்த கணவன் மனைவி தற்போது சுவிட்சர்லாந்தில் வசிப்பது தெரியவரவே, சி.ஐ.டி.யினர் அவர்ள‌து வீட்டாரிடம் தகவல் பெற்று தொலைபேசியில் தொடர்புகொள்ள நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பின்னர் அவ்வீட்டுக்கு கடற்படையினர் சென்று விசாரித்துள்ளனர்.

இது குறித்து சி.ஐ.டி.யினர் தகவல் தெரிந்த பின்னர், சி.ஐ.டி.யினரை பிந்தொடர்ந்த கடற்படையினரை சி.ஐ.டி.க்கு அழைத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை பகுதிக்கு பொறுப்பான கடற்படை உளவுத் துறை பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டர் ரூபசிங்க என்பவரே சி.ஐ.டி.யை பிந்தொடர உத்டவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நீதிமன்றுக்கும் அறிவித்த விசாரணை அதிகாரிகள் ரூபசிங்கவை அழைத்து விசாரித்துள்ளனர். இதன்போது தனது முடிவுக்கு அமையவே தான் அவ்வுத்தர்வை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கடந்த ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் நிஷாந்த உலுகேதென்னவுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறித்த ரூபசிங்க எனும் லெப்டினன் கொமாண்டரும் அங்கு இருந்த நிலையில், இது குறித்து சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கும் அறிவித்துள்ளனர்.

இவ்வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன விளக்கமரியலில் வைக்கப்ப்ட்டுள்ளார். அத்துடன் மேலதிக விசாரணை முன்னேற்றத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி சமர்ப்பிக்க நீதிவான் சி.ஐ.டி.யினருக்கு அறிவித்துள்ளார்.

   

ad

ad